• Wed. Jul 23rd, 2025

24×7 Live News

Apdin News

நிமிஷா பிரியா: திரட்டிய நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமுவேல் மீது கொலையானவரின் சகோதரர் புகார்

Byadmin

Jul 23, 2025


சாமுவேல் ஜெரோம், நிமிஷா பிரியா வழக்கு
படக்குறிப்பு, சாமுவேல் ஜெரோம்

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனாலும், இந்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் மறுத்துள்ளார்.

நிமிஷா பிரியா வழக்கு திங்கட்கிழமை (ஜூலை 21) எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. கொலையுண்ட ஏமன் குடிமகனான தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் குற்றம் சாட்டினார்.

நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக சாமுவேல் ஜெரோம் உள்ளார்.

ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாக சித்தரித்துக்கொண்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இல்லாமல், கூட்டு நிதியுதவி மூலம் திரட்டப்பட்ட 40,000 டாலர் உட்பட நன்கொடைகளை சேகரித்ததாகவும் மஹ்தி குற்றம் சாட்டினார். ஜெரோம் தனது குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்குமாறு மஹ்தி சவால் விடுத்தார்.

By admin