“திரைப்படங்களிலும் பாடல்களிலும் ‘கழுதைப் பாதை’ எனப்படும் சட்டவிரோத குடியேற்றப் பாதையின் மூலம் அமெரிக்காவுக்குச் செல்வது எளிது’ என்று கேள்விப்பட்டிருந்தேன். மெக்சிகோ–அமெரிக்க எல்லையைக் கடந்தால் வெற்றி கிடைக்கும் என்றார்கள். ஆனால், நான் அந்த வழியில் சென்ற போது, நிஜத்தில் நிலவும் சூழல் வேறு ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்”.
சட்டவிரோத பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு கொலம்பியாவிலிருந்து நாடு திரும்பிய கபுர்தலாவைச் சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற இளைஞரின் வார்த்தைகள் தான் இவை.
23 வயதான பல்விந்தர் சிங்கின் கனவு அமெரிக்கா செல்வதாக இருந்தது, ஆனால் வழியில், மனிதர்களைக் கடத்தும் கும்பலால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார்.
கொலம்பியாவில் மனிதர்களைக் கடத்தும் கும்பலால் சுமார் ஒரு வருடம் சித்திரவதை செய்யப்பட்டு, பசியாலும் தாகத்தாலும் அவதிப்பட்ட அவர், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சியால் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
கபுர்தலாவில் உள்ள பாஜ்பூர் கிராமத்தில் வசிக்கும் பல்விந்தர் சிங், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.
விவசாயம் தான் அவர்களது குடும்பத்தின் முக்கிய வருமானம்.
நல்ல எதிர்காலத்திற்காக அமெரிக்காவுக்குச் செல்வது அவர்களின் கனவாக இருந்தது. எனவே ஒரு முகவருடன் ரூ.32 லட்சத்திற்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
“நிலத்தை விற்று, சிலரிடம் கடன் வாங்கிய பிறகு, நாங்கள் இந்தியாவில் உள்ள முகவருக்கு ரூ.28 லட்சத்தை வழங்கினோம், மீதமுள்ள பணத்தை அமெரிக்கா சென்றடைந்ததும் செலுத்த வேண்டியிருந்தது” என்று கூறுகிறார் பல்விந்தர் சிங் .
அமெரிக்காவிற்கு பல்விந்தர் சென்ற பாதை
“ஜூலை 18, 2024 அன்று, அவர் வீட்டை விட்டு அமெரிக்காவிற்கு புறப்பட்டார். முதலில், டெல்லியில் இருந்து மும்பையை அடைந்த அவர், அங்கிருந்து நெதர்லாந்தை அடைந்தார்.
நெதர்லாந்திலிருந்து, சூரினாம், கானா மற்றும் அமேசான் காடுகள் வழியாக, நான் பிரேசிலை அடைந்தேன், பின்னர் பொலிவியா, பெரு மற்றும் ஈக்வடார் வழியாக இறுதியாக கொலம்பியாவை அடைந்தேன், அங்கு நான் மனித கடத்தல் கும்பலால் பிடிக்கப்பட்டேன்” என்கிறார் பல்விந்தர் சிங்.
கொலம்பியாவை அடைந்ததும், கடத்தல்காரர்கள் அவரின் பாஸ்போர்ட், செல்பேசி மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்று ஒரு அறையில் பூட்டி வைத்தனர், அங்குதான் உண்மையான சிக்கல்கள் தொடங்கின என்று பல்விந்தர் சிங் கூறுகிறார் .
பின்னர் கடத்தல்காரர்கள் அவரை அடிக்கவும், தினமும் சித்திரவதை செய்யவும், பணம் கேட்கவும் தொடங்கியுள்ளனர் .
அவர்களின் சித்திரவதையால் மனம் நொந்துபோன அவர், வீட்டிற்கு போன் செய்துள்ளார், அதன் பிறகு அவரது குடும்பத்தினர் கடத்தல்காரர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பியும், அவர்கள் தொடர்ந்து அதிக பணம் கேட்டுள்ளனர்.
“அங்கிருந்த சூழ்நிலையால், நான் உயிர் பிழைக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஆனால், ஒரு நாள் திடீரென ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பித்தேன். உள்ளூர் மக்களின் உதவியுடன், அருகிலுள்ள ஒரு நகரத்தை அடைந்தேன். அங்கு ஐந்து மாதங்கள் தங்கிய பிறகு, என் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவங்களை அவர்களிடம் தெரிவித்தேன்” என்று பல்விந்தர் சிங் கூறுகிறார்.
கொலம்பியாவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி உதவி கேட்டதாக பல்விந்தர் சிங் கூறினார், மறுபுறம், பல்விந்தர் சிங்கின் பெற்றோர் மாநிலங்களவை உறுப்பினர் பல்விர் சிங் சீசெவாலின் உதவியை நாடியுள்ளனர்.
அவர் இந்த பிரச்னையை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கொண்டு சென்றார்.
“கடந்த ஒரு வருடமாக நான் வாழ்ந்த வாழ்க்கையை என்னால் மறக்க முடியாது, இனி நான் ஒருபோதும் வெளிநாடு செல்ல மாட்டேன், பஞ்சாபிலிருந்து வேலை செய்வேன்” என்று கூறுகிறார் பல்விந்தர் சிங்.
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்வது மிகவும் ஆபத்தானது என்றும், காடுகளையும் ஆறுகளையும் கடந்து, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்து, மெக்சிகோவுக்குச் சென்று, பின்னர் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் பல்விந்தர் குறிப்பிட்டார்.
‘மழைநீரை குடித்து தாகம் தணித்துக் கொண்டேன்’
“நான் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்தபோது, அவர்கள் என்னைக் கொலை செய்வதாக மிரட்டினர். இதற்குப் பிறகு, நான் இறக்க வேண்டியிருந்தால், இறப்பதற்கு முன் ஏன் ஒரு முறை தப்பிக்க முயற்சிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன், அந்த முயற்சி வெற்றி பெற்றது” என்று பகிர்ந்து கொள்கிறார் பல்விந்தர் சிங்.
கொலம்பியாவின் காடுகளின் வழியாக ஓடிக் கொண்டிருந்த போது தன்னிடம் தொலைபேசியோ பணமோ இல்லை என்று பல்விந்தர் சிங் கூறுகிறார்.
மழை நீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்ட அவர், பசி எடுத்த போது மரங்களில் விளைந்த பழங்களைச் சாப்பிட்டுள்ளார்.
உடைகள் கிழிந்து, மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்த அவர், அங்கிருந்த மக்களிடம் லிஃப்ட் கேட்டு, சுமார் 600 கிலோமீட்டர் தூரம் பயணித்து, கொலம்பிய நகரமான போகோடாவை அடைந்து, அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகக் கூறுகிறார் பல்விந்தர் சிங்.
“கடத்தல்காரர்கள் ஸ்பானிஷ் மொழியில் மட்டுமே பேசினார்கள், நான் மெதுவாக அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், நான் காட்டுக்குள் ஓடிய போது, உள்ளூர்வாசிகளுக்கு ஸ்பானிஷ் மட்டுமே தெரிந்திருந்ததால் இந்த மொழி கை கொடுத்தது” என்று பல்விந்தர் சிங் கூறுகிறார்.
‘இரண்டாவது பிறப்பு’
“வீட்டில் உள்ள வறுமை நீங்கும் என்ற நம்பிக்கையில், எங்கள் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினோம். ஆனால், பின்னர் நடந்ததை நாங்கள் ஒருபோதும் கற்பனை கூட செய்ததில்லை” என்று பல்விந்தர் சிங்கின் தாயார் ஷிந்தர் கவுர் கூறுகிறார்.
தனது மகனுக்கு நடந்தது ஒரு வகையில் இரண்டாவது பிறப்பு என்றும் அவர் கூறினார்.
தனது மகனை அமெரிக்காவிற்கு அனுப்ப பணம் திரட்டுவதற்காக, தனது நிலத்தையும் வீட்டையும் விற்க வேண்டியிருந்ததாகவும், இப்போது அவர் ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாகவும் ஷிந்தர் கவுர் கூறுகிறார்.
பல்விந்தருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது தந்தை நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
மோசடி செய்த முகவர் யார்?
தங்களுக்கு எதிராக நடந்த மோசடி குறித்து கபுர்தலா எஸ்எஸ்பியிடமும் பல்விந்தரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அந்த முகவர் தனக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற நபர் என்று ஷிந்தர் கவுர் கூறுகிறார்.
முகவர் பல்விந்தர் சிங்கை பிபிசி பஞ்சாபி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவரது மனைவி ஹர்பன்ஸ் கவுர் தொலைபேசியை எடுத்து, பல்விந்தர் சிங் வீட்டில் இல்லை என்றும், அவர் வேலைக்காக வெளியே சென்றிருப்பதாகவும் கூறினார்.
தனது கணவர் மீதான மோசடி புகார் குறித்து காவல்துறையில் புகார் அளித்த போது, தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும், பல்விந்தர் சிங் விவசாயம் செய்து வருவதாகவும் அவர் பதில் அளித்தார்.
ஷிந்தர் கவுர் காவல்துறையிடம் அளித்த புகாரில் பல்விந்தர் சிங், சோனு சிங், ஹர்பஜன் சிங் மற்றும் மல்கித் சிங் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
கபுர்தலா காவல்துறையின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி உப்கர் சிங் இதுகுறித்து கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் மோசடி செய்த மற்றொரு முகவர்
லூதியானாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர், வேலைவாய்ப்புக்கான விசாவில் அமெரிக்காவுக்கு அனுப்புவதாகக் கூறி, ‘கழுதைப் பாதை’ வழியே அனுப்பப்பட்டு, 1.40 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஆகாஷ்வீர் சிங் காங் அளித்துள்ள புகாரின் பேரில், முகவர் மீதும், அவரது கூட்டாளிகளின் மீதும் லூதியானா காவல்துறை அதிகாரிகள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் காவல்துறையில் உதவி சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் முகவரின் சகோதரர் சரப்ஜித் சிங்கை, கபுர்தலாவில் காவல்துறை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட ஆகாஷ்வீர் சிங், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ( 2 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள்) சட்டப்பூர்வமாக அமெரிக்கா செல்ல விரும்புவதாகக் கூறி, கபுர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்ற டான் என்ற முகவருடன் பேசியுள்ளார்.
