கோவை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கியுள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று தொடங்கினார்.
காலையில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் சுவாமி கும்பிட்டு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடிய பழனிசாமி, மாலையில் மேட்டுப்பாளையம் காந்தி சிலை அருகில் இருந்து நகர பேருந்து நிலையம் வரை ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைசந்தித்தார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு பூரண கும்பம் ஏந்தியபடியும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வாகனத்தில் இருந்து பழனிசாமி பேசியதாவது: ‘மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் தரவில்லை, எதுவும் செய்யவில்லை’ என கீறல் விழுந்தரெக்கார்டு போல திரும்ப திரும்ப ஸ்டாலின் பேசுகிறார். இதே திமுக 1999-ல் பாஜக ஆட்சியில் கூட்டணியில் இருந்தார்கள். பிறகு காங்கிரஸ் ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்தார்கள். 16 ஆண்டுகள் திமுக அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள். ஆட்சி அதிகாரத்தை மத்தியில் பெற்றுக்கொண்டு கொள்ளை அடிப்பது திமுகவின் குறிக்கோள்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 52% மின் கட்டணத்தை உயர்த்தியது. 100 சதவீதம் வீட்டு வரியை உயர்த்தியது. கடைகளுக்கு 150 சதவீதம் அதிகரித்தனர். இதுதான் இன்றைய நிலை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்கள் வெளியே நடமாட முடியவில்லை.அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். மிசா சட்டத்தில் உங்களை கைது செய்த காங்கிரஸ் கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘‘பழனிசாமியின் பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது,‘‘திமுகவை வீட்டுக்கு அனுப்பும் உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்றார். பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக தொண்டர்களுடன், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
– டி.ஜி.ரகுபதி / இல.ராஜகோபால்