-
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என போராடி வரும் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழுவின் உறுப்பினர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
அதே சமயம், மரண தண்டனை ரத்து செய்யப்படாமல், ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்பதால், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் தொடக்கம் முதல் தற்போது வரை முக்கிய பங்கு வகித்து வரும் நபர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.
சாமுவேல் ஜெரோம்- ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாள்பவர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம், பல வருடங்களாக ஏமனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏமனில் ஒரு தனியார் நிறுவனத்தில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். ஏமனில், நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவர் (Power of attorney).
பிபிசி தமிழிடம் பேசிய சாமுவேல் ஜெரோம், “2017இல் மஹ்தி கொல்லப்பட்ட பிறகு, நிமிஷாவின் பாஸ்போர்ட் புகைப்படமும், மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடலின் புகைப்படமும் வாட்ஸ்ஆப்-இல் பரவத் தொடங்கியது. ஏமனில் நிமிஷாவிற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது நான் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி-இல் இருந்தேன். ஏமனின் சனாவிற்கு வந்தபிறகு, நிமிஷா குறித்து விசாரிக்கத் தொடங்கினேன்.” என்றார்.
2017இல் இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டபோது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் இருந்த இந்திய தூதரகம் செயல்படவில்லை.
“நிமிஷா கைது செய்யப்பட்டவுடன் ஏமனைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர்தான் எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த விஷயத்தில் நீங்கள் இந்திய அரசை அணுகவில்லை என்றால், நிமிஷாவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறாது என்று கூறினார், இதையடுத்து அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன்.” என்று சாமுவேல் கூறுகிறார்.
அதன் பிறகு, ”அமைச்சர் வி.கே.சிங், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி-இல் உள்ள இந்திய தூதரக முகாம் மூலமாக ஒரு கடிதத்தை (Note Verbale) ஏமனுக்கு அனுப்பிவைத்தார். அதைக் கொண்டுபோய் ஹூத்திகளின் வெளியுறவு அமைச்சகத்திடம் கொடுத்தோம். அதன் பிறகே நிமிஷா வழக்கில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்றது” என்கிறார் சாமுவேல்.
ஏமனில் ஷரியா சட்டத்தின்படி, மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நிமிஷாவின் குடும்பத்தினர் சாமுவேலுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.
“2018இல்தான் நிமிஷாவிடம் முதல்முறையாக பேசினேன். அவரது தரப்பு வாதமும் கேட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, ஒரு இந்தியரின் உயிர் அந்நிய தேசத்தில் போகக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நிமிஷாவிடம் பேசினேன். அவர் என்ன நடந்தது என்பதை 14 பக்க கடிதத்தில் எனக்கு எழுதி கொடுத்தார். அதை அடிப்படையாகக் கொண்டே ஊடகங்களிடம் பேசினேன்.” என்கிறார் சாமுவேல்.
நிமிஷாவின் மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது, மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அதிக அவகாசம் அளித்துள்ளதைக் குறிப்பிட்ட சாமுவேல், “மஹ்தியின் குடும்பத்தினர் தரப்பு நியாயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா ஒரு குற்றவாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஷரியா சட்டத்தில் வழி இருப்பதால் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இன்னும் அவர்கள் மன்னிப்பு வழங்க ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம்” என்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார்.
சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்
பட மூலாதாரம், Deepa/Facebook
“2019இல், இந்த வழக்கைப் பற்றி செய்தித்தாள் ஒன்றில் படித்தேன். அந்தச் செய்தியை அமைதியாக கடந்து செல்ல முடியவில்லை. உள்நாட்டுப் போர் நடக்கும் நாட்டில் மாட்டிக்கொண்ட ஒரு இந்தியப் பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்தேன். அவருக்கு முறையான சட்ட உதவிகள் ஏமனில் கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது” என்கிறார் வழக்கறிஞரும், சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின் துணை தலைவருமான தீபா ஜோசப்.
தொடர்ந்து பேசிய அவர், “2020இல் நிமிஷாவின் குடும்பத்தைச் சந்தித்தேன். நிமிஷாவின் தாய், கணவரை இழந்தவர். எர்ணாகுளத்தில் வீட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். ஏமனின் சிறையில் உள்ள தனது மகளின் சட்டச் செலவுகளுக்காக, பாலக்காட்டில் உள்ள தனது ஒரே சொத்தை விற்று, அவர் பணம் அனுப்பினார். அவரது மன உறுதியைக் கண்டுதான், நிமிஷாவுக்கு உதவ வேண்டுமென 2020 அக்டோபரில் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உருவாக்கப்பட்டது” என்கிறார்.
‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழு நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டியுள்ளது. இந்தக் குழுவின் உதவியால், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 2024 ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.
அதே வருடம், இந்தக் குழு, மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் 40,000 அமெரிக்க டாலர்களை (Pre-negotiation expense- இந்திய மதிப்பில் 34 லட்சம்) இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தியது.
“நாங்கள் மஹ்தி குடும்பத்திற்கு ‘ப்ளட் மணி’-ஆக ரூபாய் 8.5 கோடி வரை (1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவரை அளிக்க தயாராக உள்ளோம். ஆனால், ப்ளட் மணி தொடர்பாக மஹ்தி குடும்பம் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. மன்னிப்பு வழங்கவும் ஆர்வம் காட்டவில்லை” என்கிறார் சேவ் நிமிஷா பிரியா கவுன்சிலின் உறுப்பினர் பாபு ஜான்.
