ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மலை கிராமங்களுக்குப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பர்கூர் மலையில் உள்ள பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுயில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, பாலாற்றில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் குட்டையூர், வேலம்பட்டி, மட்டி மரத்தள்ளி ஆகிய 3 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.
சங்கராபாளையத்தில் 4.6 செ.மீ. மழை
மேலும் அத்தியாவசியத் தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக கூட கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்துக்காக பாலாற்றை கடந்து சென்று வருகின்றனர். பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்த பிறகுதான் இவர்களது போக்குவரத்து சகஜமான நிலைக்கு வரும் என்பதால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சங்கராபாளையம், வரட்டுப்பள்ளம் அணை பகுதி மற்றும் ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை அதிக பட்சமாக சென்னிமலை பகுதியில் 8.3 செ.மீ. மழையும், அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியில் 4.6 செ.மீ. மழையும் பதிவாகியிருந்தது.
சுவர் இடிந்து பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் 102 மி.மீட் மழை பதிவாகி இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பலத்த காற்றுடனும், பயங்கர இடி-மின்னலுடனும் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித் தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்மேட்டில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் விக்கிரவாண்டி அடுத்த திண்டிவனம் தாலுகா மோழியனூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பாஞ்சாலி (வயது 60). வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை, திருப்பூர்
கோவையில் காந்திபுரம், கவுண்டம்பாளையம், உக்கடம், குனியமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
திருப்பூரில் நேற்று அதிகாலை கோவில்வழி, வீரபாண்டி, கே.செட்டிப்பாளையம், அவினாசி ரோடு, குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பெரிச்சிப்பாளையத்தில் சாலையோரம் நின்ற மரம் வேரோடு சாய்ந்தது. இதில் ஒரு மின்கம்பம் உடைந்து விழுந்தது.