• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

‘பிரிஜ் பூஷணால் பாதிக்கப்பட்டவர் நான்’ – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் வெளியிட்ட வீடியோ

Byadmin

May 3, 2026


தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இந்திய அரசுதான் பொறுப்பு என வினேஷ் போகத் கூறியுள்ளார்

பட மூலாதாரம், @Phogat_Vinesh

படக்குறிப்பு, தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இந்திய அரசுதான் பொறுப்பு என வினேஷ் போகத் கூறியுள்ளார்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒலிம்பிக் வீராங்கனையும், இந்திய மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, இந்திய மல்யுத்த சம்மேளனம் நடத்தும் ஒரு தரவரிசைப் போட்டி குறித்து பல சந்தேகங்களையும் அச்சங்களையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், “முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த 6 பெண் வீராங்கனைகளில் தானும் ஒருவர்” என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் கோட்டையான கோண்டாவில் ஒரு தரவரிசைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளதாக வினேஷ் போகத் தெரிவித்தார். தனது பாதுகாப்பு மட்டுமன்றி, அந்தத் தொடர் நேர்மையாக நடக்குமா என்பது குறித்தும் வினேஷ் ஆழ்ந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், வினேஷின் பாதுகாப்பிற்குத் தான் ‘தனிப்பட்ட முறையில் உத்தரவாதம்’ அளிப்பதாகக் கூறினார். அதே நேரத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வினேஷ், இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வினேஷ் போகத் தனது பல்வேறு சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிட்ட வீடியோவில், தானும் பாதிக்கப்பட்ட ஒருவர் (Survivor) என்று கூறியதோடு, இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போதைய சூழல் காரணமாகத் தான் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

By admin