• Sat. Jul 26th, 2025

24×7 Live News

Apdin News

தேவநாதன் யாதவ் சொத்து பட்டியலில் இருந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் மாயமான குற்றச்சாட்டு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Allegations that 2000 kg of gold from Devanathan Yadav assets list has disappeared

Byadmin

Jul 26, 2025


சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற் பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், “தேவநாதன் யாதவுக்கு சொந்தமாக சுமார் 2 ஆயிரம் கிலோ தங்கம் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவரது சொத்துப்பட்டியலில் அந்த தங்கம் திடீரென மாயமாகியுள்ளது.

அந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் இருந்தாலே பாதிக்கப்பட்ட எங்களது பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட முடியும்” என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்துள்ள ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதில் பாதிக்கும் மேற்பட்ட சொத்துகள் வில்லங்க சொத்துகளாக உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பும் குறைந்து வருகிறது’’ என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டுதாரர்கள் அனைவரது நலனும் பாதுகாக்கப்படும், என உறுதியளித்ததுடன், ஜாமீன் மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.1-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினமே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.



By admin