பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் மாவட்டத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கைக்கு எதிரான பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த காவல்துறையினர் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளையில், ஆயுதக்குழுவை சேர்ந்த 18 பேரும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரி ஹைதர் ஜமானும் ஒருவர் என்று கோஹாட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நௌமன் ஜெப் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.
கைபர் பக்துன்க்வா காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கோஹாட் நகருக்கு அருகிலுள்ள தராபுகாச் பகுதியில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறையினர் கூட்டாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த அறிக்கையில், “நடவடிக்கையை முடித்துவிட்டுக் காவல்துறைக் குழுவினர் திரும்பிக்கொண்டிருந்தபோது, குற்றச் செயல்களில் ஈடுபடும் சக்திகளின் தூண்டுதலின் பேரில் ஃபித்னா அல்-கவாரிஜ் அமைப்பினர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களுடன் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். இதையடுத்து, 18 கவாரிஜ்கள் நரகத்துக்கு அனுப்பப்பட்டனர்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் 10 பேரின் உடல்களும், காயமடைந்த 10 பேரும் தங்களது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாக, கோஹாட் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் தாஹிர் தெரிவித்தார்.
படுகாயமடைந்த இருவர் பெஷாவருக்கு மாற்றப்பட்டனர். மற்ற எட்டு பேருக்கும் கோஹாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் யார்?
பட மூலாதாரம், Rescue 1122
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபன் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகளைக் குறிப்பிடுவதற்கு பாகிஸ்தான் அரசு ‘ஃபித்னா அல்-கவாரிஜ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
தராபு காச் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கைபர் பக்துன்க்வா காவல்துறையும் உள்ளூர் சிவில் நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் ஃபித்னா அல்-கவாரிஜ் அமைப்பினருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தையும் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது நௌமன் ஜெப் கூறுகையில், தாக்குதலின்போது காவல்துறைக்குச் சொந்தமான ஐந்து வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்து காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் கூறினார்.
கைபர் பக்துன்க்வா ஆளுநர் பைசல் கரீம் குண்டி, காவல்துறையினர் உயிரிழந்ததற்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையையும் கேட்டுள்ளார்.
பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 30 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் கைபர் பக்துன்க்வா மற்றும் பழங்குடிப் பகுதிகளின் சில இடங்களில் தீவிரவாத நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்தன. அவர்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் ஆளுநர் ஆட்சியும் அவசரநிலையும் நடைமுறையில் உள்ளன. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தலைமையிலான கைபர் பக்துன்க்வா அரசு, “பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது” என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
தலைமுறை தலைமுறையாகத் தங்கத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள்
பட மூலாதாரம், Mohammad Ravan
வட பாகிஸ்தானில், சிந்து நதியின் கரையோரங்களில் மணலை சலித்து தங்கம் எடுக்கும் பணியில் மக்கள் ஈடுபடுவதைப் பொதுவாகக் காண முடியும். பாகிஸ்தான் அரசு இந்தச் சுரங்க நடவடிக்கையைச் சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும், இப்பகுதி முழுவதும் ஏராளமான இயந்திரங்களைக் காண முடிகிறது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, குஷால்கர் மற்றும் ஷக்கர்தாரா பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள தராபுக்ச், சிந்து நதிக்கரையோரமாக நீண்டு கிடக்கும் ஒரு பகுதியாகும்.
இங்குள்ள ஆற்றங்கரைகளில் தங்கம் கிடைக்கிறது.
ஆற்றங்கரைகளில் தங்கம் கிடைப்பது தொடர்பாக இப்பகுதியில் உள்ளூர் குழுக்களிடையே கடந்த காலங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் பலமுறை இந்த இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 3,180 கிலோமீட்டர் நீளம் கொண்ட சிந்து நதி, திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. பாகிஸ்தானின் சமவெளிப் பகுதிகளுக்குப் பாசன வசதியையும் இந்த நதி வழங்குகிறது.
சிலருக்கு இந்த நதி உண்மையிலேயே தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இடமாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரமும் இந்த நதியையே சார்ந்துள்ளது.
ஆறுகளில் தங்கம் ஏன் காணப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
அபோட்டாபாதில் உள்ள கோம்சாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் முனைவர் ஃபரிதுல்லாவின் கூற்றுப்படி, சிந்து நதிக்கரைகளில் காணப்படும் மண் மற்றும் மணலில் இயற்கையாகவே தங்கம் கலந்துள்ளது.
அவரது கூற்றுப்படி, மலைகளின் ஆழத்தில் உள்ள உலோகப் படிவங்களிலிருந்து பொதுவாகத் தங்கம் உருவாகிறது.
மலைகளில் உள்ள சுரங்கங்களிலிருந்து தங்கத் துகள்களும் சிறிய துணுக்குகளும் பல்வேறு வழிகளில் அடித்துச் செல்லப்பட்டு, ஆறுகள் மற்றும் நீர்வழிகளில் கலக்கின்றன.
மழைநீரோ அல்லது பனிப்பாறைகளிலிருந்து உருகி வரும் நீரோ மலைகளில் இருந்து கீழ்நோக்கிப் பாயும்போது, மலைப் பாறைகள் மற்றும் மண்ணுடன் சிறிய தங்கத் துகள்களையும் ஆற்றுக்குள் கொண்டு வருகின்றன.
ஆறு பாயும்போது, அதிக எடை கொண்ட இந்தத் துகள்கள் கீழே படிந்து, ஆற்றங்கரைகளில் உள்ள மணல் மற்றும் சேற்றுடன் கலக்கின்றன. இதனால்தான் சிந்து நதியின் மணல் மற்றும் சேற்றில் தங்கத்தின் தடயங்கள் காணப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாப் அரசு மற்றும் கைபர் பக்துன்க்வா அரசு ஆகியவை சிந்து நதியில் தங்கம் தேடுபவர்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அரசுப் பதிவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற சட்டவிரோதத் தங்கத் தேடல் நடவடிக்கைகள் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிந்து நதி மற்றும் காபூல் நதிக்கரைகளில் தங்கம் தேடுவதற்கும், உரிய அனுமதியின்றிச் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கைபர் பக்துன்க்வா அரசு தடை விதித்துள்ளது. மேலும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்வாபி, நௌஷேரா, கோஹாட் உள்ளிட்ட தொடர்புடைய பகுதிகளில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றுவதற்கான அதிகாரமும் உள்ளூர் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான பாரம்பரிய முறை என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஆற்றங்கரைகளில் இருந்து மணல், சரளைக் கற்கள் மற்றும் பாறைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர், தட்டுகள், சல்லடைகள், தொட்டிகள் மற்றும் சிறிய மண்வெட்டிகளைப் பயன்படுத்தி அவை தண்ணீரில் கழுவப்படுகின்றன.
இதன் மூலம் எடை குறைந்த மண் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. அதேவேளையில், அதிக எடை கொண்ட நுண்ணிய தங்கத் துகள்கள் அடிப்பகுதியில் தங்கிவிடுகின்றன. இந்தச் செயல்முறையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கில்கித் – பால்டிஸ்தானில் உள்ள சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் கரையோரங்களில் தங்கம் எடுக்கும் பாரம்பரிய முறை பல நூற்றாண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது என முனைவர் ஃபரிதுல்லா தெரிவிக்கிறார்.
தற்போது இயந்திரங்கள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அகழ்வுப் பொறிகள், நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் தொழில்துறை வடிகட்டும் இயந்திரங்கள் போன்ற கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இயந்திரங்களின் மூலம் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான மணல் மற்றும் மண்ணைச் சுத்திகரித்து, கூடுதலான தங்கத்தைப் பெற முடிகிறது.
முன்பு அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது ஐந்து முதல் ஆறு கிராம் வரை தங்கம் கிடைக்கிறது.
இருப்பினும், கனரக இயந்திரங்கள் நிறுவப்பட்டதால், இப்பகுதியில் மாசுபாடு மற்றும் ஆற்றங்கரை அரிப்பு தொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ளன.
கில்கித் – பால்டிஸ்தான் சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத் துறையிடம், தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவுகள் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது இந்த இரண்டு துறைகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு