பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்து கிட்டத்தட்ட 5 அண்டுகள் அதாவது 1,787 நாட்கள் ஆகிவிட்டன. இந்திய கிரிக்கெட்டில் கோலி, ரோஹித் ஆகியோரின் யுகங்கள் முடிந்து தற்போது கில் யுகமும் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் மகேந்திர சிங் தோனி இன்றும் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் கோலோச்சியுள்ளனர். சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் அடையாளத்துக்கு ஏங்கிய இளம் இந்தியர்களின் ஏக்கத்துக்கு கவாஸ்கரின் போர்க்குணம் ஒரு வடிகாலாக இருந்தது. போராடியது போதும், வெற்றிதான் மரியாதை என புழுங்கி தவித்த இளைஞர்களுக்கு கபில்தேவின் உலகக் கோப்பை ஒரு புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது. உலகமயமாதலுக்கு பிறகு எழுச்சி கண்ட மத்திய தர வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக இளம் மேதையான சச்சினின் உச்சம் அமைந்தது.
ஆனால், முன்னத்தி ஏர்களான இவர்கள், தோனி தற்போது எட்டியுள்ள உச்சத்தை ஓய்வுக்குப் பிறகும் தக்க வைத்தார்களா என்பது விவாதத்துக்குரிய கேள்வி. தொடர்ந்து ஐபிஎல் விளையாடுவதும் சமூக ஊடகங்களின் பரவலும் ஒரு காரணம் என்ற போதிலும், தோனியின் வீச்சைப் புரிந்துகொள்வதற்கு அவை மட்டுமே போதாது.
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் இதழியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவமுள்ள ஆர். மோகனிடம் இதுகுறித்து பேசிய போது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு உள்ள ‘கரிஷ்மா'(Charisma), வேறு எவருக்கும் இருந்ததில்லை என்கிறார்.
“கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கோலி போன்றவர்களுக்கு அவர்களுடைய ஆட்ட வாழ்வின் உச்சத்தில்தான் இப்படிப்பட்ட ‘கரிஷ்மா’ இருந்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகளாகியும் தோனி இன்னும் கொடிகட்டிப் பறக்கிறார். இந்தப் புகழை தக்க வைப்பதற்காக தோனி பெரிதாக எதுவும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் இங்கு சுவாரஸ்யமே. தோனியின் கரிஷ்மாவுக்கு முன்மாதிரி என்று கிரிக்கெட்டில் கீத் மில்லர், விவியன் ரிச்சர்ட்ஸ், சலீம் துரானி என ஒரு சிலரையே சொல்ல முடியும்” என்கிறார்.
தெளிவான அரசியல் பார்வை
கிரிக்கெட்டும் அரசியலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றுதான் சொல்ல முடியும். காந்தி கிரிக்கெட்டை வேண்டாம் என்று ஒதுக்கியதற்கும் நேரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்ததற்கும் அரசியல் காரணங்கள் இருந்தன.
சமீப ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றின் போது சச்சின், கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட போது தோனி கருத்து ஏதும் கூறாமல் அமைதி காத்தார். அதேசமயம் தேசப் பாதுகாப்பு, ராணுவம் என்று வரும்போது தோனி தன் நிலைப்பாட்டை வலுவாக முன்வைப்பவராக இருந்துள்ளார். இந்திய ராணுவத்தில் தோனி கௌரவ லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், ராணுவ சின்னம் (Camouflage) பொறித்த தொப்பியை அவர் தலைமையிலான வீரர்கள் அணிந்து விளையாடியது ராணுவம் மீதான அவருடைய ஈடுபாட்டுக்கு ஒரு சான்று.
“தோனிக்கு அரசியல் அபிலாசைகள் என்று எதுவும் கிடையாது. அரசியல் நெருக்கடிகள் நிச்சயம் அவருக்கும் இருந்திருக்கும். ஆனால், எதைப் பற்றியும் அவர் கண்டுகொள்வதில்லை. தோனி போன்ற விசித்திரமான குணாதிசயம் கொண்ட வீரர்கள் வரலாற்றில் மிகவும் சொற்பம்.” என்கிறார் ஆர். மோகன்.
பட மூலாதாரம், Getty Images
மேன் மேனேஜ்மெண்ட் தெரிந்த கேப்டன்
கிரிக்கெட்டில் மேன் மேனேஜ்மெண்ட் தெரிந்த கேப்டன்கள் மட்டுமே உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மன்சூர் அலிகான் பட்டோடி தொடங்கி இங்கிலாந்தின் மைக் பிரயர்லி என நிறைய உதாரணங்கள் உண்டு. தோனி அந்த வகைமையில் வைத்து மதிப்பிடத்தக்க ஒரு கேப்டன். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கண்டிப்பு காட்டியோ மென்மையாகவோ வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நுட்பம் கைவரப்பெற்றவராக தோனி இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்து, அவரை ஒரு வெற்றிகரமான தொடக்க பேட்ஸ்மேனாக மாற்றினார். கோலியை தனக்கு பிறகு அணியை வழிநடத்தும் பொறுப்பான கேப்டனாக அவரை வார்த்தெடுத்தார்.
இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவருடைய தலைமைத்துவத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்தன. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய கேப்டன்சியில் இந்தியா தரவரிசையில் முதலிடத்தை பிடித்தாலும், SENA நாடுகள் என்று சொல்லப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பெரிதாக சாதிக்கவில்லை. தோனிக்கு தொடக்கத்தில் இருந்தே டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததில்லை என்கிறார் ஆர். மோகன்.
“வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தோனி தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன். ஆனால், டெஸ்ட்டில் தாக்குதல் பாணி கேப்டன்சியை அவர் கடைசிவரையில் கையில் எடுக்கவில்லை. தோல்வியை தவிர்ப்பதே அவருடைய பிரதான நோக்கமாக இருந்தது. அவருக்கு பின்னர் வந்த கோலி போலவோ, அவருக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்த கங்குலி போலவோ அவர் ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடியதில்லை. ரெய்னா போன்ற அவருடைய நெருங்கிய சகாக்களை கூட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான முறையில் தயார்படுத்தவில்லை.” என விமர்சிக்கிறார் ஆர். மோகன்.
பட மூலாதாரம், Getty Images
ஆர். மோகனின் விமர்சனத்தை ஆமோதிக்கும் விதமாக, தோனி குறித்த தனது மதிப்பீட்டை நம்மிடம் முன்வைத்தார் ஹைதராபாத் முன்னாள் வீரரும் Third Man: Recollections from a Life in Cricket புத்தகத்தின் ஆசிரிருமான ராம் நாராயண்.
“டெஸ்ட் போட்டியின் போது சாதகமாக எதுவும் அமையாவிட்டால் தோனிக்கு சீக்கிரமே ‘போர்’ (bore) அடித்துவிடும். அவருக்கு முந்தைய கேப்டன்களான டிராவிட், கும்ப்ளே இருவரும் ஆக்ரோசமான கேப்டன்சியை கைகொண்டிருந்தனர். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்” என்கிறார்.
மரபை மீறிய ஆட்டம்
தோனி கிரிக்கெட்டின் மரபார்ந்த இடங்கள் என கருதப்படும் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வந்தவர் அல்லர். அவருடைய ஆட்ட பாணியும் மரபை மீறிய ஒன்றாகவே இருக்கிறது. அவருடைய ஆக்ரோசமான பேட்டிங் கடந்த கால வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களை நினைவூட்டக் கூடியது.
வலதுகையை (Bottom Hand) பிரதானமாக வைத்து மணிக்கட்டை திருப்பி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்கள், நவீன கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஷாட்களில் ஒன்று என வர்ணிக்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ஜரோட் கிம்பர்.
தோனியின் விக்கெட் கீப்பிங்கும் மரபை மீறிய ஒன்றுதான். தோனியின் விக்கெட் கீப்பிங் சங்ககாரா போன்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் நேர்மாறானது (antithesis) என்று மதிப்பிடும் கிரிக்கெட் வர்ணனையாளர் மார்க் நிக்கோலஸ், தோனியின் தலைமைத்துவத்தை ஜூலியஸ் சீசருக்கு இணையானது என புகழாரம் சூட்டுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறனுள்ள பேட்ஸ்மேன்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. தோனி அதனுடைய தொடர்ச்சி தான் என்கிறார் ராம் நாராயண்.
“தோனி தான் இந்தியாவின் முதல் அதிரடி விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் என எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் இந்திய அணியில் ஃபரூக் இஞ்சினியர், பூதி குந்தேரன் என ஆக்ரோசமாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். தோனியை போலவே வேகப்பந்து வீச்சை அடித்து விளையாடுவதில் அவர்கள் இருவரும் விற்பன்னர்கள். அவர்களின் தொடர்ச்சி தான் தோனி.” என்றார்.
ஆனால், விக்கெட் கீப்பிங் என்று வரும்போது, தோனி எதுமாதிரியும் இல்லாத ஒரு முன்மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் அவர்.
“பொதுவாக விக்கெட் கீப்பர்கள் பந்தை கையை பின்னால் இழுத்துதான் வாங்குவார்கள். அப்படித்தான் பயிற்சி கையேடுகள் சொல்லிக்கொடுக்கின்றன. ஆனால், தோனி பந்தை வாங்கி, கையை பின்னிழுக்காமல் அப்படியே ஸ்டம்பிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குறிப்பாக, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவருடைய கீப்பிங் அசாத்தியமானது. அவர் பேட்டிங்கின் போது மட்டுமல்ல கீப்பிங்கின் போதும் மூளையை பயன்படுத்தக்கூடியவர்” என புகழாரம் சூட்டுகிறார் ராம் நாராயண்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ் மக்கள் அன்புக்குக் காரணம் என்ன?
தோனியின் பூர்வீகம் உத்தராகண்ட். பிறந்து வளர்ந்தது ஒன்றுபட்ட பிஹார். இப்போது ஜார்கண்ட்டில் ராஞ்சிவாசி. ஆனால், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீகாந்த், அஸ்வின், முரளி விஜய் போன்றவர்களை விட சென்னையில் தோனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தோனியின் பிரபல்யத்துக்கு நிகராக கோலி கூட வரமுடியாது. தோனியை தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு ஒரு முக்கியப் பங்குள்ளது என்கிறார் ராம் நாராயண்.
“கோலியை நாம் தோனியுடன் ஒப்பிடவே முடியாது. தோனி சிஎஸ்கேவுக்கு வரும் போதே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன். கோலிக்கும் பெங்களூருவில் ரசிகர் பட்டாளர் இருக்கிறது என்றாலும் அது தோனிக்கு நிகரானது அல்ல. தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்துபோய்விட்டால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். சோசியல் மீடியா யுகம் வேறு என்பதால், அவருடைய வீச்சு எங்கேயோ சென்றுவிட்டது. அதேநேரம், சிஎஸ்கே அணி தோனியை திட்டமிட்டு வளர்த்தெடுத்தது என்பதையும் மறக்கக் கூடாது.
தோனியின் அமைதி, எளியவர்களிடம் அவர் பழகும் விதம், அவருடைய தன்னடக்கம் போன்றவை தமிழ் மக்களின் அன்புக்குரியவராக அவரை மாற்றின. அதிகம் பேசாத வசீகரமானவர்கள் மீது மக்களுக்கு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. இந்த விஷயத்தில் தோனியை முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியுடன் ஒப்பிடலாம். தோனியை போலவே பட்டோடியும் அதிகம் பேசாதவர். ஆனால் அவர் அருகில் இருந்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி நம்மை சூழ்ந்துகொள்ளும்” என்கிறார் ராம் நாராயண்.
பட மூலாதாரம், Getty Images
விளிம்பில் இருந்து மையத்துக்கு வருபவர்களின் மேல் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இருக்கும் அன்புக்கு உதாரணம் தோனியின் வெற்றி. கவாஸ்கரை காட்டிலும் தங்களில் ஒருவரான கபில்தேவ்தான் தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடப்பட்டார். 2000-ல் சூதாட்ட புகார் இந்திய கிரிக்கெட்டின் குரல்வளையை நெரித்தபோது ஒரு மீட்பருக்கான தேவை ஏற்பட்டது. அதனை வரலாற்று ரீதியாக மையத்தில் இருந்து விளிம்புக்கு நகர்த்தப்பட்ட வங்கத்தின் கங்குலி இட்டு நிரப்பினார்.
கிரிக்கெட் மந்த்லி இதழில் தோனி பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் கார்த்திக் கிருஷ்ணசுவாமி, “கமல் எவ்வளவுதான் திறமையாளராக, வெளிப்படையானவராக இருந்தாலும், அதிகம் பேசாத ரஜினி மீதுதான் தமிழர்களுக்கு பற்று அதிகம். அந்த வகையில், தோனியை ரஜினி வகைமையிலும் தமிழ் ரசிகர்கள் வைத்துப் பார்க்கிறார்கள்” என்கிறார்.
பிரபலங்கள் மீதான தமிழ் மக்களின் விருப்பத்தின் தொடர்ச்சிதான் தோனியின் ஏற்பு என நுட்பமான பார்வையை முன்வைக்கிறார் எழுத்தாளர் அரவிந்தன்.
“நேரு, இந்திரா காந்தி, அமிதாப், எம்ஜிஆர், ரஜினிகாந்த், ஷாருக்கான், என்று வெற்றிபெற்ற பிரபலங்கள் மீது தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு பிடிப்பு உண்டு. தமிழர்களுக்கு பிற மொழியாளர்கள் மீது என்றைக்கும் வெறுப்பு இருந்ததில்லை.
தோனியை ஒரு ஷோமேன் (Showman) என்று சொல்லலாம். இயல்பாகத் தான் அவர் எப்போதும் இருக்கிறார். ஆனால் மக்களுக்கு பிடித்ததை, சரியான நேரத்தில் மிகவும் நுட்பமாக செய்து அவர்களின் அன்பை பெற்றுவிடுகிறார். இதை நேர்மறையான கண்ணோட்டத்தில் தான் சொல்கிறேன். மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட தலைவர்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டுமே இந்த திறமை வாய்க்கும். எம்ஜிஆரையும் ரஜினிகாந்தையும் போல.” என்கிறார் அவர்.
உச்சம் தந்த சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர வேறு எந்த அணிக்காக விளையாடி இருந்தாலும் தோனி இவ்வளவு உச்சத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் அரவிந்தன்.
“தமிழ் ரசிகர்களுக்கு திறமையான கிரிக்கெட் வீரர்களை விட தங்களில் ஒருவராக, தங்களைப் பிரதிபலிக்கும் வீரர்கள் மீதுதான் அபிமானம் அதிகம். கபில்தேவ் போன்றவர் மீதான அதீதமான பாசத்தின் தொடர்ச்சி தான் தோனி மீதான கவர்ச்சி. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ரசிகர்களை பார்க்க முடியாது” என்கிறார் அவர்.
இந்திய கிரிக்கெட் என்பது அடிப்படையில் நகரங்களின், நகரவாசிகளின் கிரிக்கெட்டாகத்தான் நீண்டகாலம் இருந்தது. கபில் தேவ் போல ஒரு சிலர் அத்திபூத்தாற் போல நுழைந்தாலும் புத்தாயிரத்தின் தொடக்கம் வரை, அது பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. இந்தியாவில் ஜார்கண்ட் போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் இருந்து உச்சத்துக்கு சென்ற முதல் நவீன கிரிக்கெட் நட்சத்திரம் என்று தோனியையே சொல்ல முடியும்” என்கிறார் சசி தரூர்.
தோனியை முன்மாதிரியாக வைத்துதான், பின்தங்கிய பிராந்தியங்களில் இருந்து நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு படையெடுக்கத் தொடங்கினர். ஒருவகையில் ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் தீப், துருவ் ஜுரெல் போன்றவர்களின் ‘ரோல் மாடல்’ தோனிதான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு