பட மூலாதாரம், NASA/JPL-Caltech
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும்.
நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியின் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.
இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன?
இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம்.
1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்?
பட மூலாதாரம், NASA
நாசாவும் இஸ்ரோவும், நிசார் திட்டத்தை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும்.
நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம்,
- நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும்
- பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம்
- காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும்
- வளர்ச்சி அல்லது காடழிப்பு போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க முடியும்
நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது.
2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன?
பட மூலாதாரம், NASA
செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை.
வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது.
இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது.
ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும்.
இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, “பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்,” என்று தெரிவித்துள்ளார்.
3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்?
பட மூலாதாரம், NASA/JPL-Caltech
சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பி படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது.
இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அன்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம்.
இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை.
எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை ‘செயற்கை’ துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம்.
இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது.
4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்?
பட மூலாதாரம், Getty Images
இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும்.
இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும்.
“விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்,” என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ்.
நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும்.
இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.
5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன?
நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது.
கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது.
மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.
நிசார் திட்டம், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும்.
இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு