பட மூலாதாரம், Getty Images
‘ரமா எனது மனைவி மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த கலைஞரும்கூட. அவரது சொந்தப் படைப்புகள் மற்றும் தனித்துவமான அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் அவரை அறிந்து கொள்வது, அவருடைய உரிமை.’
தனது மனைவி ரமா துவாஜி மீது சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஜோஹ்ரான் மம்தானி மே 13ஆம் தேதி தனது பதிவில் இப்படிக் கூறியிருந்தார். அந்த நேரத்தில், மம்தானி தனது மனைவியின் அடையாளத்தை மறைத்ததாக சிலர் குற்றம்சாட்டிய சூழல் நிலவியது.
ரமா துவாஜி சிரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும், பாலத்தீனத்துக்கு ஆதரவாகப் பேசும் ஒருவர் என்பதாலும், மம்தானி வேண்டுமென்றே அவரைத் தனது தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலக்கி வைத்ததாகக் கூறப்பட்டது.
தனது மனைவியின் அடையாளம் தனக்கு மட்டும் உரியதல்ல என்றும், அவர் ஒரு சிறந்த கலைஞர் என்றும், அவர் எந்த வகை உறவு நிலைக்காகவும் அல்லாமல், தனது திறமைக்காக அறியப்பட வேண்டும் என்றும் மம்தானி கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் (நியூயார்க் நகர மேயர் வேட்பாளருக்கான தேர்தல்) மம்தானி வெற்றி பெறும் வரை, எந்தவொரு பொது நிகழ்வுகள் அல்லது பிரசாரங்களிலும் துவாஜி கலந்து கொள்ளவில்லை.
அவர் தனது சமூக ஊடகக் கணக்குகளில் ஜோஹ்ரானையோ அல்லது அவரது தேர்தல் பிரசாரத்தையோ ஆதரித்து வெளிப்படையாக எதையும் பதிவிட்டதில்லை.
துவாஜி வழக்கமாகத் தனது சமூக ஊடகக் கணக்குகளில் கலைப் படைப்புகளையோ அல்லது புகைப்படங்களையோ பகிர்ந்து வருவதையே காண முடிந்தது.
பட மூலாதாரம், Rama Duwaji/IG
ஆனால் ஜூன் 24 அன்று, நியூயார்க் நகர மேயர் வேட்பாளருக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் மம்தானி வெற்றி பெற்றபோது, அவரது வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வில் ரமா துவாஜி முதல் முறையாக அவருடன் மேடையில் காணப்பட்டார்.
நியூயார்க் மேயர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை அவர் பெற்றுள்ளார் என்பதுதான் முதன்மைத் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார் என்பதற்கான அர்த்தம். வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகான வெற்றிக் கொண்டாட்டங்களின் போதுகூட, ரமா துவாஜி மிகவும் சௌகரியமாக இருந்தது போலத் தெரியவில்லை.
ஆனால் பின்னர், மம்தானியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “இதைவிட பெருமைமிக்க தருணம் இல்லை” என்று பதிவிட்டிருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரமா துவாஜியும், ஜோஹ்ரான் மம்தானியும் திருமணம் செய்து கொண்டனர்.
மம்தானியின் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. அப்போது, தனது இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக கடுமையான தாக்குதல்களை மம்தானி ஒருபுறம் எதிர்கொண்டார்.
மறுபுறம், அவரது மனைவி ரமா துவாஜி காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளையும் அதில் ஏற்படும் வன்முறையையும் தனது கலைப் படைப்புகள் மூலம் எதிர்த்ததால், சிலர் அவரையும் குறிவைத்து விமர்சிக்கத் தொடங்கினர்.
இத்தகைய சூழ்நிலையில், ரமா துவாஜி யார், அவரது அடையாளம் ஏன் மிகவும் முக்கியமானது என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
ரமா துவாஜி என்பவர் யார்?
ரமா துவாஜி சிரியாவில் பிறந்தவர். ஒரு இல்லஸ்ட்ரேட்டரும் அனிமேட்டரும் ஆன அவர், தற்போது நியூயார்க் நகரின் ப்ரூக்ளினில் வசிக்கிறார்.
ரமா துவாஜிக்கு 27 வயதாகிறது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற துவாஜி, நியூயார்க் நகரத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
அவரது குடும்பம் சிரியாவின் டமாஸ்கஸை சேர்ந்தது. ஆனால் ரமா டெக்சாஸில் பிறந்தவர். தற்போது அவரது குடும்பம் துபையில் வசிக்கிறது.
துவாஜியின் குடும்ப உறுப்பினர்கள் யார், அவரது தந்தை என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே அறியப்படுகின்றன. துவாஜி இதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை.
ஆனால் இந்த ஆண்டு யங் என்ற இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், கோவிட் காலகட்டத்தில் துபையில் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தைக் கழித்ததாக அவர் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
துவாஜி ஒரு பிரபலமான ஓவியக் கலைஞர் மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான கருத்துகளைக் கொண்டுள்ளார். அவர் தனது கலை மூலம், பாலத்தீனர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க முயன்று வருகிறார்.
இது தவிர, கல்லூரி வளாகங்களில் நிகழும் இன ரீதியிலான வன்முறை மற்றும் எதிர்ப்புக் குரல்களை அடக்குதல் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தியும் அவர் செயல்பட்டு வருகிறார்.
உதாரணமாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலத்தீன மாணவரான மஹ்மூத் கலீலுக்கு ஆதரவாக அவர் விளக்கப் படங்களை (Illustrations) உருவாக்கினார்.
மஹ்மூத் கலீல், இந்த ஆண்டு ஹமாஸ் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பட மூலாதாரம், Rama Duwaji/IG
கடந்த ஏப்ரல் மாதத்தில், ரமா துவாஜி ‘ யங் மீ ‘ என்ற இணையதளத்துக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார்.
அந்த நேர்காணலில், “அரசியலையும் கலையையும், பாலத்தீனத்தையும், டிரம்பின் வருகையையும், குடியேற்றத்தையும், சுங்க அமலாக்க சோதனைகளையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு கலைஞராக இந்த நிகழ்வுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
“நான் பொய் கூறவில்லை. நியூயார்க்கில் இப்போது நிலைமை சரியில்லை. என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இந்த விஷயங்கள் என் கைகளை மீறிச் செல்வதாக உணர்கிறேன்” என்று ரமா கூறியிருந்தார்.
“என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் கண்ணாடியாகவே என் கலை எப்போதும் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில், பலரின் குரல்கள் அடக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில், என்னால் முடிந்தது குரல் கொடுப்பது மட்டுமே. அமெரிக்கா, பாலத்தீனம் அல்லது சிரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து என்னால் பேச முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
சிரிய அடையாளம் குறித்த குழப்பம்
பட மூலாதாரம், Rama Duwaji
ரமா துவாஜி சிரியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், தனது சிரிய அடையாளத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு நீண்ட காலம் எடுத்தது. அவர் 2019இல் ஒரு நேர்காணலில் தனது சிரிய-அமெரிக்க அடையாளத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
அந்த நேர்காணலில், ஆரம்பக் காலங்களில் தனது சிரிய அடையாளத்தை மறைக்க முயன்று, தான் ஒரு அமெரிக்கர் என்று எல்லோரிடமும் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“வளைகுடா நாடுகளில் 10 ஆண்டுகள் வசித்தபோது, நான் எனது அமெரிக்க அடையாளத்துடன் வாழ்ந்தேன். அந்த நேரத்தில், என் தலைமுடி வெளிர் நிறமாக இருந்தது, என் சிந்தனை, மேற்கத்திய மயமானதாக இருந்தது. எனக்கு அரபு மொழிகூட சரியாகப் பேசத் தெரியாது. ஆனால் நான் அமெரிக்கா வந்தபோது, மரபுவழியில் நான் அமெரிக்காவை சேர்ந்தவர் இல்லை என்பதை உணர்ந்தேன்” என அவர் பகிர்ந்து கொண்டார்.
“அங்குள்ள மக்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால், நீண்ட காலமாக எனது அடையாளம் குறித்துக் குழப்பமாக இருந்தது. பின்னர், இறுதியாக எனது மத்திய கிழக்கு அடையாளத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.
அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அந்த அடையாளம் முழுமையாக சிரியாவுடையதும் இல்லை, முழுமையாக எமிரேட்ஸ் உடையதாகவும் இல்லை. ஆனால் அது எதுவாக இருந்தாலும், அந்த அடையாளம் என் கலையிலும், என் பணியிலும் ஆழமாகத் தாக்கம் செலுத்தியது” என்கிறார் ரமா துவாஜி.
ஜோஹ்ரான் மம்தானி திருமணம்
பட மூலாதாரம், Rama Duwaji/IG
ரமாவின் படைப்புகளை ஜோஹ்ரான் மிகவும் விரும்பி ரசித்து வருகிறார். இருவருக்கும் இடையே ஆறு வயது வித்தியாசம் உள்ளது. சமீபத்தில், ஒரு நேர்காணலின்போது, ‘ஹிஞ்ச்’ என்ற டேட்டிங் செயலியின் மூலம் ரமாவை சந்தித்ததாக ஜோஹ்ரான் மம்தானி கூறியிருந்தார்.
அதே நேர்காணலில், மம்தானி சிரித்துக் கொண்டே, “இந்த டேட்டிங் செயலிகளில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது” என்றார். இந்த வருடம் நியூயார்க் நகரில் இருவருக்கும் சாதாரண முறையில் திருமணம் நடந்தது.
கடந்த ஆண்டின்(2024) தொடக்கத்தில், துபையில் நிச்சயம் செய்துகொண்ட அவர்கள், பின்னர் பாரம்பரிய வழக்கப்படி திருமணம் செய்து கொண்டனர்.
மம்தானியின் பிரசாரக் குழு வெளியிட்ட அறிக்கை, “இது ஒரு தனிப்பட்ட, ஆனால் மகிழ்ச்சியான விழா” என்று கூறியது. இந்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஜூன் 24 அன்று, நியூயார்க் நகர மேயர் வேட்பாளருக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் ஜோஹ்ரான் வெற்றி பெற்றபோது நடந்த கொண்டாட்டத்தில் அவர் தனது தாயார் மீரா நாயர், தந்தை மஹ்மூத் மம்தானி, மனைவி ரமா துவாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
அனைவருக்கும் முன்பாகத் தனது மனைவியின் கைகளைப் பற்றி முத்தமிட்ட அவர், “எனது அருமையான மனைவிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ரமா, நன்றி!” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு