நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு வழக்கம் போலக் கூறப்படும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் அல்லது வழக்கமான நிலநடுக்கம் காரணம் அல்ல என்றும்,
மாறாக இமயமலையின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட இமாலய பனிப்பாறை சரிவுதான் முக்கியக் காரணம் என்றும் நேபாள விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
நேபாள பெருவெள்ளம்
கடந்த வாரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 900த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆறு நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?
இந்த திடீர் வெள்ளப் பெருக்குகள், முதலில் நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.
புவி வேகமாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி அந்த நீர் பனிப்பாறைகளின் அடிப்பகுதிக்குச் சென்று, அதன் பிடிப்பை தளர்த்தி, நிலநடுக்கம் ஏற்பட்டதும் ஒட்டுமொத்த பனிப்பாறையும் சரிந்து விழ வழிவகுத்ததாக கூறப்பட்டது.
ஆனால் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை, பனிப்பாறைகள் விழுந்த அதிர்வே என கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது ஒரு GLOF நிகழ்வாக இருக்கலாம் என நம்பப்பட்டது.
ஆனால் இது ஒரு GLOF இல்லை என்றும், அதற்கான எந்த ஆதாரத்தையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டவில்லை என்று நேபாள விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
GLOF என்றால் என்ன?
பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளம் (Glacial Lake Outburst Flood – GLOF) என்பது பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் ஏரிகள் திடீரென உடைந்து, அதில் உள்ள நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து ஏற்படுத்தும் ஒரு பேரழிவு வெள்ளம் ஆகும்.
மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும்போது, அந்த நீர் பனிப்பாறையின் முன்பகுதியிலோ அல்லது அருகிலோ தேங்கி ஏரியாக மாறும்.
இந்த ஏரியைச் சுற்றி மண், பனிக்கட்டிகள் மற்றும் பாறைக்கழிவுகள் ஒரு இயற்கையான அணை போலச் செயல்பட்டு நீரைத் தடுத்து நிறுத்தியிருக்கும். இந்த இயற்கை அணை திடீரென உடையும்போது GLOF ஏற்படுகிறது.
அப்போது உண்மையான காரணம் என்ன?
இந்த வெள்ளப்பெருக்கிற்கு திடீர் பனிப்பாறை சரிவே காரணம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. லாங்டாங் லிருங் சிகரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து பனிப்பாறைகள் சரியத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,
“பனிச்சரிவினால் ஏற்பட்ட நில அதிர்வு ஒரு வலுவான நிலநடுக்க சமிக்ஞையை (M5.2 ரிக்டர் அளவில்) உருவாக்கியது. சீனா மற்றும் நேபாள எல்லைக்கு இடைப்பட்ட லெண்டே கோலா பகுதியில், 5200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி மற்றும் பாறைகளுடன் கூடிய பனிச்சரிவு இடிபாடுகளுடன் சுமார் 2930 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்கியது.
இது 2270 மீட்டர் செங்குத்தாக கீழே சரிந்து, அதிவேக இடிபாட்டுப் பாய்வை ஏற்படுத்தியது.” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த பனி மற்றும் பாறை இடிபாடுகளின் தொகுதி, வெறும் ஏழு நிமிடங்களுக்குள் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் பயணித்து அஸ்வகந்தா பகுதியை அடைந்ததாகவும், அப்போது அது மணிக்கு தோராயமாக 167 கிலோமீட்டர் சராசரி வேகத்தை எட்டியதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
சரிந்து விழுந்த இடிபாடுகள் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாகப் பாதையை அடைத்ததால், ஆங்காங்கே இரண்டு தற்காலிக ஏரிகள் உருவாயின. இதனால் ஆற்றின் போக்கே மாறியுள்ளது.
பேரிடருக்கு முன்பு குறைந்த நீர்மட்டம்
இந்த பேரிடர் நிகழ்வதற்குச் சற்று முன்னதாக ரசுவாகாதி மற்றும் சப்ருபெசி ஆறுகளின் நீர்மட்டம் திடீரெனக் குறைந்துள்ளது. பனிச்சரிவு இடிபாடுகள் ஆற்றை அடைக்கத் தொடங்கியதன் ஆரம்பக்கட்ட அறிகுறி இது என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பனிப்பாறை ஏரி உடைப்பு அல்ல
ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறைத் தொகுதி, அதன் அடிப்படையான பாறைப் படுக்கையுடன் சேர்ந்து பெயர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகைக்குள் செங்குத்தாக விழுந்ததைச் செயற்கைக்கோள் படங்களும் சுட்டிக்காட்டின. இது, இந்த வெள்ளம் பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதை மேலும் நிரூபிக்கிறது.
“காவோஃபென்-1 (GF-1), சார் (SAR), சென்டினல் (Sentinel), பிளானட்ஸ்கோப் (PlanetScope) மற்றும் லேண்ட்சாட் (Landsat) உள்ளிட்ட பல செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், திபெத் பிராந்தியத்தின் மேல் பகுதியில் மூன்று பனிப்பாறை ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், பனிப்பாறை ஏரி உடைந்ததற்கான எந்தவொரு சான்றோ அல்லது அறிகுறியோ கண்டறியப்படவில்லை” என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
வெள்ளம் ஏற்பட்ட அன்று பெரிய அளவில் மேகவெடிப்பு எதுவும் நிகழவில்லை என்றும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்திருந்தால், அது ஆற்றின் நீர்மட்டத்தில் எதிரொலித்திருக்கும்; ஆனால், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக ஆற்றின் நீர்மட்டம் உண்மையில் குறைந்தே காணப்பட்டது. எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.
நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தின் பரிந்துரையின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நேற்று (ஆக.30) இந்த அறிக்கையை நேபாள விஞ்ஞானிகள் குழு அளித்துள்ளது.