0
பறந்து போ – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : செவன் சிஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ஜியோ ஹாட்ஸ்டார்- ஜி கே எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ் .
நடிகர்கள் : சிவா, கிரேஸ் அண்டனி, மாஸ்டர் மிதுல் ரயான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர்.
இயக்கம் : ராம்
மதிப்பீடு : 3.5/5
‘கற்றது தமிழ் ‘, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு ‘ ஆகிய படைப்புகளின் மூலம் தனித்துவமான படைப்பாளி என்ற முத்திரை பதித்த இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பறந்து போ’. பட வெளியீட்டுற்கு முன், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வு ரீதியான படைப்பு என்றும்…. குழந்தைகளின் அக உலகை ஆவணமாக விவரிக்கும் படைப்பு என்றும்.. விளம்பரப்படுத்தப்பட்டது. இதை நம்பி பட மாளிகைக்கு சென்ற பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்ததா? இல்லையா ?என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னை போன்ற மாநகரத்தில் கடன் வாங்கி, அதனை தவணை முறையில் செலுத்தும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கோகுல்( சிவா) – குளோரி ( கிரேஸ் அண்டனி) எனும் தம்பதியினருக்கு அன்பு ( மாஸ்டர் மிதுல் ரயான்) எனும் மகன் இருக்கிறான்.
தனியார் பாடசாலையில் கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் அன்பு ஒரு விடுமுறையின் போது வீட்டில் சிறைப்பட்டு இருக்க விரும்பாமல்… எங்கேனும் சாலை மார்க்கமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்.
அதற்காக அவருடைய தந்தை கோகுல், அன்புவை அழைத்துக் கொண்டு திட்டமிடப்படாத ஒரு சாலை பயணத்தை தொடங்குகிறார். அந்தப் பயணம் அவர்களுக்குள் என்ன மாதிரியான புரிதலை ஏற்படுத்தியது என்பதையும், இதுபோன்ற எதிர்பாராத பயணத்தின் போது அன்புக்கு கிடைத்த அனுபவம் என்ன என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் மாநகரவாசிகள் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகள் – இயந்திரத்தனமான வாழ்வியல் முறை- நுட்பமாக விவரிக்கப்பட்டிருந்தாலும் அது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் அன்பு அடம்பிடித்து துவி சக்கர வாகனத்தில் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொள்ளும் போது அன்பு எப்படி புது அனுபவத்தை உணர்கிறாரோ.. அதேபோல் பார்வையாளர்களும், குழந்தைகளின் மகிழ்ச்சியையும் பெற்றோர்களின் புரிதலையும் உணர்கிறார்கள்.
இங்குதான் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிறது. அத்துடன் சில கடினமான சூழல்களில் தம்முடைய பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இங்குதான் இயக்குநர் ராமின் எழுத்தும், இயக்கமும் வெற்றிபெறுகிறது.
திட்டமிடாத பயணத்தில் எதிர்கொள்ளும் வனிதா ( அஞ்சலி) போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. அதில் கடைக்கோடி பாமர ரசிகர்களுக்கான ஒரு வணிகத்தனமான பார்வையை கலந்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
இந்த படைப்பில் பின்னணி இசையின் ஆளுமை அதிகம். பாடல்கள் தொடக்கத்தில் படத்துடன் பயணிக்க முரண்படவைத்தாலும் செல்லச் செல்ல பாடல்களும் சுகமாகிறது.
எட்டு வயது சிறுவன் அன்பு மகிழ்ச்சியாக இருப்பதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த விடயங்களை செய்கிறார்கள். ஆனாலும் அன்பு சந்தோஷமாக இல்லை.
அவனுக்கு எது வேண்டும் என்பது தெரியாது. இந்நிலையில் அது தொடர்பான தேடலை தொடங்குகிறான். அது திட்டமிடாத சாலை பயணத்தின் மூலம் கிடைக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் அதிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயணம் மேற்கொள்ளும் போது கிடைக்கும் அனுபவங்கள் … வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் நடத்திச் செல்ல வழி வகுக்கும் என்பதை இயக்குநர் ராம் அன்பு எனும் சிறுவனின் பயணத்தின் வழியாக சொல்லி இருப்பதை ரசிக்க முடிகிறது. வாழ்க்கையில் பயணத்திற்கு நேரம் ஒதுக்கி செலவிட வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவத்தையும் உணர முடிகிறது.
கோகுல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவா தன் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
குளோரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை கிரேஸ் அண்டனி இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார்.
படத்தின் மையப்புள்ளியான அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுல் ரயான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றாலும் ஆச்சரியமில்லை.
அஞ்சலி – அஜு வர்கீஸ் தம்பதியினர் விஜய் யேசுதாஸ் – தியா தம்பதியினர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என். கே. ஏகாம்பரத்தின் கண்கள் வழியாக இந்த உலகின் அழகியலை- இயற்கை மக்களுக்கு அளித்த காட்சி கொடையை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
பறந்து போ – குழந்தை வளர்ப்பிற்கான டிஜிற்றல் வழிகாட்டி