படக்குறிப்பு, மீட்கப்பட்ட சிங்கக் குட்டிகள், லாகூரில் உள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனகட்டுரை தகவல்
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகூரின் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது அந்தப் பண்ணை வீடு. அங்கு ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை காற்றில் வரும் வாசனையே உணர்த்துகிறது.
அதன் உள்ளே சென்றதுமே, வாசனைக்கான காரணம் தெளிவாகிறது. ஃபயாஸ் என்பவருக்குச் சொந்தமான அந்த இடத்தில் 26 சிங்கங்கள், புலிகள் மற்றும் அவற்றின் குட்டிகள் இருந்தன.
அந்த இடத்தில், மழை காரணமாக, தரை முழுக்க சேறாகி இருப்பதாகவும், மற்றபடி அந்த விலங்குகள் “அங்கு மகிழ்ச்சியாக” இருப்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார். “எங்களைப் பார்க்கும்போது அவை அருகே வருகின்றன, சாப்பிடுகின்றன. அவை முரட்டுத்தனமாக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு சிங்கம் கர்ஜித்தது. அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஃபயாஸ், “அது சற்று முரட்டுத்தனமானது, அதன் இயல்பே அப்படித்தான்,” என்றார்.
படக்குறிப்பு, இந்த சிங்கக் குட்டி, லாகூரின் புறநகரில் நடந்த சோதனையின்போது பஞ்சாப் வனத்துறை ரேஞ்சர்களால் மீட்கப்பட்டது
ஃபயாஸ், சிங்கம், புலி போன்ற பெரும்பூனைகளை விரும்புகிறார். நாடு முழுவதும் தனியார் வசம் இருக்கும் இத்தகைய இடங்களில் அவரது இடம்தான் மிகப் பெரியது என நம்பப்படுகிறது.
அவருக்கு வயது 38. அவர், சிங்கம், புலி போன்ற பெரும்பூனை குட்டிகளையும் குட்டி போடக்கூடிய ஜோடிகளையும் கடந்த 10 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்துள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் மிகப்பெரிய சிங்க வியாபாரிகளில் ஒருவராக ஃபயாஸ் கருதப்படுகிறார்.
சிங்கம், புலி, பூமா, சிறுத்தை, ஜாகுவார் போன்ற பெரும்பூனை இனங்கள், அதிகாரம், அந்தஸ்து, அரச விசுவாசம் ஆகியவற்றுக்கான அடையாளமாக வெகு காலத்திற்கு இருந்துள்ளன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் ஆளும்கட்சியான முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியின் அடையாளமாக இருப்பது புலி.
அதைவிட அண்மையில், டிக்டோக், இன்ஸ்டாகிராம் போன்ற குறுங்காணொளி செயலிகள் வந்த பிறகு இந்த விலங்குகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் சிங்கங்கள் திருமண நிகழ்ச்சிகளுக்குக்கூட கொண்டு வரப்படுகின்றன.
சமீபத்தில், செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட ஒரு சிங்கம் தப்பித்து, லாகூரில் ஒரு சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவுகளை ஃபயாஸ் போன்றவர்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய புதிய விதிகளின்படி, உரிமையாளர்கள் பதிவுக் கட்டணமாக ஒவ்வொரு விலங்குக்கும் தலா 50,000 பாகிஸ்தான் ரூபாயை (176 டாலர்) செலுத்த வேண்டும். பண்ணைகள் அதிகபட்சமாக இரண்டு இனங்களைச் சேர்ந்த 10 விலங்குகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இந்த இடங்கள் பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட வேண்டும்.
புதிய விதிகளை மீறினால், இரண்டு லட்சம் பாகிஸ்தான் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, மிக மோசமான குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.
லாகூரின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மற்றொரு இடத்தில் மேல் தோலில் மண் படிந்த நிலையில், ஐந்து சிங்கக் குட்டிகள் ஒரு கூண்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்தபடி, “இவற்றின் தாய் எங்கே?,” என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்.
அருகில் பல கூண்டுகள் காலியாக இருந்தன. சிங்கங்களையும், குட்டிகளையும் ஒருவர் உரிமம் இல்லாமல் வளர்த்து சட்டவிரோதமாக இனப்பெருக்கம் செய்து வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் காப்பாளரை சிக்க வைத்துவிட்டு உரிமையாளர் தப்பிவிட்டார்.
“நான் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்க்கப்பட்டேன்,” என டிரக் ஒன்றின் பின்புறத்தில் அமர வைக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போது அந்தக் காப்பாளர் புலம்பினார்.
பட மூலாதாரம், Fayyaz
படக்குறிப்பு, இப்போது தனது இடத்தை உயிரியல் பூங்காவாக மாற்ற ஃபயாஸுக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் குட்டிகளின் தாயை எடுத்துச் சென்று ஒளித்து வைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட குட்டிகள் தற்போது லாகூரில் உள்ள அரசாங்க உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விலங்குகள் பல்லாண்டுக் காலமாக விற்பனை செய்யப்படும் ஒரு நாட்டில், “இந்தச் சோதனைகள் மேம்போக்காக மட்டுமே நடத்தப்படலாம்” என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நூற்றுக்கணகான, ஆயிரக்கணக்கான பெரும் பூனைகள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் வளர்க்கப்படலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
“இதற்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும்,” என பிபிசியிடம் தெரிவித்தார் வனத்துறை மற்றும் பூங்காக்கள் இயக்குநர் ஜெனரல் முபீன் எல்லாஹி. பஞ்சாபில் உள்ள சிங்கங்களில் 30-40% பதிவு செய்யப்படாது” என்று அவர் கருதுகிறார்.
இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பெரும்பூனைகள் இடையே இனப்பெருக்கம் செய்ய வைப்பது பாகிஸ்தானில் சாதாரண வழக்கமாகிவிட்டது. இதனால், மரபணுப் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்ட சில பெரும்பூனைகளை கருணைக் கொலை செய்ய வேண்டியிருக்கலாம் என்று விளக்குகிறார் முபீன்.
அதுகுறித்துப் பேசியபோது, “அவற்றுக்கு ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பான கொள்கையை நாங்கள் இன்னமும் பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், லாகூரில் தப்பித்த மற்றொரு சிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டது. அந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஃபயாஸின் இடத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார்.
கூண்டுகளின் அளவு திருப்திகரமாக இல்லை என்றும் அந்தப் பண்ணை ஒரு உயிரியல் பூங்காவாக மாற்றப்பட வேண்டும் எனவும் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதை நிறைவேற்ற ஃபயாஸுக்கு மூன்று மாதம் அவகாசம் உள்ளது.
ஆனால் இந்த விலங்குகளுக்கு இதைவிட அதிகமான வசதிகள் செய்யப்பட வேண்டும் என விலங்குநல உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
“நாங்கள் கேட்பது உயிரியல் பூங்கா அல்ல, சரணாலயம்,” என அல்டமுஷ் சையீத் பிபிசியிடம் தெரிவித்தார். “உயிரியல் பூங்காக்களில் இருக்கும் நிலை குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும், பெரும் பூனைகளை தனிநபர்கள் வளர்ப்பது குறித்த பிரச்னைக்கு அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும்” என அவர் எதிர்பார்க்கிறார்.
“இந்த விஷயத்தில் இடைக்கால ஏற்பாடுகளுக்குப் பதிலாக ஒரு முறையான தீர்வு வேண்டும்” என்கிறார் அவர்.