கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 4900 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அடங்குவர்.
நேபாள பெரு வெள்ளத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் சிக்கியிருந்தனர் என்றும், அவர்களில் 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 85 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை” என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த பேரிடரில், ‘உயிரிழந்தவர்களின் உடல்கள் பல நாட்கள் நீரிலும், சேற்றிலும் மூழ்கிக் கிடந்து, பின்னர் கண்டெடுக்கப்படுவதால், அவை சிதைந்து, அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளன. அவற்றை பாதுகாத்து வைப்பதிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அவற்றை தற்காலிகமாக புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக’ நேபாள அரசு அறிவித்திருந்தது.
அவ்வாறு ‘அந்த உடல்கள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, அவற்றிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்படும் டிஎன்ஏ மாதிரிகளுடன் அவை பொருந்திப்போகும் பட்சத்தில், அந்த உடல்கள் சடங்குகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம்’ என்றும் நேபாள அரசு தெரிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் அல்லது உடல் பாகங்களுடன் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு டிஎன்ஏ பொருத்தம் உள்ளதா என்பதை அறிய, உயிரியல் ரீதியாக நெருக்கமான உறவினர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘நேபாள பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தற்காலிகமாக புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக’ நேபாள அரசு அறிவித்திருந்தது.
இந்த நடைமுறை எடுக்கப்படுவதாலேயே காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகப் பொருள்படாது. வெள்ளம் நிகழ்ந்து பல நாட்களுக்குப் பிறகும் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் தொடர்கின்றன.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காணும் பணிக்காக, தமிழகத்தில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் செயல்படும் மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களில், காணாமல் போனவர்களின் பெற்றோர் அல்லது பிள்ளைகள் உள்ளிட்ட முதல் நிலை உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் கட்டணமின்றி சேகரிக்கப்படுகிம்.
இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்பதுடன், சேகரிக்கப்படும் தகவல்கள் நேபாள அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் சேகரிக்கப்படும் டிஎன்ஏ மாதிரிகள்
படக்குறிப்பு, மருத்துவர் தமிழ்மணி
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளத்தின் கைலாய – மானசரோவர் யாத்திரைக்கு 57 பேர் கொண்ட குழு ஒன்று சென்றிருந்தது. இதில் 21 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பிய நிலையில், இன்னும் 36 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
இவர்கள் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களது உறவினர்கள் பலரும் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு டிஎன்ஏ மாதிரிகளை அளிப்பதற்காக வருகை தருகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவ மற்றும் நச்சுயியல் பிரிவு மருத்துவர் தமிழ்மணி, “இவ்வாறு பெறப்படும் இரத்த மாதிரிகளை ‘எஃப்.டி.ஏ அட்டை’ (FTA Card) எனப்படும் அட்டையில் சேகரித்து, தஞ்சாவூரில் உள்ள மண்டல தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் டி.என்.ஏ பிரிவிற்கு அனுப்பி வைப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் அதன் மூலம் மரபணு வரைபடத்தை (DNA Profile) உருவாக்கி, அதனை நேபாள அரசாங்கத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள். நேபாள அரசாங்கத்தின் டி.என்.ஏ பிரிவிலும், காணாமல் போன நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இதேபோன்று செய்திருப்பார்கள். எனவே, அந்த டி.என்.ஏ வரைபடத்தையும், நாம் இங்கு எடுக்கும் டி.என்.ஏ வரைபடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் காண்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
“நாங்கள் செப்டம்பர் 5 முதல் மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். 5ஆம் தேதி 23 மாதிரிகளும், நேற்று (செப்டம்பர் 7) 3 மாதிரிகளும், இன்று (செப்டம்பர் 8) 1 மாதிரியும் சேகரித்துள்ளோம். பெற்றோர் இல்லாதபட்சத்தில் சித்தப்பா, பெரியப்பா அல்லது பெரியம்மா போன்ற உறவினர்களின் மாதிரிகளைக் கொடுத்தால் கூட பயனுள்ளதாக இருக்கும். இதுவரை தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து உறவினர்கள் வந்துள்ளனர்.” என்று கூறினார் மருத்துவர் தமிழ்மணி.
இதற்காக அரசாங்கம் எந்தவொரு காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், “டிஎன்ஏ மாதிரிகளை அளிக்க விரும்பும், உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது பேரிடர் மேலாண்மை வட்டாட்சியரையோ அணுகித் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் அங்கீகாரத்தின் பேரில் நாங்கள் தொடர்ந்து ரத்த மாதிரிகளைச் சேகரித்து வருகிறோம்” என்றார்.
படக்குறிப்பு, மருத்துவர், உதவி பேராசிரியர் நவின்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவ மற்றும் நச்சுயியல் பிரிவு மருத்துவர், உதவி பேராசிரியர் நவின் பேசுகையில், “டி.என்.ஏ மாதிரி என்பது மனித உடம்பில் உள்ள ரத்தம், உமிழ்நீர் மற்றும் முடியின் வேர்ப்பகுதி ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய ஒன்றாகும்.” என்று விளக்கினார்.
