9
வட இலண்டனில் உள்ள ப்ரிம்ரோஸ் ஹில் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேருக்கு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
21 வயதான ஃபின்பார் சல்லிவன், ஏப்ரல் 7ஆம் திகதி மாலை சுமார் 6.30 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், அலெக்சிஸ் பிடேஸ் (25) மற்றும் எர்னஸ்ட் போட்ங் (25) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
இதற்கு முன்பு, ஒலுவடமிலோலா ஒகுன்யாங்கின் (27) என்பவருக்கும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
மேலும், காலித் அப்துல்காதிர் என்பவர் மீது கடுமையான உடல் சேதம் விளைவித்தல், வன்முறை மற்றும் கத்தி வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் செல்லும் இந்த பகுதியில் சண்டை சம்பவம் நடந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஃபின்பார் சல்லிவன் குத்துக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், 20 வயதுகளில் இருக்கும் மற்றொருவர் அருகிலுள்ள ரீஜென்ட்ஸ் பார்க் வீதி பகுதியில் குத்துக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.