0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று பாடசாலைக் கட்டடத்தின் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தோர் தொகை 27ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், மாணவர்கள் உட்பட 170க்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 ரக விமானமே டாக்காவின் வடக்கே உள்ள உத்தராவில் அமைந்திருக்கும் Milestone School and College என்ற பாடசாலைக் கட்டடத்தின் மீது நேற்று திங்கட்கிழமை விழுந்தது.
பங்களாதேஷில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் இது என்றும் கட்டுப்பாட்டை இழந்து பாடசாலைக் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது பாடசாலையில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் பரவிய தீயை அணைக்க தீயணப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
பாடசாலைவளாகத்தில் பலர் கதறி அழுவதை வீடியோக்களில் காண முடிகிறது.
தேசிய துக்க தினம்
பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் சென்று சேர்வது உறுதிசெய்யப்படும் என்று இடைக்கால அரசாங்கத் தலைவர் முகம்மது யூனுஸ் கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய பங்களாதேஷ் விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று செவ்வாய்க்கிழமை (22) தேசிய துக்க தினமாக பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.