• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

பிள்ளையானின் சகாவான இனியபாரதி கைது! – Vanakkam London

Byadmin

Jul 7, 2025


பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினரே அவரைக் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனைக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்துக் கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் இனியபாரதியைக் குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவ தினமான இன்று காலை திருக்கோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்து அம்பாறைக்குக் கொண்டு சென்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை காலப் பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் பலர் கடத்தப்பட்டுக் காணாமல்போன சம்பவம் தொடர்பாகக் காணாமல்போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By admin