கடந்த ஜூலை 17 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து சனாவில் உள்ள உள்ளூர் நிர்வாகத்துடன் இந்திய அரசு தொடர்பில் இருப்பதாக” கூறினார்.
சனா ஏமனின் தலைநகரம். நிமிஷா வழக்கில் இந்த பிராந்தியத்துடன் நட்புறவு கொண்ட நாடுகளையும் தொடர்பு கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனாவில் உள்ள ஹூத்தி நிர்வாகம் தவிர, ஹூத்திகள் மீது செல்வாக்கு செலுத்தும் சௌதி அரேபியா, இரான் மற்றும் அருகிலுள்ள பிற நாடுகளுடனும் இந்தியா தொடர்பில் இருப்பதாக இந்தியாவின் ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.
“இது ஓர் உணர்வுபூர்வமான விஷயம், இதில் இந்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. நாங்கள் சட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். மேலும் நிமிஷா குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளோம். இந்த விஷயத்தை தீர்க்க ஏமனின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். நிமிஷாவின் குடும்பத்திற்கு அதிக அவகாசம் அளிக்க நாங்கள் முயல்கிறோம்” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இருப்பினும், ஏமன் உடனான இந்தியாவின் தூதரக உறவுகள் வலுவாக இல்லை. நிமிஷாவின் மரண தண்டனையைத் தடுப்பதில் அதனால்தான் பிரச்னைகள் எழுகின்றன என்று அரபு ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். அரபு செய்தி ஊடகம் ஒன்றின்படி, “குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அப்துல் ஃபத்தா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?
பட மூலாதாரம், @MEAIndia
படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
“ஏமனில் இந்தியாவின் தூதரக இருப்பு மிகவும் குறைவு. அதுதான், நிமிஷா பிரியா விஷயத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால். ஹூத்திகளின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு மிகக் குறைந்த வழிகள் மட்டுமே உள்ளன.
பழங்குடி மற்றும் மதத் தலைவர்கள் மூலம் நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற இந்தியா முயல்கிறது. கடைசி நேரத்தில், இந்தியாவின் கிராண்ட் முப்தி மூலம் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஆபத்து இன்னும் முடிவடையவில்லை” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செய்தி ஊடகமான ‘கல்ஃப் நியூஸ்’ கூறியுள்ளது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கான தேதி ஜூலை 16ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டது.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி செய்து வரும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’, “ஜூலை 14 திங்கட்கிழமை, கேரளாவின் மரியாதைக்குரிய மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதத் தலைவரான கிராண்ட் முப்தி ஏபி அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு குறித்து ‘ஏமனின் சில ஷேக்குகளுடன்’ பேசியதாக” கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூறியது.
இந்த உரையாடலுக்குப் பிறகு, ஜூலை 16ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு தனது தொழில் பங்குதாரர் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், ஏமனில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தால் நிமிஷா பிரியாவுக்கு 2020ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவர்தான், நிமிஷா பிரியாவின் அந்தத் தொழில் பங்குதாரர். நிமிஷா ஏமனின் அல்-பைதா பகுதியில் அப்தோவுடன் இணைந்து ஒரு கிளினிக் நடத்தி வந்தார். அப்தோவின் உடல் வெட்டப்பட்ட நிலையில், ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம், “ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்று முன்னர் கூறியிருந்தார்.
அரபு செய்தி ஊடகமான அல்-யேமன்-அல்-காட் தனது செய்தியில், “ஏமனின் ஷரியா சட்டப்படி, நிமிஷாவின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு குருதிப் பணமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8.5 கோடி) வரை வழங்க முன்வந்தனர். ஆனால் எந்தத் தீர்வையும் எட்ட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
அல்-யேமன்-அல்-காட் செய்தியின்படி, “நிமிஷாவை காப்பாற்றுவதில் பல முக்கியமான மத அறிஞர்களும் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏமனின் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸும் அடக்கம். இந்திய அரசும் தூதரக மட்டத்தில் முயன்று வருகிறது. ஆனால் ஹூத்திகளுடன் நல்லுறவு இல்லாத காரணத்தால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. நிமிஷா பிரியா வழக்கு இனி ஒரு சாதாரண குற்றச் சம்பவம் அல்ல. சட்டம், பாரம்பரியம், அரசியல், மதம் என அனைத்தும் இதில் கலந்துள்ளது.”
அரபு செய்தி இணையதளமான அல்-குட்ஸ் தனது செய்தியில் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தியின் பேஸ்புக் பதிவைக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, புதன்கிழமை அப்துல் ஃபத்தா வெளியிட்ட ஒரு பதிவில், “மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தையில் புதிதாகவோ அல்லது ஆச்சரியம் ஏற்படுத்தக் கூடியதாகவோ எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக, இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். இதைத் தவிர, எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “துரதிர்ஷ்டவசமாக மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சமரசம் செய்துகொள்ள முடியாது என மறுத்துவிட்டோம் என்பது நீதிமன்றத்திற்குத் தெரியும். குற்றவாளி மரணிக்கும் வரை எங்கள் முயற்சிகள் தொடரும். எந்த அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லை. எங்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதமாகலாம். ஆனால் நாங்கள் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்” என்றும் அப்துல் ஃபத்தா மஹ்தி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அல்-குட்ஸ் செய்தி கூறுகிறது.