• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

நீங்கள் பல் துலக்கும் முறை சரியானதா? பல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை வழிகாட்டுதல்

Byadmin

Sep 12, 2026


ஆலங்குச்சி,வேலங்குச்சி பயன்படுத்தி பல்துலக்குவதுதான் சிறந்ததா? கரும்பை கடித்தால் பல் வலிமையாகுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சண்முகப்பிரியா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

காலையில் எழுந்ததும் பல் துலக்குவதில்தான் பலரும் அன்றைய நாளைத் தொடங்குகிறோம். ஆனால் எத்தனை முறை, எவ்வளவு நேரம், எந்த முறையில் பல் துலக்குகிறோம் என்பதைப் பொறுத்தே பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் அமைகிறது. இரவில் பல் துலக்கிவிட்டால் காலையில் மீண்டும் துலக்க வேண்டுமா? இனிப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு பற்களை ஏன் பாதிக்கின்றன? வாய் கொப்பளிக்கும் திரவம் பயன்படுத்தினால் மட்டும் போதுமா? இந்தக் கேள்விகளுக்குப் பல் மருத்துவர் சிவசங்கர் அளிக்கும் விளக்கங்களைப் பார்க்கலாம்.

பல் துலக்குவது ஏன் முக்கியம்?

நமது வாயில் சுமார் 700 வகையான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. அவற்றில் சில நன்மை செய்பவை; மற்றவை பல் சொத்தை, ஈறு நோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை. வாயில் இயல்பாக இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு, உணவுத் துகள்கள் உள்ளிட்டவற்றுடன் சேர்ந்து ‘பிளேக்’ எனப்படும் பிசுபிசுப்பான, நிறமற்ற படலத்தை உருவாக்குகின்றன என்கிறது அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம்.

“இந்தப் பிளேக் தினமும் உருவாகிறது. அதை முறையாக அகற்றாவிட்டால் காலப்போக்கில் கடினமாகிப் பற்காரையாக மாறலாம். ஈறுகளில் ரத்தக்கசிவு, ஈறு நோய் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படவும் அது காரணமாகலாம். பிளேக்கை அகற்றுவதற்காகவே தினமும் தவறாமல் பல் துலக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் சிவசங்கர்.

காலை, இரவு இரண்டு நேரமும் பல் துலக்குவது அவசியம் என்கிறார்கள் பல் மருத்துவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலை, இரவு இரண்டு நேரமும் பல் துலக்குவது அவசியம் என்கிறார்கள் பல் மருத்துவர்கள்

எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொரு முறையும் இரண்டு நிமிடங்கள் ஃப்ளூரைடு பற்பசையுடன் பல் துலக்க வேண்டும். “குறிப்பாக இரவு உறங்குவதற்கு முன்பு பல் துலக்குவதைத் தவிர்க்கக் கூடாது. அதோடு பகலில் மற்றொரு நேரத்திலும் துலக்க வேண்டும்.”

இரவில் எச்சில் சுரப்பு குறைவதால் பற்களை இயற்கையாகப் பாதுகாக்கும் வாயின் திறனும் குறைவதாகக் குறிப்பிட்ட மருத்துவர் சிவசங்கர், “பகலில் சாப்பிட்ட உணவுத் துகள்களும் பிளேக்கும் பற்களில் தங்கியிருந்தால், பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி பற்களைப் பாதிக்கலாம். அதனால் இரவில் பல் துலக்குவது மிகவும் முக்கியமானது” என்றார்.

By admin