3
‘ஒரு நொடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தில் தமன் அக்சான் , மால்வி மல்கோத்ரா, மைத்ரேயா, சிவம் , அருண் கார்த்திக், காளி வெங்கட், முனீஸ் காந்த், வேல. ராமமூர்த்தி, ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லரான இந்த திரைப்படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேபிள் சங்கர் , ஈரோடு மகேஷ் , ஜோதிடர் பரணி பால்ராஜ், இயக்குநர்கள் மீரா கதிரவன் – லோகேஷ்- அறிவழகன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் தமன் பேசுகையில், ” கிளாசிக்கான ஹாரர் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உலக அளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ என பல புகழ்பெற்ற ஆங்கில ஹாரர் திரைப்படங்கள் பிடிக்கும். அந்த வகையில் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் ஹொலிவுட்டில் வெளியான ‘ஓமன் ‘ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக இருக்கும்.
‘ஒரு நொடி’ படத்தின் உச்சகட்ட காட்சி எப்படி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்ததோ… அதேபோல் இந்த ஜென்ம நட்சத்திரம் படத்தின் உச்சகட்ட காட்சியும் பரபரப்பாக அமைந்திருக்கிறது. படம் வெளியான பிறகு இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். ‘ஒரு நொடி’ படத்தை விட இந்தத் திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் ”என்றார்.