பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன.
ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி.
பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன், இந்தியாவின் ஆடைகள், காலணிகள், நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் தொடர்பான பொருட்களை பிரிட்டிஷ் சந்தையில் எளிதாகப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியர்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிக அளவில் பெறுவார்கள் என்றும், மருத்துவ சாதனங்கள் மற்றும் விண்வெளி பாகங்களை மலிவு விலையில் பெற முடியும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், இதனால் பிரிட்டனில் 2,200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு, பாதுகாப்பு, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கு என்ன பயன்?
பட மூலாதாரம், Getty Images
இந்த வாரத் தொடக்கத்தில், மோதி அமைச்சரவை இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. அதே போல் இது நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது ஓர் ஆண்டு ஆகலாம்.
இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது.
டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின்(RIS) இயக்குநர் ஜெனரல் பிஸ்வஜித் தார், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தத்தில் மிக விரைவாக கையெழுத்திட்டுள்ளது என்று கருதுகிறார்.
ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மூன்று ஆண்டுகள் ஆனதற்கான காரணத்தை விளக்கிய பிஸ்வஜித் தார், “இந்தியாவில் ஏராளமான சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வகையான வர்த்தகத்தை சங்கடமானதாக, பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இதை விளக்கி அவர்களைச் சமாதானப்படுத்த, அரசுக்கு நிறைய நேரம் எடுக்கும். அதனால்தான் பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்” என்றார்.
மேலும், “மற்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா எடுத்துக் கொண்ட நேரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது.
பதினெட்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது” என்று பிஸ்வஜித் தார் விளக்கினார்.
ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், இவற்றில் துணிகள் மற்றும் காலணிகள் அடங்கும். அதேபோல், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் உறைந்த இறால்களுக்கான வரிகளையும் இந்த ஒப்பந்தம் குறைக்கும். இதுதவிர, கார்கள் ஏற்றுமதி மீதான வரிகளும் குறைக்கப்படும்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் இந்தியாவில் இருந்து சுமார் 11 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 1,285 பில்லியன் ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. தற்போது வரி குறைப்பு காரணமாக, பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதி மலிவாகும்.
அதே போல, இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் இறக்குமதி செய்வது அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் ஐசிஆர்ஏ (ICRA) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர்.
“கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் உடனான இந்தியாவின் வர்த்தக உபரி ஓரளவு அதிகரித்துள்ளது. ஜவுளி, உலோகங்கள், விவசாயப் பொருட்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்கிறார் அதிதி நாயர்.
அதோடு, “கட்டணக் குறைப்பு காரணமாக இந்திய நுகர்வோர் பயனடைவார்கள். உலோகம், ஆட்டோமொபைல், மருந்துகள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க-வைர நகைகள், துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு பிரிட்டனில் வரி இருக்காது.
“பாஸ்மதி அரிசி, இறால், மசாலாப் பொருட்கள் மற்றும் தேயிலை மீதான இறக்குமதி வரிகளையும் பிரிட்டன் குறைக்கும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களால் பிரிட்டிஷ் சந்தைகளை எளிதாக அணுக முடியும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா நிறைய நன்மைகளை எதிர்பார்க்கிறது” என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார்.
“இந்தியாவுடனான ஏற்றுமதியை பிரிட்டன் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொம்மைகள் மற்றும் ஆடைகள் தொடர்பான துறைகளில் இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
“இந்தத் துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதுவே நமது மிகப்பெரிய தேவை. ஏனெனில் வேலைவாய்ப்பு அதிகரிக்காவிட்டால், வருமானம் அதிகரிக்காது” என்று பிஸ்வஜித் தார் விளக்குகிறார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியா எவ்வளவு பயனடையும் என்று கூறுவதற்கு சில காலம் தேவைப்படும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஷரத் கோஹ்லி.
“ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அங்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள எதிர்க்கட்சி இதை எதிர்க்கிறது. பிரிட்டனின் பொருளாதார நிலை நன்றாக இல்லை. பொருட்களை வாங்க பணம் இல்லாததால் மக்கள் அங்கு பொருட்களை வாங்குவதில்லை” என்று ஷரத் குறிப்பிடுகிறார்.
சேவைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளின் சேவைத் துறையும் பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் சேவைத் துறைக்கும், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளுக்கு பயனளிக்கும். இது வர்த்தகத்தை எளிதாக்குவதோடு, வணிகம் செய்வதற்கான செலவையும் குறைக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளிலும் முதலீட்டை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.
பிரிட்டனின் சேவைத் துறையால், குறிப்பாக ஐடி மற்றும் கல்வித் துறைகளால் இந்தியா பயனடையும் என்கிறார் அதிதி நாயர். இந்தத் துறைகளில் பிரிட்டனின் பங்களிப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்புகிறார்.
“இந்திய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக் கட்டணங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும் பெரிய நன்மைகள் ஏற்படக்கூடும்,” என்று அவர் கூறினார்.
“மூன்று ஆண்டுகளுக்கு சமூகப் பாதுகாப்பு கட்டணங்களில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பது அவர்களின் செலவுகளைக் குறைக்கும். இது அங்கு செல்லும் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பயனளிக்கும்” என்கிறார் பிஸ்வஜித் தார்.
“பிரிட்டனின் சேவைத் துறை மிகப் பெரியது. சேவைத் துறையில் பணியாற்ற அதிகமான இந்தியர்கள் அங்கு வருவதை பிரிட்டனும் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தம் அங்குள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்” என்று அவர் நம்புகிறார்.
பிரிட்டன் பயனடையுமா?
பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பொருளாதாரத்திற்கு 4.8 பில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.560 பில்லியன் நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்தியா சராசரியாக 15 சதவிதம் வரி விதித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இது 3 சதவீதமாகக் குறைக்கப்படும்.
வரிக் குறைப்பு காரணமாக, பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்ய அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
முன்னதாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீது 150 சதவிகிதம் வரி இருந்தது. அது இப்போது 75 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.
மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விஸ்கியை விற்பனை செய்வதில் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு அதிக பயன் கிடைக்கக்கூடும்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் என்ன நன்மையைப் பெறும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிஸ்வஜித் தார், “பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பிரிட்டன் பின்தங்கியுள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில், அது ஒரு பெரிய சந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
சீனா தவிர, இந்தியா அளவுக்குப் பெரிய சந்தை எதுவும் இல்லை. இதன் மூலம் பிரிட்டன் பல துறைகளில் பயனடையப் போகிறது. அதில் ஒன்று ஆட்டோமொபைல் துறை. அதில் பிரிட்டன் மிகவும் பயனடையும்” எனக் குறிப்பிட்டார்.
வேறு நாடு ஏதேனும் பாதிக்கப்படுமா?
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கி வைத்தார்.
அதன் காரணமாக, இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஷரத் கோஹ்லி நம்புகிறார்.
“டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரின் விளைவாக, உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் உள்ளது. அதனால் மற்ற நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா வழங்கும் அச்சுறுத்தல்களால், தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை, மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்று உலகின் பல நாடுகள் நம்புகின்றன” என்று அவர் கூறினார்.
இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா, சீனா இடையிலான வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஆனால் பிரிட்டன் உடனான வர்த்தகத்தில் சீனா இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஷரத் கோஹ்லி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “சீனா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்தியா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தைவிட இரு மடங்கு அதிகம். சீனாவில் இருந்து ஏராளமான மலிவு விலைப் பொருட்கள் பிரிட்டனுக்கு செல்கின்றன, அதில் ஆடைகளும் அடங்கும். ஆனால் இந்தியாவில் இருந்து ஆடைகள் மற்றும் காலணி பொருட்கள் பிரிட்டனுக்கு சென்றால், அவற்றுக்கு எந்த வரியும் இருக்காது. எனவே, சீனா கடுமையான சவாலை எதிர்கொள்ளப் போகிறது” என்று விளக்கினார்.
ஆனால், “இது இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், சீனா உடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு