பாகிஸ்தானின் மொஹ்மந்த் மாவட்டத்தில், இந்தியாவின் சுதந்திர தினத்தன்று சமூக ஊடகங்களில் இந்திய தேசியக் கொடியின் படத்தையும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தைகளையும் பகிர்ந்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிபிசி உருதுவுக்குக் கிடைத்த முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 123ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவுகள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் தூண்டுவிடுதல் தொடர்பானவை ஆகும்.
மொஹ்மந்த் மாவட்டத்தின் கலானை பகுதி காவல் நிலைய அதிகாரி முராத் கான் பிபிசி உருதுவிடம், “இரண்டு நபர்கள், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் இந்தியக் கொடியின் படம் மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தைப் பதிவிட்டனர்.” என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 15 அன்று கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது?
முதல் தகவல் அறிக்கையின்படி, கோஸ் காண்டோவில் கைது செய்யப்பட்ட நபர், “தனது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதியதாகவும், இந்தியக் கொடி மற்றும் பிற படங்களைப் பகிர்ந்ததாகவும், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடியதாகவும்” குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் இந்தச் செயல் “தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு எதிரான தேசத்துரோகம் மற்றும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பிரிவின் கீழ் வருகிறது” என்று எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நபருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும், அவர் தனது சமூக ஊடகக் கணக்கில் இந்தியக் கொடியைப் பகிர்ந்ததாகவும், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் இதுபோன்ற வழக்குகளுக்குப் பொருந்தாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
மூத்த வழக்கறிஞர் ஷபீர் ஹுசைன் கிக்யானி, “பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 123ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
பிரிவு 123ஏ இன்படி, “ஒரு நபர் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதைக் கண்டித்தால், பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கம் அல்லது எண்ணத்தைக் கொண்டிருந்தால், இந்தப் பிரிவு பொருந்தும்” என்று அவர் கூறினார்.
மேலும், 153ஏ பிரிவு, “மதப் பிரிவுகள், அரசியல் குழுக்கள் அல்லது பிற அமைப்புகளுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒருவர் கருத்து தெரிவித்தாலோ அல்லது பேச்சு நிகழ்த்தினாலோ பயன்படுத்தப்படும்” என்று அவர் விளக்கினார்.
இந்த இரண்டு எஃப்.ஐ.ஆர்களும் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், அவற்றுக்கு சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை எனவும் அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் எனவும் கூறுகிறார்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவரின் வழக்கறிஞரான முசாவர், நீதிமன்றம் பிணை மனுவை நிராகரித்துவிட்டதாகவும், இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விசாரணையின் போது, சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களைப் பகிர்வது தொடர்பான விஷயங்கள் காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வராது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
“மாறாக, இதுபோன்ற வழக்குகள் பிஇசிஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன, இதன் ஆரம்பக்கட்ட விசாரணையை தேசிய இணையக் குற்றப் புலனாய்வு முகமை மேற்கொள்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வழக்குகளில் காவல்துறையினர் நேரடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் இதுபோன்ற விஷயங்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ”இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் பிணையில் வர முடியாதவை. எனவே பிணை மனு நிராகரிக்கப்படுகிறது” என கூறியது.
பிணை பெற இப்போது உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
“அவரது நோக்கம் சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பைப் பரப்புவது அல்ல, மாறாக இந்தியாவிற்கு அதன் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே,” என்றும் அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் ஒருவர் பிபிசி உருதுவிடம், தனது நண்பர் சமீபத்தில்தான் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று முடித்துள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர் ஒரு தேசபக்தியுள்ள குடிமகன். நம் நாட்டில், அரசியல்வாதிகள் மற்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எப்போதாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா? பிறகு ஒரு சாதாரணக் குடிமகனுக்கு எதிராக மட்டும் ஏன்?” என்றார்.
பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு பிப்ரவரியில், விழா ஒன்றில் இந்திய தேசியக் கீதத்தைப் பாடியதற்காக நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டனர்.