• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

பெரியாறு அணையில் த.வெ.க. எம்.எல்.ஏ. ரீல்ஸ் எடுத்ததை பெரிதுபடுத்தாதீர்கள்- கேரள மந்திரி ‘கூல்’ பேட்டி

Byadmin

Aug 13, 2026


இது இந்தியா – பாகிஸ்தான் எல்லையா? நவீன டிஜிட்டல் காலத்தில் தெருவில் நடக்கும் சிறிய பிரச்சனை கூட இணையத்தில் பரவி வருகிறது. இரு மாநிலங்களும் இணக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14707 ஏக்கர் நிலங்கள் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக அணையில் இருந்து ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 8-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

த.வெ.க. எம்.எல்.ஏ. ஆய்வு

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் பெரியகுளம் த.வெ.க. எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் பங்கேற்றனர். அப்போது எம்.எல்.ஏ.வுடன் சென்ற சிலர் பெரியாறு புலிகள் காப்பக பகுதிக்குள் டிரோனை பறக்க விட்டு முல்லைப் பெரியாறு கால்வாய் மற்றும் வனப்பகுதிகளை படம் பிடித்தனர்.

பின்னர் இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வேகமாக பரவின. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி டிரோன் பறக்க விட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனால் இரு மாநிலங்கள் இடையே இப்பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக – கேரள எல்லையான குமுளியில் கேரள வனத்துறை சார்பில் பழங்குடியின மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பெரிதுபடுத்தாதீர்கள்

இந்நிகழ்ச்சியில் கேரள வனத்துறை அமைச்சர் சிபு பேபிஜான் பங்கேற்று பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

த.வெ.க. எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுடன் வந்த சிலர் முல்லைப்பெரியாறு அணையை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என கூறி விடமுடியாது. இது இந்தியா – பாகிஸ்தான் எல்லையா? நவீன டிஜிட்டல் காலத்தில் தெருவில் நடக்கும் சிறிய பிரச்சனை கூட இணையத்தில் பரவி வருகிறது. இரு மாநிலங்களும் இணக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. இதை ஒரு பிரச்சனையாக உருவாக்கி பெரிதுபடுத்த வேண்டாம். விட்டு விடுங்கள் என்று கூலாக பதில் அளித்தார்.

By admin