பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், முகமது ஷாஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகம் விவாதிக்கப்படுவதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார சக்திகளின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் எதிர்வினை வந்தது.
‘பிரிக்ஸ்’-இன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு ‘மினி வர்த்தக ஒப்பந்தம்’ (Mini Trade deal) சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அமெரிக்க அதிபர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஜூலை 7, திங்கள்கிழமை (அமெரிக்க நேரப்படி) பல நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராக, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், ‘பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாடும் கூடுதலாக 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கொள்கையில் எந்த விலக்கும் இருக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.
பிரிக்ஸ் ரியோ பிரகடனத்திற்குப் பிறகு டிரம்ப் இதைப் பதிவிட்டதாக நம்பப்படுகிறது. பிரிக்ஸ் 17வது உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘பன்முகத்தன்மை மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்’ என்பதாகும்.
ரியோ பிரகடனம் ‘உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல்’ மற்றும் ‘சர்வதேச ஸ்திரத்தன்மை’ பற்றிப் பேசுகிறது. இதனுடன், ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.
பிரகடனத்தின் இந்த விஷயத்தை குறிப்பிட்டே, டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
‘வர்த்தகத்தின் போக்கைச் சிதைத்து, உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை மீறும் ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக’ ரியோ பிரகடனம் கூறுகிறது.
இது தவிர, ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என பிரகடனம் கூறுகிறது.
இந்தப் பிரகடனம், உலக வர்த்தக அமைப்பினுடைய விதிகளின்படி வர்த்தகத்தை ஆதரிக்கிறது மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பைப் பற்றி வலியுறுத்துகிறது.
டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
‘பிரிக்ஸ்’ நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தது ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு வருவோம்.
இந்தக் கேள்விக்கு, டெல்லியை சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சிக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்-இன் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, “அமெரிக்காவிற்கு எதிராக எல்லாவற்றிலும் ஒரு சதி இருப்பதாக டிரம்ப் கருதுகிறார், மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று கூறுகிறார்.
“அனைத்து நாடுகளும் தனது ‘காலனிகள்’ என்று டிரம்ப் நினைக்கிறார். அவர் தனது கொள்கைகளை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்த விரும்புகிறார்” என்கிறார் அவர்.
இதற்கிடையில், சர்வதேச விவகாரங்களில் நிபுணரான மஞ்சரி சிங், டிரம்பின் அச்சுறுத்தல் குறித்து பேசுகையில், “அமெரிக்கா உறுப்பினராக இல்லாத எந்தவொரு அமைப்பும், எஸ்சிஓ (SCO) அல்லது பிரிக்ஸ் போன்றவை, அமெரிக்க விரோத அமைப்புகள் என்றே டிரம்ப் கருதுகிறார்” என்று கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றான ரஷ்யா மற்றும் சீனாவும் அடங்கும். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் நாணயங்களில் பரஸ்பர வர்த்தகம் செய்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு புதிய சர்வதேச ரிசர்வ் நாணயத்தை ரஷ்யா முன்மொழிந்தது.
“டாலருக்கு இணையான வங்கி முறையைப் பற்றி பிரிக்ஸ் எப்போதும் பேசி வருகிறது. இந்தக் காரணத்திற்காக, டிரம்ப் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்க விரோதியாகக் கருதுகிறார். இருப்பினும், இன்றுவரை இந்த வங்கி முறை குறித்து ஒருமித்த கருத்து இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள். அவை வர்த்தகத்தைச் சார்ந்து உள்ளன, மேலும் வங்கி முறை பற்றிப் பேசுவது அவர்களுக்கு மிகவும் முக்கியம்” என்று மஞ்சரி சிங் கூறுகிறார்.
‘டாலருக்கு எதிரான ஒரு நாணய அமைப்பு’ – இதுவே சர்ச்சைக்கு காரணமா?