பாபு ஜான், 2002 முதல் 2015 வரை ஏமனில் ஒரு கச்சா எண்ணெய் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்தவர். இப்போது கேரளாவில் வசித்து வரும் இவர், “நாங்கள் நிமிஷாவின் குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. இறந்த தலாலை குறை சொல்லவில்லை. ஆனால் பாலக்காட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நிமிஷா, குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்கவே ஏமன் சென்றார். அங்கு ஒரு ‘கிளினிக்கை’ தொடங்க பல லட்சங்கள் கடன் வாங்கினார்.
அப்படியிருக்க மஹ்தியைக் கொல்லும் நோக்கில் அவர் இதைச் செய்திருக்க மாட்டார். நிமிஷாவின் தாயார் மற்றும் அவரது மகளின் வலி எங்களுக்குத் தெரியும். அதனால் தான்முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்கிறார் பாபு ஜான்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தாளாளரும், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ உறுப்பினருமான மூசா, “நான் சில வருடங்கள் அபுதாபியில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். ஏமன் போன்ற அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாட்டில் ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொண்டால் என்னவாகும் என தெரியும். அதனால்தான் நிமிஷாவுக்கு தேவையான உதவிகளை கவுன்சில் மூலம் முன்னெடுத்தோம்” என்கிறார்.
நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ குழுவின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10 மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தாக்கல் செய்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரனும் இந்தப் பட்டியலில் முக்கியமானவர்.
“ஏமன் நீதித்துறையே நிமிஷாவுக்கு மன்னிப்பு பெறுவதற்கான வாய்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அதைப் பெற முயற்சி செய்கிறோம். நிமிஷா ஏற்கனவே பல வருடங்கள் சிறையில் கழித்துவிட்டார். ஒரு உயிருக்குப் பதில் இன்னொரு உயிரல்ல” என்கிறார் சுபாஷ் சந்திரன்.
ஷேக் அப்துல்மாலிக் அல் நெஹாயா மற்றும் அப்துல்லா அமர்
ஏமனில் பல பழங்குடி இனக்குழுக்கள் உள்ளன, அவை ஏமன் அரசியலில் பெரும் செல்வாக்கும் கொண்டுள்ளன. அப்படியிருக்க, தலால் அப்தோ மஹ்தி ‘அல்- ஒசாப்’ எனும் ஒரு பழங்குடி குழுவைச் சேர்ந்தவர்.
நிமிஷா பிரியாவின் வழக்கில் மஹ்தியின் குடும்பத்தின் மன்னிப்பை பெறுவது சுலபமான விஷயமல்ல, காரணம் அவர்களுடன் நிமிஷாவின் குடும்பத்தினர் அல்லது சாமுவேல் ஜெரோமால் நேரடியாகப் பேச முடியாது. சில பழங்குடி பிரமுகர்கள் மூலமாகவே இதைச் செய்ய முடியும்.
மஹ்தியின் குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, சாமுவேல் ஜெரோமுக்கு உதவி வருபவர்களில் முக்கியமானவர்தான் ஷேக் அப்துல்மாலிக் அல் நெஹாயா. இவர் அல்- ஒசாப் குழுவின் ஷேக்-ஆக உள்ளார். ஏமனில், ‘ஷேக்’ என்பவர் ஒரு இனக்குழுவின் தலைவராக கருதப்படுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஷேக் அப்துல்மாலிக் அல் நெஹாயா, “மஹ்தியின் கொலை நடப்பதற்கு முன்பாகவே எனக்கு நிமிஷாவையும், மஹ்தியையும் தெரியும். அவர்கள் இணைந்து ஒரு ‘கிளினிக்’ நடத்தினார்கள், அதைத் தொடங்க நானும் உதவி செய்தேன். அதேபோல இருவரது குடும்பத்தினரும் எனக்கு பரிச்சயமானவர்களே.” என்று கூறினார்.
தொடர்ந்து நிமிஷா குறித்துப் பேசிய அவர், “நிமிஷா ஏன், எப்படி இந்தக் கொலையைச் செய்தார் என்பதைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. அவருக்கான தண்டனை நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ஷரியா சட்டத்தின்படியே சாமுவேல் ஜெரோம் மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார். என்னால் முடிந்தவற்றை நான் செய்கிறேன்.” என்கிறார்.
மேலும், “2023இல் ஒருமுறை, சிறையில் இருந்த நிமிஷாவிடம் பேசினேன், ‘மஹ்தி’ குடும்பம் எனக்கு மன்னிப்பு அளிக்குமா எனக் கேட்டார். நான், ‘என்னால் முடிந்ததை செய்கிறேன்’ என்று சொன்னேன்.” என்று கூறினார் அப்துல்மாலிக்.
மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்த அளவில் உள்ளன என கேட்டபோது, “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் சொல்கிறோம்” என்று மட்டும் கூறினார்.
அதேபோல அப்துல்லா அமிர் என்பவர் 2020இல் இந்திய அரசின் மூலமாக நிமிஷாவின் சார்பாக வாதாட நியமிக்கப்பட்ட ஏமனைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரும் ஏமனின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்தான்.
மஹ்தி கொலை வழக்கில், 2020இல் ஏமன் தலைநகர் சனாவின் உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதன் பின்னரே இந்த வழக்கில் அப்துல்லா அமிர் நியமிக்கப்பட்டார்.
சனா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரு மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்தார். நவம்பர் 2023-இல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டாலும் கூட, ‘ப்ளட் மணி’ வாய்ப்பு நிமிஷாவுக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தவர் அப்துல்லா அமிர்.
மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்
2018இல் நிமிஷாவின் வழக்கு சாமுவேல் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன் ஆஜராகி வாதாடி, நிமிஷாவின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
“இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்.” என்று கூறினார் பாலச்சந்திரன்.
வழக்கின் பின்னணி என்ன?
கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு