• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துக: ஈரோடு கொலை சம்பவத்தை முன்வைத்து தமாகா கோரிக்கை | tamil maanila congress party condemns erode school student murder

Byadmin

Jul 4, 2025


சென்னை: “பள்ளிகளில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாள் ஒழுக்கக் கல்வி நிகழ்ச்சி, தனி நேர வகுப்பு மற்றும் மதிப்பெண்கள் அளவீடு ஆகியவற்றை பின்பற்ற அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அன்று ஆதித்யா என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவியரிடம் பேசிய விவகாரத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், 17 வயது மாணவர் ஆதித்யாவின் உயிரை பறித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய, நிகழ்வாகும்.

ஒரு பள்ளி மாணவன் தனது சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பது, பள்ளி நிர்வாகத்துக்கும், தமிழக அரசு கல்வித்துறைக்கும் பெரிய அவமானமாகும். மாணவர்களின் தவறான பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டும் இந்த சம்பவம், பாடசாலைகளில் மாணவர்களின் நலனைக் காக்கும் நடவடிக்கைகள் எவ்வளவு தேவை என்பதை உணர்த்துகிறது.

மாணவர்களுக்கு பொறுப்பு உணர்வும், நற்குணங்களும், நல்ல பழக்கங்களும் எவ்வித பயிற்சியுமின்றி கடந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி போன்ற முக்கியமான பாடங்கள் சரிவர கற்பிக்கப்படாததால், மாணவர்கள் தவறான நண்பர்ககளின் சேர்க்கை, வன்முறை, இன்டர்நெட் அடிமைத்தனம், போதை பழக்கங்கள் போன்ற ஆபத்தான பாதைகளில் சிக்கி வருகின்றனர்.

ஒழுக்கக் கல்வி இல்லாத பள்ளி சூழல் என்பது மாணவர்களின் மனச்சாட்சியை வளர்க்காமல், அவர்களை வாழ்வில் நன்றாக வலுவாக நின்று காட்டும் அடித்தளமின்றி விட்டுவிடும். இதனை அரசு துரிதமாக சரி செய்ய வேண்டும். பள்ளிகளில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாள் ஒழுக்கக் கல்வி நிகழ்ச்சி, தனி நேர வகுப்பு மற்றும் மதிப்பெண்கள் அளவீடு ஆகியவற்றை பின்பற்ற அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி பயில வேண்டிய இடத்தில் உயிர் இழப்புக்கு காரணமாகும் இந்தச் சம்பவம், கல்வி முறையின் மோசமான தரத்தை வெளிக்காட்டுகிறது. மேலும், மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான அனைத்து மாணவர்களின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் ஒழுங்கு மற்றும் ஒழுக்க விதிகளை கடுமையாக பின்பற்றும் உத்தரவை அரசாங்கம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து, மாணவனின் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.



toany_content_bottom">

By admin