நெம்மேலி: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் கடல் அரிப்பு தொடரும் நிலையில், சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகியும் பணிகள் தொடங்கப்படாததால் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதி அருகே, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெம்மேலி மீனவர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடியிருப்புகளை கடல் நீர் உட்புகும் நிலை உள்ளது.
மேலும், கடல் அரிப்பு காரணமாக கரை சேதமடைந்துள்ளதால் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக அங்கு நிறுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மீன்வளத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூட்டம் அமைக்கப்படும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், நெம்மேலி மீனவர் பகுதி செல்லும் சாலையில் கோரிக்கை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஜனார்தணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், தூண்டில் வளைவு அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.