அரியலூர்: அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. இதை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைவழங்கி இருக்கிறார்.
எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவது பாஜகவின் கனவு என்று, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியிருக்கிறார்.
திமுகவின் வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் பல்வேறு புதிய கட்சிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் பாஜககளத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த தந்திரத்தை பாஜகவினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இவற்றை முறியடித்து திமுக வெற்றி பெறும்.
பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன பழனிசாமிதான், அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்கும்போது மவுனமாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து என்ன பேசப்போகிறார் என்று தெரியவில்லை? இவ்வாறு அமைச்சர் கூறினார்.