பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஜெர்மி போவன்
- பதவி, சர்வதேச ஆசிரியர்
-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்ரேலில், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலத்தீன பிரச்னை சமாளிக்கக் கூடிய ஒன்று தான் என்று நம்பினார். உண்மையான அச்சுறுத்தல் இரான் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
காஸாவிற்கு நிதி வழங்க கத்தாரை நெதன்யாகு அனுமதித்திருந்தாலும், ஹமாஸுக்கு எதிரான அவரது தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. வெளியுறவுக் கொள்கையில் அவரது உண்மையான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுக்க இது அவருக்கு உதவியது. அதாவது, இரானை எதிர்கொள்வது மற்றும் சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது- இவையே அந்த சிக்கல்கள்.
அமெரிக்காவில், அப்போதைய அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் சௌதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என நம்பினர்.
ஆனால், இது எல்லாம் தொடர்ச்சியான மாயைகள்.
நெதன்யாகுவும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் ராணுவமும் செய்த தவறுகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பேரழிவு தாக்குதலை நடத்த ஹமாஸ் அமைப்புக்கு உதவின. அந்த தோல்விகளை ஆராய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க நெதன்யாகு மறுத்துவிட்டார்.
ஜோர்டான் நதிக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையிலான நிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நூற்றாண்டு காலமாக நீடித்த மோதல் தீர்க்கப்படாமல், மோசமடைந்து, 1948 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் நடந்தது போலவே ஒரு போராக வெடிக்கவிருந்தது.
2023, அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக போர் நடைபெற்று வரும் நிலையில், காஸாவில் மோதல் மற்றொரு திருப்புமுனை கட்டத்தில் உள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள்
பட மூலாதாரம், Getty Images
இந்தப் போரைப் பற்றி செய்தி வெளியிடுவது பத்திரிகையாளர்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.
2023, அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதன் பின்னர் காஸாவிலிருந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிடுவதை இஸ்ரேல் தடை செய்துள்ளது.
பாலத்தீனப் பகுதிக்குள் இருந்த பாலத்தீன பத்திரிகையாளர்கள் துணிச்சலான பணிகளைச் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் முக்கிய உண்மைகள் தெளிவாக உள்ளன. 2023, அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், முக்கியமாக இஸ்ரேலிய பொதுமக்கள். ஹமாஸ் 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்றது, அவர்களில் காஸாவிற்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
அன்றிலிருந்து இஸ்ரேல் தொடர்ச்சியான போர்க்குற்றங்களைச் செய்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.
இஸ்ரேலின் பட்டியலில் காஸா பொதுமக்களின் பட்டினி, இஸ்ரேலியப் படைகள் ராணுவ நடவடிக்கைகளின் போது காஸா மக்களை பாதுகாக்கத் தவறியது, இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டது மற்றும் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ராணுவ அபாயத்திற்கு முழு நகரங்களையும் வேண்டுமென்றே அழித்தது ஆகியவை அடங்கும்.
போர்க் குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரன்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுகின்றனர்.
பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப் படுகொலை செய்வதாகக் குற்றம்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரும் ஒரு சட்ட ரீதியான செயல்பாடுகளை இஸ்ரேல் கண்டித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுக்கிறது. அவை யூத எதிர்ப்பு ‘‘அவதூறுகள்’ என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலின் நட்பு நாடுகளின் விமர்சனம்
இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் நண்பர்கள் குறைந்து வருகின்றனர். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு அதனோடு அணி திரண்ட நட்பு நாடுகள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தையைக் கண்டு பொறுமை இழந்துவிட்டன.
இஸ்ரேலின் மிக முக்கியமான கூட்டாளியான டொனால்ட் டிரம்ப் கூட நெதன்யாகு விஷயத்தில் பொறுமை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவின் புதிய ஆட்சியை டிரம்ப் அங்கீகரித்து, ஊக்குவித்து வருகிறார் எனும் போது, டமாஸ்கஸ் மீது குண்டுவீச்சு நடத்த நெதன்யாகு உத்தரவிட்டது டிரம்புக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகள் சில மாதங்களுக்கு முன்பே பொறுமை இழந்து விட்டன.
இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜூலை 21-ஆம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றொரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
காஸாவில் பொதுமக்கள் படும் துன்பங்களை விவரிக்க அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
ஐ.நா மற்றும் முன்னணி உலகளாவிய நிவாரணக் குழுக்களால் பயன்படுத்தப்படும் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான முறைகளுக்கு மாற்றாக, இஸ்ரேல் அறிமுகப்படுத்திய காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் தோல்வியுற்ற மற்றும் மோசமான மனிதாபிமான உதவி விநியோக முறை குறித்தும் அவர்கள் பேசினர்.
“காஸாவில் பொதுமக்களின் துன்பம் புதிய எல்லைகளை எட்டியுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இஸ்ரேலிய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி விநியோக மாதிரி ஆபத்தானது, ஸ்திரமின்மையைத் தூண்டுகிறது மற்றும் காஸா மக்களின் கண்ணியத்தை இழக்கச் செய்கிறது. உதவிகளை சொட்டு மருந்து போல கொடுப்பதையும், தண்ணீர் மற்றும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலும் குழந்தைகள் உள்பட பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொல்வதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.”
“உதவியை நாடிவந்த 800க்கும் மேற்பட்ட பாலத்தீனயர்கள் கொல்லப்பட்டிருப்பது கொடூரமானது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேலிய அரசாங்கம் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேல் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளரான டேவிட் லாமி, வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பொது மன்றத்தில் இதே போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது சொந்த அறிக்கையுடன், கூட்டு அறிக்கையையும் தொடர்ந்து வாசித்தார்.
வலுவான வார்த்தைகளுக்குப் பதிலாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பும் தொழிற்கட்சி எம்.பி.க்களுக்கு இது போதாது.
அரசாங்கம் இன்னும் தீர்க்கமாகச் செயல்படத் தயங்குவது குறித்து “சீற்றம்” இருப்பதாக ஒருவர் பிபிசியிடம் கூறினார். அவர்களின் இலக்குகளில் முதன்மையானது பாலத்தீன அரசை அங்கீகரிப்பது, இது ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டாக அவ்வாறு செய்வது குறித்து விவாதித்தன, ஆனால் இதுவரை அதற்கான காலம் வரவில்லை என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.
போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு
இஸ்ரேலின் நெசெட் (Knesset) என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் கோடை விடுமுறைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன, அது அக்டோபர் வரை நீடிக்கும். அதாவது, காஸாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தீவிர தேசியவாதிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எனும் அச்சுறுத்தலில் இருந்து அவருக்கு சற்று ஓய்வு கிடைக்கும்.
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தீவிர தேசியவாதிகள் அச்சுறுத்தியதன் விளைவாகவே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெதன்யாகு தயங்குகிறார். தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அக்டோபர் 7ஆம் தேதி அவர் செய்த தவறுகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் மீது நீண்ட காலமாக ஊழல் வழக்குகளின் விசாரணை முடிவையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒரு போர் நிறுத்தம் காஸாவின் பொதுமக்களுக்கும், நீண்ட காலமாக ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கும் உயிர் வாழும் வாய்ப்பிற்கான சாத்தியமாகத் தெரிகிறது.
அதற்காகப் போர் முடிந்துவிடும் என்று அர்த்தமல்ல. அங்கே போர் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் படுகொலைகள் மூலமாக அல்லாமல், ராஜதந்திர வழிகள் மூலமாக பிரச்னைகளுக்கு தீர்வு காண மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு