பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பரிந்துரை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன பரிந்துரை? ஆமதாபாத் விமான விபத்துக்கு அதுதான் காரணமா?
முதற்கட்ட அறிக்கை கூறுவது என்ன?
பட மூலாதாரம், UGC
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.
விமான நிலையத்தின் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 241 பேர் உள்பட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார்.
விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், இயக்க (RUN) நிலையில் இருந்து கட் ஆஃப் (CutOff) நிலைக்குச் சென்றதால், இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது தடைப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் இரு என்ஜின்களும் செயல்படாமல் போனதாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து பிற்பகல் 1.40 மணியளவில் நடந்துள்ள நிலையில், காலை 11.17 மணியில் இருந்து என்ன நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்பு விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் தகுதியானவர்களா என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. சுவாசப் பகுப்பாய்வு சோதனையில், அவர்கள் விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் எரிபொருள் மாதிரிகளும் திருப்திகரமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமானிகளின் அறையில், ‘ஏன் துண்டித்தீர்கள்? (எரிபொருள் சுவிட்ச்)’ என விமானி கேட்ட போது, ‘நான் அணைக்கவில்லை’ என்று மற்றொரு விமானி கூறியுள்ளார். ஆனால், அடுத்த சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானத்தில் இரண்டு என்ஜின்களின் கட் ஆஃப் நேரத்துக்கு இடையில் ஒரு விநாடி இடைவெளி இருந்துள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், வேகம் குறையத் தொடங்கியதாக விமான புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘திட்டமிட்டு செய்யவில்லை, ஆனால்?’
“ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட் ஆஃப் சுவிட்ச் தொடர்பாக விமானிகள் பேசியது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை” எனக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா.
“விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு மனநல ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை” என்பது முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அவர், “விமானம் கிளம்புவதற்கு முன்பு அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தாலும் எரிபொருள் உள்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வாய் விட்டுக் கூற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அசோக் ராஜா, “அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA)) ஒப்புதல் வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு போயிங் விமானத்தின் தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான சில பரிந்துரைகளை எஃப்ஏஏ வழங்கியுள்ளது” எனக் கூறுகிறார்.
2018 ஆம் ஆண்டு பரிந்துரை என்ன?
‘787 ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் கட் ஆஃப் வால்வுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் வரலாம்’ எனவும் அது சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஃப்ஏஏ பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அது கட்டாயம் என்பதாகக் குறிப்பிடாமல் பரிந்துரை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” எனக் கூறுகிறார் அசோக் ராஜா.
“இது விதிமீறல் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் போயிங் விமானம் தொடர்பான இந்தப் பரிந்துரையை செயல்படுத்தியிருக்கலாம்” எனக் கூறும் அசோக் ராஜா, “எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன” எனக் குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்ஏஏ (FAA) அளித்துள்ள பரிந்துரையில், போயிங் நிறுவனத்துக்கு விமானத்தை இயக்குகிறவர்களிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் லாக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (Flight deck) அமைக்கப்பட்டு, என்ஜினுக்கு எரிபொருளை வழங்கவும் துண்டிக்கவும் செய்ய விமானியால் கையாளப்படுகிறது. இதில் கவனக்குறைவு நேரிடுவதைத் தடுக்கும் வகையில் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாக்கிங் சிஸ்டம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்?
‘லாக்கிங் சிஸ்டம் சரிவர செயல்படாவிட்டால், ரன் மற்றும் கட் ஆஃப் நிலைகளுக்கு ஆகிய 2 நிலைகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை மாற்றலாம். இதில் கவனக்குறைவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால் விமானத்தின் என்ஜின் நிறுத்தப்படுவது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்’ என எஃப்ஏஏ எச்சரித்துள்ளது.
‘விமான உரிமையாளர்களும் அதனை இயக்கும் விமானிகளும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும்’ எனவும் எஃப்ஏஏ அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
‘ஒத்துப் போகும் அறிக்கை’
‘தரையில் விமானம் இருக்கும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை உயர்த்தாமல் (Lift) இரண்டு நிலைகளுக்கு இடையில் நகர்த்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். சுவிட்சை உயர்த்தாமல் நகர்த்த முடிந்தால் லாக்கிங் சிஸ்டம் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் என்பதால் சுவிட்சை மாற்ற வேண்டும்’ எனவும் எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.
இதனை மேற்காள் காட்டிப் பேசிய முன்னாள் விமானி அசோக் ராஜா, “இரண்டு விமானிகளுக்கு நடுவில் கட் ஆஃப் வால்வு இருக்கும். அது கைதவறி அணைக்கும் அளவுக்கு இருக்காது. அதற்கான வாய்ப்புகளே இல்லை” எனக் கூறுகிறார்.
“கடந்த காலங்களில் விமானத்தின் இயக்கம் முழுவதும் கைகளால் கையாளப்பட்டன. அதாவது நேரடியாக மெக்கானிக்கல் செயல்பாடு இருக்கும். தற்போது எலக்ட்ரானிக் முறையில் கையாளப்படுகின்றன” எனவும் அசோக் ராஜா குறிப்பிட்டார்.
எஃப்ஏஏ கூறிய பரிந்துரைகளுடன் விமான விபத்து தொடர்பான இந்திய விமான புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையும் ஒத்துப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘பரிந்துரை தான், கட்டாயம் இல்லை’
“எஃப்ஏஏ கூறிய அம்சங்களில் (Special Airworthiness Information Bulletins (SAIB) ‘கட்டாயம்’ என கூறாவிட்டால் அதை விமானங்களின் உரிமையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” என்கிறார், அசோக் ராஜா.
விமானத்தின் எலக்ட்ரிகல் வயர்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னிச்சையாக எரிபொருள் கட் ஆஃப் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும்போது முழு விவரங்களும் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.குருசாமி, “இரண்டு சுவிட்சுகளும் வெவ்வேறு மின் இணைப்புகள் மூலம் செயல்படும். அப்படித் தான் விமானம் வடிமைக்கப்பட்டிருக்கும். தவறுதலாக இதை அணைப்பதற்கு வாய்ப்பில்லை. இரண்டு என்ஜின்களுக்கும் தனித்தனி எரிபொருள் அமைப்புகள் உள்ளன” என்கிறார்.
“ஒன்று ஆஃப் செய்யப்பட்டாலும் மற்றொன்று கட் ஆஃப் ஆக வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறும் அவர், “இதற்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது முழு அறிக்கை வரும்போது தெரியவரும்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு