17
பிரான்ஸ் முழுவதும் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை 400க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிஸில் ஆரம்பமாகி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வகுப்பறைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மாணவர்கள் பல நாட்களாக பாடசாலைகளுக்கு முன்பாக மறியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களால் சுமார் 400 பாடசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 48 பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறைந்தது 10 ஆசிரியர்கள் மற்றும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்ததுடன், பஸ் தரிப்பிடங்களை சேதப்படுத்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும் மாணவர்கள், பொலிஸாரை நோக்கி பொருட்களை வீசித் தாக்கியதாகவும், அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் தடியடித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர் சங்கமான யூனியன் சின்டிகல் லைசியனின் தலைவர் ரியாத் ரானி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் மாணவர் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயற்சிப்பதுடன், பொலிஸார் அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்தை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த பொலிஸ் தரப்பு உயர் அதிகாரி நுனேஸ், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மிகவும் நேர்த்தியான மற்றும் விகிதாசார அளவிலான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாணவர்களின் போராட்டங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், குறைந்த ஊதியம் மற்றும் பணிச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆசிரியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரச ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த தொழிற்சங்கப் போராட்டங்கள் பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
