பட மூலாதாரம், ANI
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஆர்சிபி.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரு போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றன. பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி-யும், ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் டைட்டன்ஸும் வென்றன. இரண்டு போட்டிகளிலுமே சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராகுல் திவாதியா 68 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் தோற்ற குஜராத் ஜெயின்ட்ஸ், நாளை (மே 27) ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எதிராக குவாலிஃபயர் 2 போட்டியில் மோதும். அந்தப் போட்டி வெள்ளிக்கிழமை (மே 29) நியூ சண்டிகரில் நடைபெறும். அந்த குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி ஆர்சிபி-க்கு எதிராக மே 31 ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
ஆர்சிபி அதிரடி தொடக்கம்
தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்திய குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள்.
முதல் ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்தார் வெங்கடேஷ் ஐயர். முதல் ஓவரிலேயே ஆர்சிபி 14 ரன்கள் எடுத்தது. ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்பிளேவில் ரபாடா வீழ்த்திய 18வது விக்கெட் அது.
2வது ஓவரிலேயே வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்திருந்தாலும் ஆர்சிபி அணியின் அதிரடி குறையவில்லை. தேவ்தத் படிக்கல், விராட் கோலி இருவருமே பவுண்டரிகளுக்கு அடித்து விளாசினார்கள். சிராஜ் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகள், ரபாடா வீசிய 4வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் ஒரு ஓவர்த்ரோ மூலம் 5 ரன்கள், ரபாடா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்… இப்படி பவர்பிளே முழுக்க ரன் குவிந்துகொண்டே இருந்தது.
அதனால், 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 76 ரன்கள் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
பட மூலாதாரம், ANI
மெல்ல எழுச்சி பெற்ற டைட்டன்ஸ்
ஆர்சிபி அணியின் அதிரடியான பவர்பிளேவின் காரணமாக, 6வது ஓவர் முடிவிலேயே டைம் அவுட் எடுத்தது டைட்டன்ஸ் அணி. அதன்பிறகு அவர்கள் மெல்ல எழுச்சி பெறத் தொடங்கினார்கள். ஹோல்டர் வீசிய 7வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட, எட்டாவது ஓவரில் ரஷீத் கானை அழைத்து வந்தார் ஷுப்மன் கில். அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
அதற்கு அடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆர்சிபி-யின் அதிரடிக்கு வேகத்தடையாக விளங்கினார் ஜேசன் ஹோல்டர். அவர் வீசிய ஷார்ட் பாலில் ‘இன்சைட் எட்ஜ்’ ஆகி போல்டானார் விராட் கோலி. 25 பந்துகளைச் சந்தித்த கோலி 43 ரன்கள் எடுத்தார். அடுத்த இரண்டாவது பந்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த மற்றொரு பேட்டரான படிக்கல் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஹோல்டர். விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
அடுத்தடுத்த விக்கெட்டுகளால் ஆர்சிபி அணி நெருக்கடிக்குள்ளானது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 99/3 என்ற நிலையில் இருந்தது. பவர்பிளே முடிந்தபோது 12.66 ஆக இருந்த அந்த அணியின் ரன்ரேட், 10வது ஓவர் முடிவில் 9.9 ஆகக் குறைந்தது. முதல் முறையாக அந்த அணியின் ரன்ரேட் 10-கும் குறைவாகச் சென்றது.
மிரட்டிய பட்டிதார் – குருனால் ஜோடி
பட மூலாதாரம், ANI
நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதார் – குருனால் பாண்டியா ஜோடி ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றத் தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அந்த நெருக்கடியை உணராமல் அவர்கள் தொடர்ச்சியாக பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்தார்கள்.
முதல் 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த குருனால் பாண்டியா, அதன்பிறகு பெரிய ஷாட்கள் ஆடத் தொடங்கினார்.
13வது ஓவரில் இரண்டு முறை ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பட்டிதாருக்கு டாப் எட்ஜ் ஆகி கீப்பருக்குப் பின்னால் சென்றது. ஆனால், வெகுதூரம் ஓடிச் சென்ற கீப்பர் பட்லர் மற்றும் கெஜ்ரோலியா இருவராலும் பிடிக்க முடியவில்லை. அதே ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன்பிறகு பட்டிதாரையும் டைட்டன்ஸால் தடுக்க முடியவில்லை.
