படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.கட்டுரை தகவல்
எழுதியவர், ஜார்ஜினா ரென்னார்ட்
பதவி, அறிவியல் & காலநிலை செய்தியாளர்
கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது.
நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் கண்டறிவது மூன்றாவது முறை. டர்ஹாமில் நடைபெற்ற பிரிட்டனின் ராயல் வானியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகள் விளக்கப்பட்டன.
“நாங்கள் அனைவரும் 3I/Atlas வால்மீன் பற்றி அறிந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
“நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையிலான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன். இறுதியாக, எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு வான்பொருளைக் கண்டுபிடித்தோம்,” என்று அவர் கூறினார்.
3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.
மேலும், இதுவரை காணப்பட்ட வால்மீன்களுக்கு இடையிலான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது. அப்போது அது சூரியனில் இருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது.
இப்போது, மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்த வான்பொருள், தனது மண்டலத்தில் உள்ள சூரியனிடம் இருந்து, பூமியில் இருந்து வியாழன் கோள் அமைந்திருக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. அந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையைக் கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் முயன்று வருகின்றனர்.
அது பால்வீதி மண்டலத்தின்(Milky way galaxy) “தடிமனான வட்டில்” (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ். இந்தத் தடிமனான வட்டு என்பது, பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும் ஆதிகால நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
பட மூலாதாரம், ESO/O. Hainaut
படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது சூரிய மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.
3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் இது அதன் சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.
“இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியில் இருந்து வந்த பொருள்,” என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட்.
“இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தைவிட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விண்மீன்களுக்கு இடையிலான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், “அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்தத் தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது” என்று கூறுகிறார்.
இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியில் இருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/’ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையிலான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.