• Sat. Jul 19th, 2025

24×7 Live News

Apdin News

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை | 3 convicts sentenced to death in schoolgirl gang rape case 4 get life term kovai

Byadmin

Jul 19, 2025


கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் (16 வயது) சீரநாயக்கன் பாளையம் சென்றுவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவர்களை மறித்தனர். மாணவியையும், அவரது நண்பரையும் வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சென்றனர். வேறொருவரும் அந்த இடத்தில் இருந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து விரட்டினர். பின்னர் 7 பேரும் சேர்ந்து, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை செல்போனில் புகைப்படமும் எடுத்தனர். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி, மாணவியை அங்கிருந்து அனுப்பினர்.

மகளிர் காவல் நிலையத்தில் புகார்: அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மறுநாள் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாணவி புகார் கொடுத்தார்.

போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கோவை சீரநாயக்கன்பாளையம் மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), வடவள்ளி கார்த்தி (25), நாராயணமூர்த்தி (30), ஆட்டோ மணிகண்டன் என்ற மணிகண்டன் (30) ஆகிய 7 பேரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் மகளிர் போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு, அனைவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றப் பத்திரிகையை மகளிர் போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தலா ரூ.50 ஆயிரம் அபராதம்: “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் 3 குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்தி, ஆட்டோ மணிகண்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 4 முதல் 7-வது வரையிலான குற்றவாளிகள் ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப, தண்டனை மற்றும் அபராதம் தனித்தனியாக விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 7 குற்றவாளிகளும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மகளிர் போலீஸ், வழக்கறிஞருக்கு பாராட்டு: மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர்கள் பிரபாதேவி, பரிமளா தேவி, உதவி ஆணையர் திருமேனி, நீதிமன்ற அலுவல் தலைமை காவலர் சுதா ஆகியோருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் பாராட்டு தெரிவித்தார். திறம்பட வாதங்களை முன்வைத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பூர்ணிமாவுக்கும் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

சட்டப் பிரிவுகள் வாரியாக தண்டனை: முதல் குற்றவாளி மணிகண்டன் மீது சட்ட விரோதமாக கூடுதல், 2 போக்சோ பிரிவுகள், கடத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், போக்சோ முதல் பிரிவுக்கு சாகும்வரை சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 14(1),14(2) போக்சோ பிரிவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, சட்டவிரோதமாக கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கடத்தலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2-வது குற்றவாளி கார்த்தி மீது 3 போக்சோ பிரிவுகள் உட்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யயப்பட்டன. அதில், முதல் போக்சோவுக்கு சாகும்வரை ஆயுள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், 2-வது போக்சோவுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம், 3-வது போக்சோவுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், சட்டவிரோத கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், அடைத்து வைத்தல், காயப்படுத்துதலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், கடத்தலுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

3-வது குற்றவாளி ஆட்டோ மணிகண்டன் மீது 2 போக்சோ பிரிவு உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் போக்சோவுக்கு சாகும்வரை சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், 2-வது போக்சோவுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், சட்டவிரோத கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கடத்தலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



a2a_kit a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/8265271/" data-a2a-title="பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை | 3 convicts sentenced to death in schoolgirl gang rape case 4 get life term kovai">

By admin