உரையாடலின்போது, ஆகாஷ்வீர் சிங்குக்கு வேலை விசா தருவதாக உறுதியளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, முழு குடும்பத்தையும் அமெரிக்காவுக்கு அனுப்ப 90 லட்ச ரூபாய் தருமாறு அவரிடம் கூறப்பட்டது. அவர் அந்தப் பணத்தை சரப்ஜித் சிங்கிடம் ரொக்கமாகக் கொடுத்துள்ளார்.
“சரப்ஜித் சிங் பஞ்சாப் காவல்துறையில் பணிபுரிந்தார் என்பது எனக்குத் தெரியாது, அவர் கைது செய்யப்பட்ட பிறகு தான் இது தெரியவந்தது” என்கிறார் ஆகாஷ்வீர் சிங்.
“ஆகஸ்ட் 2023 இல், முழு குடும்பமும் துபாய்க்கு விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது, பிறகு தான் உண்மையான விளையாட்டு தொடங்கியது” என்று ஆகாஷ்வீர் சிங் விளக்குகிறார்.
அந்த முகவர் ஆகாஷ்வீர் மற்றும் அவரது முழு குடும்பத்தினரையும் துபாயிலிருந்து எல் சால்வடாருக்கு அனுப்பினார், அங்கிருந்து அவர்கள் மெக்சிகோவை அடைந்துள்ளனர் .
மெக்சிகோவை அடைந்ததும், அந்த முகவர் மேலும் ரூ.50 லட்சம் கேட்டதாகவும், பணத்தைக் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டத் தொடங்கியதாகவும் ஆகாஷ்வீர் சிங் கூறுகிறார்.
அவர்கள் கட்டாயப்படுத்தியதால், ஆகாஷ்வீர் சிங்கின் குடும்பத்தினர் முகவருக்கு மேலும் 50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். பிறகு, அவர் மெக்சிகோ எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். சில மாதங்கள் அங்கு தங்கிய பின் அவர் நாடு திரும்பியுள்ளார்.
ஆகாஷ்வீர் சிங்கின் புகாரின் பேரில், லூதியானா காவல்துறை, டான் என்ற தல்ஜித் சிங், பஞ்சாப் காவல்துறையின் ஏஎஸ்ஐ சரப்ஜித் சிங் மீதும் வேறு சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த புள்ளிவிவரம்
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு எதிராக அமெரிக்க நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதன் கீழ், இந்தியர்கள் உட்பட சட்டவிரோதமாக அங்கு குடியேறிய மக்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். கடந்த சில நாட்களில் பல இந்தியர்கள் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ஜனவரி முதல் 1563 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என்கிறார்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்கா அதிபராகப் பதவியேற்ற நாளில் இருந்து இந்த எண்ணிக்கை கணிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, “பெரும்பாலான இந்தியர்கள் வணிக விமானங்கள் மூலம் திரும்பிவிட்டனர். அமெரிக்க அதிகாரிகள் நாடு கடத்தப்பட வேண்டிய நபர்களின் பட்டியலை இந்திய அதிகாரிகளுக்கு வழங்கினர், அதன் பிறகு அவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்பட்டது” என்று தெரியவருகிறது.
“2021 ஆம் ஆண்டில் 805 இந்தியர்களும், 2022 ஆம் ஆண்டில் 862 இந்தியர்களும், 2023 ஆம் ஆண்டில் 670 இந்தியர்களும், 2024 ஆம் ஆண்டில் 1368 இந்தியர்களும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 1563 இந்திய குடிமக்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
மறுபுறம், இந்த விஷயத்தில் என்ஐஏ – NIA (தேசிய பாதுகாப்பு நிறுவனம்) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
‘கழுதைப் பாதை’ மூலம் இந்தியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் இரண்டு முகவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ஐஏ (NIA) வெளியிட்டுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவைச் சேர்ந்த சன்னி என்ற சன்னி டோங்கர் மற்றும் பஞ்சாபின் ரோப்பரைச் சேர்ந்த தீப் ஹுண்டி என்ற சுபம் சந்தால் ஆகியோர் அடங்குவர்.
இவர் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள பீராகர்ஹியில் வசித்து வந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ககன்தீப் சிங் என்கிற கோல்டியின் கூட்டாளிகள் என்று கூறுகிறது என்ஐஏ.
பாதிக்கப்பட்ட ஒருவரின் புகாரின் அடிப்படையில், கோல்டி மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு