• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

தேர்தல் நிதி மோசடி குற்றச்சாட்டு: Reform UK கட்சித் தலைவரின் மூத்த உதவியாளர்கள் இருவர் பதவி விலகல்

Byadmin

Sep 6, 2026


இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவர் நைஜல் பராஜின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவரின் ஊடாக அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற்று நாட்டின் தேர்தல் சட்டங்களை அக்கட்சி மீறியதாக நடத்தப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Reform UK கட்சியின் வருடாந்த மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக Channel 4 ஊடகம் இந்த இரகசிய புலனாய்வுத் தகவலை வெளியிட்டது.

அக்கட்சியால் நடத்தப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் 30,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையைச் செலுத்த கட்சியின் இவ்விரு மூத்த பிரமுகர்களும் வழிவகை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தேர்தல் சட்டங்களின்படி வெளிநாட்டு நன்கொடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்செயல் தேர்தல் நிதி விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்துத் தொடர்புகளைக் கொண்ட அமெரிக்கப் பணக்கார நன்கொடையாளர்களைப் போல நடித்த ‘வெர்பேட்டிம்’ (Verbatim) புலனாய்வுக் குழுவினர், கடந்த ஒரு வருடமாக கட்சியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது நைஜல் பராஜுடன் மதிய உணவுச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. காலநிலை அறிக்கை மையத்தின் (Centre for Climate Reporting) பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்ட ‘வெர்பேட்டிம்’ அமைப்பின் இரகசியக் காணொளிகள் மற்றும் தகவல்களைத் தாம் சரிபார்த்துள்ளதாக ‘சேனல் 4’ உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, இடைத்தரகர் ஊடாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற முயன்ற குற்றவியல் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஆளும் தொழிற்கட்சி (Labour Party) பொலிஸாரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரியுள்ளது.

எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள Reform UK கட்சி, திட்டமிட்டு முன்னெடுத்த சதித்திட்டத்திற்கே தாம் பலியாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

By admin