“உயிருடன் இருக்கும் ஒரு நபரிடமிருந்து டி.என்.ஏ மாதிரி எடுக்க வேண்டும் என்றால், பெரும்பாலும் ரத்தத்தையே பயன்படுத்துகிறோம். அதிக வலி தராத வகையில், நீரிழிவு நோய் பரிசோதனைக்கு எடுப்பது போல ஒரு சிறிய ஊசியால் குத்தி, 4 சொட்டு ரத்தத்தை எஃப்.டி.ஏ அட்டையில் சேகரிக்கிறோம்.” என்று அவர் கூறுகிறார்.
“காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று தான் நம்புகிறோம். இருப்பினும், தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் வெள்ளத்தில் உயிரிழந்திருந்தால், அவர்களது உடலின் ஒரு சிறிய பாகம் கிடைத்தாலும்கூட, துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர் அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே டி.என்.ஏ மாதிரிகள் என்பவை அதற்கு மிக முக்கியமானவை” என்றும் நவின் குறிப்பிட்டார்.
‘பேருந்து இன்னும் கிடைக்கவில்லை’
படக்குறிப்பு, அசோக் ரங்கநாதன்
கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, பின்னர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் தஞ்சாவூரின் ஜே.ஜே நகரைச் சேர்ந்த சிவயோகம் ரங்கநாதனும் ஒருவர். இவரது மகன் அசோக் ரங்கநாதன் தனது தாயின் நிலை குறித்து அறிந்துகொள்ளும் முயற்சியின் ஒருபகுதியாக டி.என்.ஏ மாதிரிகளை அளிக்க கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர், “இங்கு விரைவாக அனைத்தையும் பெற்றுக் கொண்டனர். மேற்கொண்டு விவரங்களைச் சரிபார்த்துவிட்டுச் சொல்வதாகத் தெரிவித்துள்ளனர். முடிந்தவரை காணாமல் போனவர்களின் உடன் பிறந்தவர்களின் டி.என்.ஏ-வைக் கொடுத்தாலும் நல்லது என்று கூறியுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்து வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எந்தத் தகவலாக இருந்தாலும் எங்களை அழைப்பதாகக் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் வாட்ஸ்அப் மூலமாகத் தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றனர். நேபாளத்தில் தற்போதைய சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. அங்கிருந்து எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை. காணாமல் போனவர்கள் பயணித்த பேருந்தே இன்னும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்” என்று கூறினார்.
கும்பகோணத்தில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் சென்ற 57 பேர், நேபாளத்தில் கைலாய யாத்திரைக்காக மூன்று பேருந்துகளில் பயணித்த நிலையில், ஒரு பேருந்தில் பயணித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதம் இரண்டு பேருந்துகளில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கரூரைச் சேர்ந்த அருண் என்பவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய தனது உறவினரின் நிலை குறித்து அறிய, கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர், “நேபாளத்திற்குச் சென்றிருந்த என்னுடைய மாமானார் அன்பரசு வெங்கடாச்சலம் கடந்த 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது காணாமல் போய்விட்டார். அவரது மகளும் எனது மனைவியுமான வித்யா டிஎன்ஏ மாதிரிகளை அளித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், “கடந்த ஒரு வாரமாக அரசுத் தரப்பில் ஒருங்கிணைப்பு இருந்தாலும், எங்களுக்கு எந்தப் புதிய தகவலும் கிடைக்கவில்லை. நேபாளத் தரப்பிலிருந்து மட்டுமே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சீனத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அவர் காணாமல் போன இடம் திபெத் – நேபாள எல்லைப் பகுதியாகும்” என்றார்.
“பரிசோதனை முடிவுகளை எங்களுக்கு நேரடியாக வழங்க மாட்டோம் என்றும், அரசு மூலமாக நேபாள அரசாங்கத்திற்கு நேரடியாக அனுப்பி வைப்போம் என்றும் கூறுகின்றனர். நேபாள அரசு ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது; அந்த டி.என்.ஏ அறிக்கையை நேரடியாக அந்த மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். எனவே, அந்த அறிக்கையை எங்களுக்கும் கொடுத்தால், நாங்களும் அதனை நேரடியாக அனுப்பி, எங்கள் தரப்பிலும் ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று சரிபார்க்க ஏதுவாக இருக்கும்” என்றும் அருண் கூறினார்.
தஞ்சாவூரில் இருந்து மொத்தம் 16 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றதாகவும், அவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரா.ரேவதி கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் தொடர்ந்து அந்த 16 பேரின் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருந்து பேசி வருகிறேன். பரிசோதனை முடிவுகளை 3 முதல் 5 நாட்களுக்குள் வழங்கிவிடுவார்கள்.” என்று கூறினார்.
“இங்கிருந்து அனுப்பிய பின்பு டிஎன்ஏ மாதிரிகள் ஏதேனும் பொருந்திப் போனால், அங்கிருந்து நமக்குத் தகவல் வரும். இதற்கென பிரத்யேகமான இணைய முகப்பு (Portal) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது; அதில்தான் நாம் முடிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி குறிப்பிட்டார்.