பட மூலாதாரம், SANSAD TV
பாகிஸ்தான் உடனான மோதலின்போது அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் உடன் மே 9-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி இன்று தெரிவித்தார்.
முன்னதாக பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜே டி வான்ஸ் உடனான உரையாடல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும் போது, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் அழைத்து தெரிவித்தார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார், இந்தியா என்ன செய்துக் கொண்டிருந்தது என்று பேசியிருந்தார்.
செவ்வாய்கிழமை மாலை அவையில் பேசிய பிரதமர் மோதி, ” மே 9-ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஒரு மணி நேரமாக என்னை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். நான் பிறகு அவரை அழைத்து, மூன்று நான்கு முறை நீங்கள் அழைத்துள்ளீர்களே என்றேன். அப்போது அவர் பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தவுள்ளதாக கூறினார். பாகிஸ்தானுக்கு அந்த எண்ணம் இருந்தால், அவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், நாங்கள் இன்னும் பெரிய தாக்குதலை நடத்துவோம் என்று பதில் அளித்தேன்” என்று தெரிவித்தார்.
மேலும் “ஒவ்வொரு தோட்டாவுக்கும் குண்டுகள் கொண்டு பதில் அளிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். மே 10ம் தேதி காலையில் பாகிஸ்தானின் ராணுவ வலிமையை நாம் அழித்துவிட்டோம். இதுதான் நமது பதில்” என்று பேசினார்.
பட மூலாதாரம், SANSAD TV
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்றது. செவ்வாய்கிழமை மாலை மக்களவையில் பேசிய பிரதமர் மோதி இந்தியாவிடம் பாகிஸ்தான் இனியும் தாக்காதீர்கள் என்று கெஞ்சியதாகவும், காங்கிரஸ் கட்சி சுயநல அரசியல் செய்வதாகவும், தன்னை தாக்குவதையே குறியாக கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல் குறித்த விவாதத்தின் போது, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் அதன் பின் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது குறித்து மத்திய அரசு பெருமைப்படுகிறதே தவிர, முதலில் அந்த தாக்குதல் ஏன், எப்படி நடந்தது என்ற கேள்விக்கு ஏன் பதில் அளிக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததும் அவையில் விவாதப் பொருளானது. ராணுவ இலக்குகளை குறி வைக்கவில்லை என்று கூறி விமானப்படையின் கைகளை மத்திய அரசு கட்டிப்போட்டது என்று காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோதி செவ்வாய்கிழமை மாலை அவையில் பேசினார்.
ஷார்ட் வீடியோ
‘இனியும் தாக்காதீர்கள் என்று இந்தியாவிடம் கெஞ்சியது பாகிஸ்தான்’ – மோதி
“இந்தியாவின் பக்கத்தை காண முடியாதவர்களுக்கு கண்ணாடியை திருப்பி காட்டுவதற்காக நான் வந்திருக்கிறேன். இந்தியா தனது பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுப்பதை உலகின் எந்த நாடும் எதிர்க்கவில்லை. இந்தியாவுக்கு பிரிக்ஸ் (BRICS) நாடுகள், குவாட் நாடுகள், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. ஆனால் நாட்டின் ஹீரோக்களின் வீரத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்கவில்லை.” என்றார் பிரதமர் மோதி.
மேலும், “மூன்று நான்கு நாட்கள் கழித்துதான் காங்கிரஸ் , 56 இன்ச் எங்கே போனார், மோதி எங்கே போனார், மோதி தோல்விடைந்துவிட்டார் என்று கூற ஆரம்பித்தனர். பஹல்காமில் மக்கள் கொல்லப்பட்ட போதும் அவர்கள் தங்கள் சுயநல அரசியலை செய்யவே நினைத்தார்கள், என்னை தாக்கினார்கள்.” என்றார்.
அவர் இதை பேசிய போது, அவையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை அமளியில் ஈடுபடாமல் இருக்க சொன்னார்.
பிறகு தொடர்ந்து பேசிய மோதி, “ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்றதற்கு நமது ராணுவம் 22 நிமிடங்களில் பழி தீர்த்தது” என்றார்.