குறிப்பாக கெஜ்ரோலியா வீசிய 15வது ஓவர் ஆட்டத்தில் பெரிய திருப்புமுணையாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் 2 நோ பால்கள் வீசினார். அதுபோக, 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களும் அடிக்கப்பட, அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபி அணி 28 ரன்கள் எடுத்தது. ரஷீத் கான் வீசிய அடுத்த ஓவரிலும் அந்த அதிரடி தொடர்ந்தது. அந்த ஓவரில் பட்டிதார் 2 சிக்ஸர்கள், குருனால் 1 சிக்ஸர் என்றடிக்க 21 ரன்கள் கிடைத்தது.
17வது ஓவரை வீசிய ரபாடா 43 ரன்கள் (28 பந்துகளில்) எடுத்திருந்த குருனால் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், அதே ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்ததோடு தன் அரைசதத்தையும் நிறைவு செய்தார் பட்டிதார்.
கடைசி 3 ஓவர்களிலும் அவர் அதிரடி தொடர, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். 281.81 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர் 5 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்.
பேட்டிங்கில் சொதப்பிய குஜராத் டைட்டன்ஸ்
மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. வேகமாக 3 பவுண்டரிகள் எடுத்த சாய் சுதர்ஷன் எதிர்பாராத விதமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க முற்பட்டபோது, அவரது கையில் இருந்து நழுவிச் சென்ற பேட் ஸ்டம்புகளின் மீது விழுந்தது. அவர் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மூன்றாவது ஓவரில் சாய் சுதர்ஷன் வெளியேற, நான்காவது ஓவரில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் போல்டான கில் 7 பந்துகள் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், அதிரடியாக ஆடத் தொடங்கினார் ஜாஸ் பட்லர். ஹேசில்வுட் ஓவரில் 4, 6, 4 என அடுத்தடுத்து விளாசிய பட்லர் அதற்கடுத்த பந்திலேயே போல்டானார். அவர் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
ஆனால், டைட்டன்ஸின் விக்கெட் வீழ்ச்சி அதோடு நிற்கவில்லை. ராசிக் தார் வீசிய 6வது ஓவரில் நிஷாந்த் சிந்து மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவருமே ஆட்டமிழந்தார்கள். அதனால் பவர்பிளே முடிவில் 51 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது டைட்டன்ஸ். அந்த அணியின் வரலாற்றில் அவர்கள் பவர்பிளேவிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல் முறை.
அதன்பிறகும் அவர்களால் ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைக்க முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரஷீத் கானை ஜேக்கப் டஃபி வெளியேற்றினார். குருனால் பாண்டியா வீசிய பவுன்சரில் வெளியேறினார் ரபாடா. அதனால் 11.2 ஓவர்களில் 88/8 என தடுமாறியது டைட்டன்ஸ்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்க ராகுல் திவாதியா மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 43 பந்துகள் சந்தித்து 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குஜராத் டைட்டன்ஸ்.
92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தப் போட்டிக்கான ஆர்சிபி பிளேயிங் லெவனில் சுயாஷ் ஷர்மாவுக்குப் பதிலாக, ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து மீண்டதாகக் கூறப்பட்ட தொடக்கவீரர் ஃபில் சால்ட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அவர் இந்தப் போட்டியில் சப்ஸ்டிட்யூட் பட்டியலில் கூட இடம்பெறவில்லை. ஆர்சிபி பந்துவீசியபோது ரொமாரியோ ஷெபர்ட் இம்பேக்ட் பிளேயராகக் களமிறக்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஹித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ராசிக் தார், ஜாஷ் ஹேசில்வுட், ஜேக்கப் டஃபி.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ரொமாரியோ ஷெபர்ட், சுயாஷ் ஷர்மா, அபிநந்தன் சிங், ஜோர்டான் காக்ஸ், கனிஷ்க் சௌஹான்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. அர்ஷத் கான் நீக்கப்பட்டது மற்றொரு இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷத் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்த சீசனில் கெஜ்ரோலியா விளையாடிய முதல் போட்டி இதுதான். குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தபோது ராகுல் திவாதியா இம்பேக்ட் பிளேயராகக் களமிறக்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரசித் கிருஷ்ணா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அனுஜ் ராவத், ராகுல் திவாதியா, கிளென் ஃபிலிப்ஸ், குமார் குஷாக்ரா, சாய் கிஷோர்.