மதுரை: போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது தாக்கியதில் கொலையானார். இவர் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா, அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே 2011-ல் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் சிக்கியவர்கள் என தெரியவந்துள்ளது.
அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை விவரம் வருமாறு: மதுரை திருமங்கலம் அருகில் உள்ள பச்சக்கோப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் ஆகியோர் 2011 மே 10-ம் தேதி அப்போதைய மதுரை எஸ்பியிடம் புகார் ஒன்றை கொடுத்தனர்.
அதில், ஆலம்பட்டி ஜேபி கார்டன் சிவகாமி அம்மாள், அவரது கணவர் ஜெயபெருமாள், இவர்களது மகன் ஜேபி கவியரசு, இவரது மனைவி சுகதேவி, ஜெயபெருமாள் மகள் ஜேபி நிகிதா, விளாங்குடி பகத்சிங் ஆகியோர் எங்களது குடும்ப உறவினர்கள். 2010-ல் எங்களை தொடர்பு கொண்டனர்.
கவியரசுவுக்கு துணை முதல்வரின் பி.ஏ தெரிந்தவர். இவர் மூலம் தெய்வத்துக்கு ஆசிரியர் பணி வாங்கி கொடுக்க ரூ.9 லட்சமும், வினோத்குமாருக்கு விஏஓ வேலை வாங்கி தருவதற்கு ரூ.7 லட்சமும் கொடுத்தால் 15 நாட்களில் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறினர்.
2010-ல் கவியரசுவிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சம் கொடுத்தோம். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை கேட்டபோது பகத்சிங் போனில் பேசி மிரட்டினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகாமி அம்மாள், அவரது கணவர் ஜெயபெருமாள், மகன் கவியரசு, இவரது மனைவி சுகதேவி, ஜெயபெருமாள் மகள் நிகிதா, விளாங்குடி பகத்சிங் ஆகியோர் மீது திருமங்கலம் தாலுகா போலீஸார் 2011-ல் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது இவ்வழக்கு மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் ஏற்கெனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.