புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: குடிசை வீடு இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அந்த எண்ணம் 90 விழுக்காடு நிறைவேறியுள்ளது. கல் வீடுகள் கட்டப்பட்டதால், தீ விபத்துகள் புதுச்சேரியில் குறைந்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த மாநிலத்திலும் சிறப்புக்கூறு நிதி பட்டியலின மக்களுக்கு தனியாக ஒதுக்கவில்லை. பல ஆண்டுக்கு முன்பே புதுச்சேரியில் தான் சிறப்புக்கூறு நிதியை அரசு ஒதுக்கியது. வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை விட இந்த ஆண்டு ரூ.150 கோடி உயர்த்தி ரூ.525 கோடி ஒதுக்கியுள்ளோம்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல வீடு இருந்தால் அவர்களுக்கு மதிப்பு ஏற்பட்டு, வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயரும். பட்டிலின மக்களின் குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். அரசு பள்ளியிலும் பிள்ளைகள் படிக்க வேண்டும். விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கான நிதியை அரசு கொடுக்கும். இதுபோல் ரூ.65 கோடியை அரசு கொடுத்துள்ளது.
மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், செவிலியர் கல்லுாரிகள் என அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு தேவையான உயர்கல்வி கிடைக்கிறது. அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அனைத்து கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.
மனைப் பட்டா எந்த பாகுபாடும் இன்றி தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு வேலை வாய்ப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 5,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் 1,000 அரசு பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. இலவச மனைப் பட்டா முன்பு 400 சதுர அடி வழங்கப்பட்டது. இப்போது முதன்முதலில் 800 சதுர அடியில் இலவச மனைப் பட்டா வழங்கப்படுகிறது. இதில் அனைவரும் வீடு கட்ட வேண்டியது முக்கியம்.
பட்டியலின மக்கள் கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். விரைவில் அந்த ரூ.7 லட்சம் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒவ்வொரு திட்டத்திலும் உதவித்தொகை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்து அறிந்துகொள்ள சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் இந்தாண்டு வரவேற்கப்பட்டிருக்கின்றது. நிறைய இடங்களில் இலவச மனைப்பட்டா கிடைக்கவில்லை என்ற கோரிக்கை இருந்து கொண்டிருக்கிறது. இடம் கையகப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது.
இதனால் கிராமப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, எல்லோருக்கும் வீடு என்ற நிலையை அரசு உருவாக்கும். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படும். அதனுடன் 2 கிலோ கோதுமை கொடுக்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. அவை காலத்தோடு கிடைக்கிறது.
புதிதாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் முதியோர் தொகை பெறுவதற்காக இருக்கின்றது. 10 ஆயிரம் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதமே வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு அறிவித்த உதவித் தொகை கொடுக்கப்படும். விடுபட்டவர்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.