7
புலிகளின் குரல் நின்றது – ஆனால் அதன் ஓசை நிலைத்திருக்கும்: சத்தியா அவர்களின் மறைவு ஒரு வரலாற்றுப் பதிவாக
எழுதியவர்: ஈழத்து நிலவன்
“அவரது குரலில் ஒலித்த ஒவ்வொரு செய்தியும், எமது விடுதலைக் கனவின் துடிப்பாக நம்மை நெஞ்சத்தில் நிழலாய் தொடந்தது. அந்தக் குரலின் ஓசை இன்னும் எம்செவிகளில் வாழ்கின்றது.”
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் பாரிய பங்கு வகித்த, புலிகளின் குரல் வானொலியின் முதன்மை அறிவிப்பாளராகப் பணியாற்றிய சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) அவர்கள் மாரடைப்பால் காலமான செய்தி, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட புலிகளின் வானொலியின் முதலாவது ஒலிபரப்பில், “புலிகளின் குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று குரல்கொடுத்து வரலாற்றை தொடக்கமிட்டவர் இவரே.
அவர் வாசித்த ஒவ்வொரு செய்தியும், நமது விடுதலைப் போராட்டத்தின் உணர்வுகளை மக்கள் மனங்களில் ஊற்றியது. 1990 முதல் 2003 வரை புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றிய அவர், செய்திக்கு உரிய தூரத்தையும், அதன் தாக்கத்தையும், மக்கள் உணரக்கூடிய விதமாக குரலில் எடுத்துச் சொல்வதில் ஆசானாக விளங்கினார்.
வானொலி குரலின் பின்னணி: ஒரு குரல், ஒரு தேசத்தின் கனல்
புலிகளின் குரலில் ஒலித்த செய்திகள், வெறும் தகவல்கள் அல்ல. அவை ஒரு தேசத்தின் உயிர்வலி, போராட்டத்தின் உணர்வு, சமூக நீதிக்காகப் பரித்த இரத்தத்தின் கனல். இவற்றை மக்களிடம் எடுத்துச் சென்று புலம்பெயர்ந்தத் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை நிலைநிறுத்தியவர் சத்தியா.
நிதர்சனம் நிறுவனத்தின் தயாரிப்பான “விடுதலைத் தீப்பொறி” எனும் தலைவரின் நேர்காணல் நிகழ்ச்சியின் குரல் வழங்குநராகவும், தலைநிமிர்வு 50 என்ற ஆவணப்படம் உட்பட பல ஆவணங்களின் பிரதான குரலாகவும், அவர் பணியாற்றியுள்ள வரலாறு மறக்க முடியாதது.
அதோடு, “சமகால பார்வை” நிகழ்ச்சிக்கு தொடர்ச்சியாக குரல் வழங்கியவர், விவசாயக் கருப்பொருள்களைக் கொண்ட “மண்முற்றம்” நிகழ்ச்சியை எழுதி, தொகுத்து, குரலளித்தவர், மேலும் மக்களின் உணர்வுகளை நேரடியாக பதிவு செய்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” நிகழ்ச்சியையும் நிகழ்த்தியவர்.
“காலச்சக்கரம்” எனும் வரலாற்றுத் தொடரை மறைந்த கலைஞர் சங்கநாதன் அவர்களுடன் இணைந்து எழுதி, தயாரித்து, குரலளித்ததன் வழியாக, விடுதலைப் போரின் வரலாற்றை ஒலி வடிவில் நிலைநிறுத்திய முக்கிய செயற்பாட்டாளராக அவர் விளங்கினார்.
மாறாத பண்பும் – இடம் மாறினாலும் உறைபிறப்பாக இருந்தவர்
2003-ஆம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஓய்வுபெற்று, ஆங்கிலப் பகுதி நேர ஆசிரியராகவும் பின்னர் முழுநேர ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
இடப்பெயர்வுக்கு முன்பாக, யாழ்ப்பாணத்திலும், பின்னர் முள்ளியவளையில், புலிகளின் குரல் வானொலி நிலையத்தில் பணியாற்றியிருந்த போது, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் இரண்டு முறை நேரில் சந்தித்து, மதிப்பளிப்பைப் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்குச் சொந்தம். சமீபத்தில் விபத்து காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் காலமானார்.
மே 16, 2009 இரவு வரை, எமது செவிகளில் ஒலித்த “புலிகளின் குரல்”, இப்போது நிஜமாகவே நின்றுவிட்டது.
ஒரு குரல் மறைந்தது – ஒரு புரட்சி நிழலாய் தொடர்கிறது
சத்தியா அவர்களின் மறைவு, ஒரு ஊடகவியலாளர் இழப்பாக மட்டும் அல்ல. அவர் ஒரு செய்தியாளராக இல்லாது, ஒரு புரட்சி இயக்கத்தின் குரலாக, மக்கள் உள்ளங்களில் வாழ்ந்தவர்.
அவர் வாசித்த ஒவ்வொரு செய்தியும், ஒரு தேசத்தின் நினைவாக ஒலிக்கிறது. இந்தியத் தலைவர்கள், சர்வதேச வன்முறைகள், தமிழர்களின் பேரழிவுகள், அரசியல் மாற்றங்கள், அனைத்தையும் ஒரு எழுச்சிகரமான குரலில் மக்கள் செவிகளுக்குள் ஒலிக்கச் செய்தவர்.
முடிவுரை.
சத்தியா என்ற மனிதர் மறைந்தாலும், அவருடைய குரல் எங்கள் மனங்களில் தொடர்ந்து ஒலிக்கும். அந்த ஒலி, ஒரு விடுதலைக்காக கொட்டிய உழைப்பின் சத்தம். அந்த குரல் ஒரு போராளியின் நெஞ்சத் துடிப்பு. அந்த குரல், எப்போதும் “விடுதலை” என்பதற்கான மனக்கீதமாகவே இருக்கும். “குரல் நின்றது – கனல் தொடர்கிறது.”
எழுதியவர்: ஈழத்து நிலவன்
14/07/2025