0
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையைப் பேணி வரும் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் ஆகியவற்றுடன் அவர்கள் 4ஆவது விக்கெட்டில் 117 பந்துகளில் பகிர்ந்த 124 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.
இலங்கையின் வெற்றியில் வேகபந்துவீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரின் இணைப்பாட்டத்திற்கு இணைப்பாட்டத்திற்கு முன்னர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 63 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய விதம் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மோசமான பந்துகள் எதையும் விட்டு வைக்காமல் சிதறடித்தவாறு குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்ததுடன் சரித் அசலன்கவுடன் இணைந்து அணியை பலமான நிலையில் இட்டார்.
கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க (1) தொடர்ச்சியான 3ஆவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து பெத்தும் நிஸ்ஸன்க (33), குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முன்னாள் தலைவர் குசல் மெண்டிஸ், தற்போதைய தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகத் திறமையான வியூகங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
சரித் அசலன்க 68 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 16ஆவது அரைச் சதமாகும்.
இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 6அவது சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 114 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.
துனித் வெல்லாலகே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடனும் துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பங்களாதேஷின் முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
தன்ஸித் ஹசன் (17), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (0), பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (28), அணித் தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் (28), ஷமிம் ஹொசெய்ன் (12) ஆகிய ஐவரும் துடுப்பாட்டத்தில் பிரசாகிக்கத் தவறினர். (124 – 5 விக்)
மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையுடன் போராடிய தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துஷ்மன்த சமீரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர்.
பங்களாதேஷின் கடைசி துடுப்பாட்ட வீரரான ஜாக்கர் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்வரிசை துடுப்பாட்டத்தில் எருவரும் தாக்குப் பிடிக்கவில்லை.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குசல் மெண்டிஸ் வென்றெடுத்தார்.