படக்குறிப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அண்மைய கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை ‘மிகவும் தனித்துவமான சிறப்புமிக்கவர்’ என்று பாராட்டியுள்ளார். மேலும், “யாரும் அவருடைய இயல்பான ஆட்ட பாணியில் யாரும் தலையிடக்கூடாது” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்த இடதுகை தொடக்க ஆட்டக்காரர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களையும் ஈர்த்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 776 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்த சீசனில் மட்டும் சூர்யவன்ஷி 72 சிக்ஸர்களை விளாசி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் (59 சிக்ஸர்கள்) அடித்திருந்த சாதனையை முறியடித்து, புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கிடையில், ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், 15 வயதான வைபவ்வின் இந்த அசாத்தியமான ஆட்டத்திறனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின், சூர்யவன்ஷியின் பேட்டிங்கைத் தான் பார்த்ததாகவும், அது மிகச் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“இப்போது எல்லாரும் சூர்யவன்ஷியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவருடைய பேட்டிங்கைப் பார்த்தேன் மிகவும் அற்புதம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் ஏதோ ஒரு தனித்துவமான மிகச்சிறந்த திறமை இருக்கிறது. பந்தை மிகுந்த சக்தியுடன் அடிக்கும் அவரது ஆற்றல் மட்டுமல்ல, தனது மணிக்கட்டுகளை அவர் பயன்படுத்தும் விதம் உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சியாகும். அவனுடைய பேட்டிங்கில் அந்த மணிக்கட்டின் லாவகம் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது” என்றார்.
மேலும் தொடர்ந்த சச்சின், “ஒரு பேட்ஸ்மேனுக்கு மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஷாட்களை அடிப்பதற்கு மணிக்கட்டுகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். மேலும் பந்தை அடிப்பதற்கு அவர் உடல் வலிமையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பிற வீரர்களுடன் ஒப்பிடுகையில், பந்து வீசப்படும் லைன் மற்றும் லென்த்தை மிக முன்கூட்டியே கணித்து, மிக அநாயாசமாக பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறான்” என்று பாராட்டியுள்ளார்.
‘நெருக்கடி கொடுக்க வேண்டாம்’
வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், ஆனால் அவசரப்பட்டு அவரை அந்த நிலைக்குத் தள்ளக் கூடாது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்த இளம் வீரருக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டுமே தவிர, அவர் மீது தொடர்ச்சியான அழுத்தத்தையோ அல்லது நெருக்கடியையோ ஏற்படுத்தக் கூடாது என்று கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ரசிகர்களுக்கும் சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசும் அவர், “நான் அவருக்குச் சொல்லும் ஒரே அறிவுரை, அவர் எப்போதும் அவராகவே இருக்க வேண்டும் என்பதுதான். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு. வயது மற்றும் அனுபவத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்கொள்ளும் வெவ்வேறு சவால்களை அவர் தானாகவே கற்றுக் கொள்வார். எல்லாவற்றையும் விட, சவால்களுக்குத் தீர்வு காணும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதுதான் மிக முக்கியம். பிரச்னைகள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாள் வரை, ஏன்… நீங்கள் எதிர்கொள்ளும் கடைசிப் பந்து வரை பிரச்னைகள் நீடிக்கும். பந்துவீச்சாளர் ஒவ்வொரு பந்திலும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு பந்துவீச்சாளருக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்றார்.
“அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வீரராகத் தெரிகிறார், தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவான புரிதல் இருக்கிறது” என்று சச்சின் பாராட்டினார்.
“அவர் பந்தைக் கவனிக்கும் விதமும், அதற்கு எதிர்வினையாற்றும் விதமும் தனித்துவமானது. அந்த இயல்பான ஆட்டமுறையில் தேவையில்லாத தலையீடுகளைச் செய்து அளவுக்கு அதிகமான அறிவுரைகளைக் கூறி சுமைகளை ஏற்றி அவரது பாதையில் முட்டுக்கட்டைப் போட்டால், அதுவே சூர்யவன்ஷிக்குப் பெரிய சவாலாக மாறிவிடும். அவர் இப்போது எப்படி விளையாடுகிறாரோ, அதே பாணியில் விளையாடுவதற்கான முழு சுதந்திரத்தையும் அவருக்கு வழங்க விரும்புகிறேன். காலப்போக்கில், விளையாட்டின் பிற சவால்களை எவ்வாறு கையாள்வது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.”
தொடர்ந்து பேசிய டெண்டுல்கர், “நான் மட்டுமல்ல; என்றாவது ஒரு நாள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். அந்தத் தருணம் எப்போது வரும் என்பது தெரியாது. இருப்பினும், இத்தகைய அற்புதமான திறமை கொண்ட வீரர் ஒருவருக்கு ஊக்கம் அளிப்பது அவசியம். அவர் சிறப்பாகச் செயல்படும்போது, நாம் அவருக்குத் துணையாக நிற்க வேண்டும், அவரை உற்சாகப்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக அவர் விளையாடுவதை நாம் வெறுமனே ரசிக்க வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விளையாட வேண்டுமா, கூடாதா என்றோ, அல்லது எந்த அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றோ கேள்விகள் கேட்டு, நாம் அவரைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது. அந்த முடிவை அதற்கான பொறுப்பில் உள்ளவர்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சூரியவன்ஷியின் ரசிகர்களான ஸ்டெய்ன், கபில் மற்றும் அமிதாப்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஐபிஎல் 2026 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிவேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், சூர்யவன்ஷியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதே தனது கனவு என்று சூர்யவன்ஷி உலகிற்குச் சொன்னால், அதைவிட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த விளம்பரம் வேறு எதுவும் இருக்க முடியாது. இளம் வீரரே, எங்களின் எதிர்பார்ப்புகள் உன்னோடு உள்ளன. உனது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் வைபவ் சூர்யவன்ஷியை ஒரு தனித்துவமான திறமைசாலி என்று பாராட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வைபவ் சூர்யவன்ஷி அசாத்தியமான திறமை கொண்டவர், ஆனால் நாம் அவருக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். 16 வயது வீரர் என்பவர் 16 வயதுடையவர்தான். தற்போது அவரது உலகம் கிரிக்கெட்டோடு மட்டுமே சுருங்கியுள்ளது. அவர் விளையாட்டுக்கு வெளியேயான வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தொடங்கும்போது, விஷயங்கள் மாறக்கூடும். அவர் ஒரு அசாதாரணமான திறமைசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தளத்தில், “சூர்யவன்ஷி 15 வயதிலேயே ஓர் அற்புதமான ‘சூரியனாக’ ஜொலிக்கிறார். அந்த வயதில், எங்களால் கோலி குண்டு விளையாட்டையோ அல்லது கிட்டிப் புல் விளையாட்டைக் கூட ஒழுங்காக விளையாட முடிந்ததில்லை!” என்று வியந்து பாராட்டியுள்ளார்.
இதற்கிடையே, எதிர்வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியின் 30 பேர் கொண்ட உத்தேச வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த உத்தேசப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற உள்ளது.