சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் 5 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
5-வது நாளான இன்று டிபிஐ வளாகம் முன்பு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திவருகிறோம். பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’என்றனர்.
இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும் எனவும் அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.