முதல் முறையாக இந்தியா இது போன்ற உத்தியை கையாண்டதாக கூறிய மோதி, “நாம் இதுவரை செல்லாத இடங்களை அடைந்தோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தீவிரவாத தளங்களை அழித்தோம். பஹவல்பூர் மற்றும் முரித்கே தரைமட்டமாக்கப்பட்டன” என்றார்.
“ஆபரேஷன் சிந்தூரின் போது மொத்த உலகமும் சுய சார்பு இந்தியாவின் வலிமையை அங்கீகரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளும் ட்ரோன்களும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தியது.
சிந்தூர் முதல் சிந்து வரை இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. தீவிரவாத சூத்திரதாரிகள் இதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது என்று புரிந்துக் கொண்டுள்ளனர்” என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை, தீவிரவாதத்தை மட்டுமே கண்டித்தன என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய மோதி, “மூன்று நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசின. இந்தியா மொத்த உலகத்தின் ஆதரவையும் பெற்றது. ஆனால் காங்கிரஸ் நமது படைகளின் வீரத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியா மூன்று விசயங்களை தீர்மானித்துள்ளது என்பதை தெளிவுப்படுத்தியது. இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால், நாம் நமது வழியில் நமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நாம் விரும்பும் நேரத்தில் பதிலடி கொடுப்போம், அதோடு அணு ஆயுத மிரட்டல் எதுவும் இப்போது வேலை செய்யாது. தீவிரவாதத்துக்கு துணைபோகும் அரசையும் தீவிரவாத செயல்களின் சூத்திரதாரிகளையும் வெவ்வேறாக பார்க்க மாட்டோம்.
ஆபரேஷன் (சிந்தூர்) முடிந்து சில நிமிடங்களில், பாகிஸ்தான் ராணுவம் என்ன நினைக்கிறது என்று தெரிந்துக் கொள்ள நமது ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திடம், எங்களுக்கு சில இலக்குகள் இருந்தன, அதை நாங்களை அடைந்து விட்டோம் என்று கூறியது.
பாகிஸ்தான் மூளையை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் தீவிரவாதிகளுடன் நின்றிருக்க மாட்டார்கள். ஆனால் வெட்கம் இல்லாமல் அவர்கள் தீவிரவாதிகளுடன் நின்றார்கள். மிகுந்த இழப்புகளை சந்தித்த பிறகு எங்களை தாக்காதீர்கள், இனியும் எங்களால் தாங்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் (DGMO) கெஞ்சினார்.” என்று தெரிவித்தார்.
“பஹல்காம் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்” – அமித் ஷா
பட மூலாதாரம், SANSAD TV
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவையில் பேசிய போது, “பைசரன் பள்ளத்தாக்கில் (பஹல்காம்) நமது மக்களை கொன்ற மூன்று யங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்த அவையில் இருப்பவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
இந்த நடவடிக்கை குறித்து அமித் ஷா மேலும் விளக்கம் அளித்த போது, “ஆபரேஷன் மகாதேவ் 22 மே, 2025 அன்று தொடங்கப்பட்டது. பஹல்காமில் மக்கள் கொல்லப்பட்ட அதே இரவில், ஜம்மு காஷ்மீரில் ஒரு பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது.
தாக்குதல் மதியம் 1 மணிக்கு நடந்தது, நான் 5:30 மணிக்கு ஸ்ரீநகருக்கு சென்றுவிட்டேன். ஏப்ரல் 23 அன்று ஒரு பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, கொடூரமான கொலையாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடாது என்பதுதான்.
மே 22 அன்று, தன்சிகம் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. மே முதல் ஜூலை 22 வரை, இந்த தகவலை உறுதிப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.
திங்களன்று நடந்த ‘ஆபரேஷன் மகாதேவ்’ பற்றிய தகவல்களையும் தான் வழங்க விரும்புவதாக கூறிய அமித் ஷா, “நேற்று (திங்கட்கிழமை), ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை மூலமாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியாக இருந்தார், அவர் பஹல்காம் மற்றும் காகங்கீர் தாக்குதல்களில் ஈடுபட்டவர். மற்ற இருவரான ஆப்கனும் ஜிப்ரானும் லஷ்கர்-இ-தொய்பாவின் முதல்நிலை பயங்கரவாதிகள் ஆவர்.” என்றார்.
மேலும், “நாங்கள் அவசரப்படவில்லை. பயங்கரவாதிகள் தாக்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்களின் தடயவியல் அறிக்கையை நாங்கள் ஏற்கெனவே தயாரித்திருந்தோம். நேற்று இந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோது, அவர்களின் மூன்று துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தோட்டாக்கள் இந்த துப்பாக்கிகளிலிருந்து வந்தவை.
இந்தச் செய்தியைக் கேட்கும்போது, ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் (எதிர்க்கட்சியினர்) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சியடையவில்லை. பயங்கரவாதிகளின் மதத்தைப் பார்த்து வருத்தப்பட வேண்டாம்.
1,055 பேரிடம் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பது வரையப்பட்டது.
தேடுதலின் போது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர்.” என அமித் ஷா தெரிவித்தார்.
பட மூலாதாரம், SANSAD TV
‘விமானப்படைகளின் கைகளை அரசு கட்டிப்போட்டது’ – ராகுல் காந்தி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசுகையில், ” இந்த மோதலின் போது ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. தீவிரவாதத்தை கண்டித்தார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
பிரதமரின் பிம்பத்தை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆபரேஷன் சிந்தூர். இந்திரா காந்திக்கு இருந்த தைரியத்தில் பாதியாவது மோதிக்கு இருந்தால் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து இந்திய விமானங்களை நாம் இழக்கவில்லை என்றும் போர் நிறுத்தத்தை டிரம்ப் செய்யவில்லை என்றும் தெளிவுப்படுத்தட்டும்.
விமானங்களை இழந்ததாக விமானப்படை கூறியது, ஏனென்றால் அரசியல் தலைமை ராணுவ தளங்களை (பாகிஸ்தான்) தாக்குவதில் கட்டுப்பாடு விதித்தது. விமானப்படைகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இது விமானப்படையின் தவறு அல்ல, மத்திய அரசின் தவறு.
ஆபரேஷன் சிந்தூர் 1:05 மணிக்கு தொடங்கியது, 22 நிமிடங்கள் நீடித்தது. 1.35 மணிக்கு நாம் பாகிஸ்தானை அழைத்து, நாங்கள் ராணுவ தளங்கள் அல்லாத இடங்களை தாக்கியுள்ளோம், மோதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டோம்.
ஆபரேஷன் சிந்தூரை 1971 போருடன் ஒப்பிட்டு பேசினார் ராஜ்நாத் சிங். ஆனால் இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. 1971-ல் இந்தியாவிடம் அரசியல் உறுதி இருந்தது. படைகள் செயல்பட முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் பெரிய வெளியுறவுக் கொள்கை சவால், சீனாவையும் பாகிஸ்தானையும் தள்ளி வைப்பது. நான் இது குறித்து எச்சரித்தேன். ஆனால் இந்த அரசு அவர்களை ஒன்றாக கொண்டு வந்துவிட்டது. போருக்கு சென்ற பிறகு தான் எதிரில் இருப்பது பாகிஸ்தான் அல்ல, பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாக உள்ளன என்று தெரிய வருகிறது
ஆபரேஷன் இன்னும் முடியவில்லை, ஆனால் அதற்குள்ளாகவே வெற்றி அறிவிக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானை தடுத்து நிறுத்திவிட்டோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று மத்திய அரசு கூறி வரும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்து அளித்துள்ளார். அவரிடம் போரை நிறுத்தியதற்காக டிரம்ப் நன்றி கூறினார். டிரம்பை பொய்யர் என்று கூறும் தைரியம் உண்டா?” என்று பேசினார்.
பாதுகாப்புக்கு ஏன் யாரும் இல்லை? -பிரியங்கா காந்தி
பட மூலாதாரம், SANSAD TV
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, ”பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது குறித்து அரசு பெருமைப்படுகிறது, ஆனால் இந்த தாக்குதல் ஏன் முதலில் நடைபெற்றது என்று ஒரு முறை கூட அரசு கூறவில்லை” என்றார்.
“நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் பேசினார், அப்போது பல விசயங்களை பேசினார். ஆனால் ஒரு விசயத்தை பேசவில்லை. ஏப்ரல் 22, 2025 அன்று 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் – ஏன் எப்படி நடந்தது? இந்த அரசு எப்போதும் கேள்விகளிலிருந்து தப்பிக்க முயல்கிறது.” என்றார்.
கடந்த சில காலமாகவே காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்து விட்டது, அமைதி திரும்பி விட்டது என்று அரசு பிரசாரம் செய்ததாக கூறிய அவர், “பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட போது ஏன் பாதுகாப்பு படையினர் யாரும் இல்லை? அரசை நம்பி தானே மக்கள் அங்கு சென்றனர். இந்த நாட்டின் பாதுகாப்பு, உள்துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா, பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“தலைமைத்துவம் என்பது பாராட்டு எடுத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆனால் பொறுப்புகள் எடுத்துக் கொள்வதும்தான். நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறை ஒரு சண்டை திடீரென நிறுத்தப்பட்டது, அதன் முடிவு அமெரிக்க அதிபரால் அறிவிக்கப்படுகிறது” என்று அவர் பிரியங்கா காந்தி பேசினார்.
‘போரை நிறுத்தியதாக கூறிய டிரம்பை மறுக்காதது ஏன்?’ – கனிமொழி
பட மூலாதாரம், SANSAD TV
இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை, அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அரசுதான் பொறுப்பு. அவர்களை காப்பாற்றுவதில் இருந்து அரசு ஏன் தவறிவிட்டது? பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன என்பதை அறிய விரும்புகிறேன்.” என கனிமொழி தெரிவித்தார்.
எந்த விதமான பாதுகாப்பு இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கனிமொழி கேள்வியெழுப்பினார். பஹல்காம் தாக்குதலால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய கனிமொழி, “இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை இந்தியா நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்கள் வெளியுறவு கொள்கையா? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்குகூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை; இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா?” என்றார்
‘பிரிவு 370-ஐ நீக்கியதால் அமைதி திரும்பியதா?’ – திருமாவளவன்
பட மூலாதாரம், SANSAD TV
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து மக்களவையில் பேசுகையில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு என்ன இழப்பீடு வழங்கியது, வேலை வாய்ப்பு வழங்கியதா என்ற விவரம் தெரியவில்லை” என்றார்.
மேலும், ”படுகொலையை தடுத்து இருந்தால் பெருமை படலாம், பாராட்டலாம். 26 பேர் உயிரிழந்துவிட்டார்கள், திருப்பி தாக்கிவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறோம். இந்தியா பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது மிக வலிமையான நாடு. ஆனால் இந்தியாவுக்குள் மிக இலகுவாக நுழைந்து தாக்க முடியும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, ஆட்சி நிர்வாகத்தின் தோல்வி என்பதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். காஷ்மீர் நிலைபாடு தோல்வி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. அரசியல் சாசன சட்டம் 370 நீக்கப்பட்டால் காஷ்மீரில் அமைதி நிலவும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது? பாதுகாப்புப் படை வீரர்கள் எங்கே இருந்தார்கள்? இது மிகப்பெரிய அளவில் சந்தேகத்தை எழுப்புகிறது?” என்று பேசினார்.
ஆ.ராசா பேசியது என்ன?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், ” அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார், ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். மே 9ம் தேதி அமெரிக்காவின் துணை அதிபர் ஜே டி வான்ஸ், இந்திய பிரதமரை அழைத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் போகிறதென கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். உங்களுக்கு ராணுவம் உள்ளது, உளவுத்துறை உள்ளது? என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி, நிர்வாகத்திறனின் தோல்வி. மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை. கார்கில் போர் நடந்த போது எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆலோசிக்கப்பட்டார்கள். போருக்கு பிறகு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதித்தது. ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டீர்கள்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு