ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவின் அதானி குழுமத்திற்குச் சொந்தமான இந்தச் சுரங்கம், உள்ளூரில் பிராவஸ் என்ற பெயரில் இயங்குகிறது. இது வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில், சாலையின் குறுக்கே அமைந்துள்ளது.
ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், பிராவஸ் சுரங்க நிறுவனத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் இதை ஓர் ஆன்மீக நிலைப்பாடாகவும், கலாசாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகவும் கருதுகின்றனர்.
“என் நிலத்தில் ஒரு சுரங்கம் என் நாட்டை அழிக்க முயல்கிறது. அந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை” என்று கூறுகிறார் ஏட்ரியன்.
இவர்களுடைய போராட்டத்தின் மையத்தில் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இது வானவில் பாம்பு முண்டகுட்டாவால் உருவாக்கப்பட்ட புனித இடம் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் நம்புகின்றனர். பழங்குடிக் கதைகளில் நீர், நிலம் மற்றும் படைப்புடன் தொடர்புடைய சக்தி வாய்ந்த மூதாதையர் என முண்டகுட்டா கருதப்படுகிறார்.
ஹைட்ரோகார்பன் தடயங்கள்
தூங்கமபுல்லா நீரூற்றுகள், வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை கலிலி படுகையின் மேல் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றுதான் கலிலி படுகை. இது 247,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியைக் கொண்டுள்ளது.
மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், இந்த இடம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாதிக்கப்படக் கூடியது என்று கூறுகின்றனர்.
“நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன” என்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து வரும் கல்வியாளர் குர்ரெல் கூறுகிறார்.
“சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான எச்சரிக்கை இது.”
மேலும், “சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.
சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் மாதிரியாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பிராவஸ் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, ஆய்வின் ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகp பிரசாரம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டியது. ஆனால், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதானியின் பகுப்பாய்வை, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO) 2023இல் மதிப்பாய்வு செய்தது. இந்த மதிப்பாய்வு, நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. அதானி குழுமத்தின் மாதிரிகள், நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு “ஏற்றவை அல்ல” என்று அந்த மதிப்பாய்வு முடிவுகள் கூறுகின்றன.
கடந்த 2023இல், அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் கண்காணிப்புத் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அரசு அவர்களின் நிலத்தடி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்தது.
இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தரநிலைகளை முழுமையாகப் பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது.
“நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று பிராவஸ் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிளவுபட்ட சமூகம்
கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது.
ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தச் சுரங்கம் தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித நீர் ஆதாரங்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். பழங்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர் தாயகத்தை “நாடு” என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தச் சுரங்கம், தங்கள் உரிமைகளையும், கலாசாரத்தையும், நிலத்துடனான தொடர்பையும் புறக்கணிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
கடந்த 2007இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. பிரகடனம், “சுரங்கம் போன்ற நில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு முன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக உள்ளது.
கார்மைக்கேல் சுரங்கம், காலநிலை விவாதத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடக்கின்றன. அதே நேரம், உள்ளூர் சுரங்க சமூகங்கள் இதற்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன. குயின்ஸ்லாந்து அரசு, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கியது.
ஆஸ்திரேலியா, உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், ஆசிய-பசிபிக் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல பொருளாதாரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன.
சுரங்கத் தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக பிராவஸ் கூறுகிறது. ஆனால் மோசமான பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பத்திரிகையாளர் கிம் நுயென், கார்மைக்கேல் சுரங்கம் தொடர்பான செய்திகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். “பாதுகாப்பற்ற தூசி அளவுகளுக்கு மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறோம், தரமற்ற உள்கட்டமைப்பில் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறோம், எங்களுக்கு உள்ள கவலைகளைக் கூறும்போது, அச்சத்துடனேயே பணியிடச் சூழலை எதிர்கொள்கிறோம்” என்று அவரிடம் பேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
குயின்ஸ்லாந்தின் சுரங்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், 2019 முதல் 2024 வரை 875 பக்கங்கள் மதிப்புள்ள கடுமையான விபத்து அறிக்கைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், சுரங்கத்தில் நிகழும் சம்பவங்களின் விகிதம் “தொழில்துறை சராசரிகளுடன் ஒத்துப் போவதாகக்” கூறியது.
“எங்களிடம் பூஜ்ஜிய இறப்புp பதிவு உள்ளது. நாங்கள் உயர்வான தரநிலைகளைப் பராமரிக்கிறோம், அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கிறோம். மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடாமலோ அல்லது நேரிலோ குறைகளை எழுப்ப ஊக்குவிக்கிறோம். அவை உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன” என்று பிராவஸ் பதிலளித்தது.