பட மூலாதாரம், Getty Images
டாலருக்கு பதிலாக வேறு ஏதேனும் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் யோசனைதான் டிரம்ப் எதிர்ப்பின் அடிப்படை என அஜய் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார்.
“பிரிக்ஸ் அமைப்புக்கு புவியியல் ரீதியாக எந்த தனித்துவமும் இல்லை. ஏனெனில் அது வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கு அரசியல் சக்தி இல்லை, ஆனால் சீனா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடும் அதில் இருப்பது, அதற்கு ஒரு தனி மதிப்பை அளிக்கிறது.”
“பிரிக்ஸ் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் டிரம்ப் அதை அச்சுறுத்துகிறார், எனவே இதற்குக் காரணம் ரிசர்வ் நாணயத்தின் பிரச்னை. எந்த நாடும் அதன் நாணயத்தில் வணிகம் செய்வது பற்றிப் பேசும்போது, அமெரிக்கா இப்படித்தான் பேசுகிறது” என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கா 2012ஆம் ஆண்டில், “பன்னாட்டு வங்கிகளுக்கு இடையிலான நிதிசார்ந்த தகவல் தொடர்புக்கான சங்கத்தில் இருந்து (SWIFT) இரானையும், 2022இல் ரஷ்யாவையும் விலக்கியது. இதன் பொருள், இந்த நாடுகள் இனி அதிகாரபூர்வ டாலர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
“உலகம் முழுவதும் டாலர் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“ரஷ்யா அல்லது இரானுடனான பகையால், அவர்கள் டாலரை பயன்படுத்த முடியாதபடி அமெரிக்கா ஒரு வழியை உருவாக்குகிறது. சீனா அல்லது ரஷ்யா தங்கள் நாணயத்தில் வர்த்தகம் செய்தால், அதற்கு டாலரை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்திய தான் காரணமாக இருக்கும்” என்று கூறினார்.
ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்க முடியுமா?
பிரிக்ஸ் அமைப்புக்கு என ஒரு பொதுவான நாணயம் இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பதிலாக ஐரோப்பா யூரோ நாணயத்தை உருவாக்கியது, ஆனால் அதற்கும் பல சிக்கல்கள் உள்ளன என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“பிரிக்ஸ் அமைப்பில் ஒரு பொதுவான நாணயம் உருவாக்கப்பட்டால், அதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அமைப்பு சீனாவை மையமாகக் கொண்டது, எனவே பல நாடுகள் பொதுவான நாணயத்தில் ஆர்வம் காட்டுவது அரிது” என்கிறார்.
மறுபுறம், “பொது நாணயம் அல்லது பிரிக்ஸ் நாணயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது எளிதல்ல. ஏனெனில் அதில் பல சிக்கல்கள் உள்ளன, மேலும் அது டாலரை நேரடியாக எதிர்க்கிறது. ஒரு பொதுவான நாணயத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஏனெனில் உங்களிடம் அது பெரிய அளவில் இருந்தால், நீங்கள் வர்த்தகம் செய்யும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்” என்று மஞ்சரி சிங் கூறுகிறார்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னர், சீனாவும் ரஷ்யாவும் எஸ்சிஓ போன்ற அமைப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.
பிரிக்ஸ் இப்போது பலவீனமடைந்து வருகிறதா?
பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் அமைப்பு பலவீனமடைந்து வருகிறதா என்ற கேள்விக்கு, பதிலளித்த அஜய் ஸ்ரீவஸ்தவா, “பிரிக்ஸ் ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அதில் உறுப்பினராகவுள்ள அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருக்கவில்லை. புவியியல் ரீதியாககூட அவற்றுக்கு இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. சில ஆய்வாளர்கள் வழங்கிய யோசனையின் அடிப்படையில், இந்த அமைப்பு உருவானது” என்கிறார்.
“இருப்பினும், பிரிக்ஸ் நாடுகள் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது. ஏனென்றால் இன்று அவை பிரிக்ஸ் தொடர்பாகக் கொடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு பயந்தால், நாளை டிரம்ப் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி மிரட்டலாம்.
அமெரிக்கா அதை எப்படிக் கையாளுகிறதோ, அதே வழியில் இந்த நாடுகளும் கையாள வேண்டும், ஏனெனில் அமெரிக்கா ஒன்றும் அதன் மீது குண்டுகளை வீசப் போவதில்லை. இரு நாடுகளும் சமமான லாபம் மற்றும் நஷ்டக் கொள்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
அதே நேரத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் இணை பேராசிரியரான அபராஜிதா காஷ்ய பிரிக்ஸ் பலவீனமடைகிறது என்ற கருத்தை மறுக்கிறார்.
“பிரிக்ஸ் பிளஸ், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகளை உள்ளடக்கி இருப்பதால் பிரிக்ஸ் பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு” என்கிறார்.
இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் கலந்து கொள்ளாதது குறித்துப் பேசிய அபராஜிதா, “இதுவொரு பெரிய பிரச்னை அல்ல. ஏனெனில் ஜின்பிங் தற்போது சீனாவின் உள்நாட்டுப் பொருளாதார சவால்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறார், அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது வருகைகளை மட்டுப்படுத்தியுள்ளார்” என்கிறார்.
மறுபுறம், “சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் பல நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்ததால், பிரிக்ஸ் அமைப்பை பலவீனமாகவோ அல்லது இந்தியா அதை ஆதரிப்பதாகவோ கருதக்கூடாது” என்று மஞ்சரி சிங் கூறுகிறார்.
“இந்த முறை நிகழ்ச்சி நிரல் நல்லாட்சி, செயற்கை நுண்ணறிவு போன்ற பிரச்னைகள் குறித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த உச்சி மாநாடு பற்றி அதிக விவாதங்கள் எழவில்லை” என்கிறார்.
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு, உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக அறிவித்திருந்தார். இந்திய பொருட்களுக்கு 26 சதவிகித வரியை விதிப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
இருப்பினும், ஜூலை 9 வரை இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவிகித வரி விகிதம் என்ற கொள்கை தொடர்ந்தது. ஜூலை 9 என்கிற வரம்பு விரைவில் காலாவதியாகப் போகிறது. அதற்கு முன் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை முதல் அனைத்து நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா இடையே ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பிரிக்ஸ் நாடுகள் மீது வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு, அது இந்தியாவையும் பாதிக்குமா? இந்தக் கேள்விக்கு, இந்தியா உள்படப் பல பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“இந்தியா தற்போது 10 சதவிகித வரியை ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அடுத்து விதிக்கப்படுவதாகக் கூறப்படும் 26 சதவிகித வரி குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இந்தியா தயாராக இல்லை” என்கிறார்.
“அமெரிக்கா இன்று என்ன நினைக்கிறதோ அது ஒருபோதும் இறுதி ஒப்பந்தமாக இருக்காது. ஏனென்றால் அது இன்று ஒரு விஷயத்தைக் சொல்கிறது, நாளை அது வேறொன்றைச் சொல்லும். உதாரணமாக, வியட்நாமுடனான அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கடந்த 20-25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வந்தது, ஆனால் அது உடனடியாக முடிவுக்கு வந்தது” எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
“டிரம்ப், பிரிக்ஸ் அமைப்பு காரணமாக இந்தியா மீது வரிகளை விதித்தால், அதன் ஐடி, மருந்துத் துறை அல்லது ஜவுளி போன்ற தொழில்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும்” என்று அபராஜிதா காஷ்யப் கூறுகிறார்.
அமெரிக்காவின் அழுத்தம் பிரிக்ஸ் மற்றும் குளோபல் சௌத் போன்ற மன்றங்களில் மீண்டும் தீவிரமாக முதலீடு செய்ய இந்தியாவை தூண்டக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
“ஆனால், சீனா ஆதிக்கம் செலுத்தும் மன்றங்களை அதிகமாக சார்ந்திருக்கக் கூடாது என்ற சவாலையும் இந்தியா எதிர்கொள்ளும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு