• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு | nadras High Court issues warrant to Salem district collector

Byadmin

Sep 23, 2024


சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “நான் கடந்த 2004-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துக்களில் செயலாளராக பணி புரிந்துள்ளேன். இந்நிலையில் சந்தியூர் ஆட்டையம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரிந்த போது, பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டு விட்டதாகக்கூறி மாவட்ட ஆட்சியர் கடந்த 2017-ம் ஆண்டு என்னை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையும் பஞ்சாயத்து தலைவரி்ன் ஒப்புதல் பெற்றே நடைபெறுகிறது. என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதால் பணியிடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி உயர் நீதிமன்றம் எனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணப்பலன்களை வழங்க கடந்தாண்டு செப்.5-ம் தேதி உத்தரவிட்டும் இன்னும் பணி வழங்கவில்லை” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, சம்பந்தப்பட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்.1-க்கு தள்ளி வைத்துள்ளார்.



By admin