சென்னை: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணம் மற்றும் கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறு முகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் செல்வகணேஷ், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான போலீஸ் விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணிமுத்தாறு ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்களது மகன்தான் சுர்ஜித். ஒரு மகளும் இவர்களுக்கு உள்ளார். சரவணனின் மகளும், கவின் செல்வகணேஷும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சரவணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இந்த பின்னணியில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுர்ஜித்தை போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். நீதிபதி ஹேமா சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.