மாநில அரசு, பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த பிறகு, 12 வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குடும்பங்களில் ஏழு குழுக்கள், சமூக நிதிக்கு ஈடாக அதானியுடன் நில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
“இது குடும்பங்களைப் பிளவு செய்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது பற்றி மிகவும் வேதனையாக உணர்கிறேன். ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் முன்னேறியிருப்பார்கள். நாங்கள் எங்களால் முடிந்தவற்றைச் செய்தோம்” என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக் எனும் பெண் கூறுகிறார்.
சிலர் இந்த நில ஒப்பந்தம் மிக உயர்ந்த விலை கொடுத்து வந்ததாக நம்புகின்றனர். “இந்த நாட்டில் சுரங்கம்தான் கடவுள். ஒரே ஒரு சுரங்கம் ஒரு முழு நாட்டையும் பிரித்துவிட்டது” என்கிறார் கோடி மெக்காவோய்.
“புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர்” என்று ஓர் அறிக்கையில் பிராவஸ் கூறியது.
நில உரிமை கோரிக்கை
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1915இல், குயின்ஸ்லாந்தின் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதித்தது. வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்கள், 1,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, பழங்குடி கலாசாரத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டது.
நிலத்துடனான நீடித்த தொடர்பை நிரூபித்தால், பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993இல், பூர்வீக உரிமைச் சட்டம் வழங்கியது. இதில் சுரங்கத் திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையும் அடங்கும்.
கடந்த 2004இல், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்தனர். இதன் மூலம், அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சலுகைகளை வழங்கியது. ஆனால், 2012 மற்றும் 2014இல் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது.
கடந்த 2021ஆம் ஆண்டு, 17 வருட நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) சமூகத்தின் பூர்வீக உரிமை கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்தார். அந்தத் தீர்ப்பால், அவர்கள் எதிர்கால சுரங்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளில் கலந்துகொள்வதற்கும், சுரங்கத் திட்டங்கள் தங்கள் நிலத்தைப் பாதிக்கும்போது இழப்பீடு பெறுவதற்குமான உரிமையை இழந்தனர். அதற்குக் காரணம், அவர்கள் நிலத்துடன் போதுமான தொடர்பு இருப்பதை சட்டரீதியாக நிரூபிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.
“ஒரு நீதிபதி இறுதியில், அந்தப் பகுதியில் பூர்வீக உரிமை இல்லை என்று தீர்மானித்தார். இப்போது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் ‘சிறப்பு அனுமதி’ கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று குயின்ஸ்லாந்து தெற்கு பூர்வீக உரிமை சேவையின் தலைவர் டிம் விஷார்ட் கூறினார்.
“இந்தக் கட்டமைப்பு நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தற்போது நம்மிடம் இருப்பது இதுதான்” என்றும் அவர் கூறுகிறார்.
தொடரும் சட்டப் போராட்டம்
ஏட்ரியன் பர்ரகுப்பா, குயின்ஸ்லாந்து உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு வழக்கைத் தொடர்கிறார். கார்மைக்கேல் சுரங்கம், தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித தலத்தை அச்சுறுத்துவதன் மூலம் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அவர் வாதிடுகிறார்.
இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது. இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது.
இதுவொரு முன்னுதாரண வழக்காக இருக்கும் என்று ஏட்ரியன் மற்றும் கோடியின் வழக்கறிஞர் அலிசன் ரோஸ் கூறுகிறார். “கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இது அரசுக்கு எதிராக ஏட்ரியன் தொடுக்கும் நான்காவது வழக்கு. இதில் (இலவச) வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி இவர் போராடுகிறார். முன்னதாக, ஒரு நீதிமன்ற வழக்கை எதிர்த்துப் போராடியதில், 680,000 டாலர் செலவானதன் காரணமாக பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தார்.
ஆனால் திவாலான போதும், நீதிமன்ற இழப்புகளைச் சந்தித்தபோதும், சமூகப் பிளவுகள் இருந்தபோதும், ஏட்ரியனும், அவரது மகன் கோடியும், அவர்களது குடும்பமும் மனம் தளரவில்லை.
“நாங்கள் தண்ணீரில் இருந்து வருகிறோம். தண்ணீர் இல்லாமல், நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நிலம் இல்லாமல், எங்களுக்கு எதுவுமே இல்லை” என்கிறார் ஏட்ரியன்.
இந்த மனித உரிமை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கோரியுள்ளது அரசு. அதன் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு