21
பிரதீபன் தீபச்செல்வன் வட இலங்கையின் போரால் பாதிக்கப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தவர். அவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியை முடித்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்ந்து, அதன் பின் சென்னை மதராஸ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். தொழில்முறையில் அவர் ஒரு ஆசிரியராக இருந்தாலும், இருபதுக்கும் மேலான ஆண்டுகளாக எழுத்துலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். “கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல வடிவங்களில் நான் எழுதுகிறேன். போரின் அனுபவங்கள், இழப்புகள், நினைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் என் எழுத்தின் மையமாக உள்ளன. அவைதான் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கின,” என்று அவர் கூறுகிறார்.
அவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் நடுகல் (Tombstone), பயங்கரவாதி (Terrorist), மற்றும் சயனைட் (Cyanide) ஆகியவை அடங்கும். இவை 2018 முதல் 2024 வரை எழுதப்பட்டவை. சமீபத்தில், குறைந்த செலவும் மேம்பட்ட அச்சுத் தரமும் காரணமாக, இந்த நூல்கள் தமிழ்நாட்டில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. அவரது கூற்றுப்படி, இந்நூல்கள் இலங்கையில், குறிப்பாக தமிழ் சமூகத்தில் பரவலாக வாசிக்கப்படுகின்றன.
மேலும் சமீபத்தில், 2008 முதல் 2024 வரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான தனது கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை ஒருங்கிணைத்து இரண்டு புதிய தொகுதிகளை அவர் தயாரித்துள்ளார். அவை, முன்பிருந்த நூல்களின் மறுபதிப்புகளுடன் சேர்த்து அச்சிடப்பட்டன. இந்த தொகுப்புகளில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டபோதிலும், இரண்டு நூல்கள் தற்போது சுங்கத்துறையால் தடுக்கப்பட்டுள்ளன. அவை எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் (Eluthaal Naan Yudhdham Seikiren) மற்றும் இப்போதும் இரண்டு நாடுகள் (Ippothum Inge Irandu Thesangal) எனப்படுகின்றன.
சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த நூல்களின் உள்ளடக்கம் “தேசிய ஒற்றுமைக்கு சேதம் விளைவிக்கக்கூடும்” என்ற கவலை காரணமாக அவை தற்காலிகமாக தடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கலை மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து அமைத்த இலக்கிய குழு, பயங்கரவாதி மற்றும் சயனைட் ஆகிய நூல்களை வெளியிட அனுமதி வழங்கியிருந்தாலும், மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்கள் மட்டும் தடுக்கப்பட்டுள்ளன. அவை சுங்கச் சட்டத்தின் பிரிவு 120க்கு உட்பட்ட தண்டனைக்குரிய உள்ளடக்கங்களை கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Ceylon Today ஊடகத்துடன் பேசிய தீபச்செல்வன், தடுக்கப்பட்ட நூல்களை வெளியிடுவதற்காக தாம் தொடர்ந்து போராடி வருவதாக கூறினார். மேலும், தனது முன்னைய படைப்புகள் அனைத்தும் கற்பனை அல்ல; வாழ்வில் அனுபவித்த உண்மைகளின் பிரதிபலிப்பாகும்—மன உளைச்சல்கள், அரசியல் நிலைகள் மற்றும் போருக்குப் பிந்தைய தமிழ் சமூகத்தின் வரலாற்று நினைவுகள் ஆகியவற்றை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.
“என் எழுத்தின் நோக்கம் மறைக்கப்பட்ட அல்லது பேசப்படாத உண்மைகளை பதிவுசெய்து, நினைவுகளை பாதுகாப்பதே,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது நூல்கள் குறித்து தனது பார்வைகளை Ceylon Today ஊடகத்துடன் பகிர்ந்துள்ளார்.
அந்த இரண்டு புதிய புத்தகங்களின் தலைப்புகள் என்ன?
இரண்டு நூல்கில் ஒன்று, ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன். அது என்னுடைய நேர்காணல் புத்தகம். அதில் இந்து ஆங்கில நாளிதழில் வெளியான எனது ஒரு பேட்டி சிலோன்டுடேயிலும் மறுபிறசுரம் செய்யப்பட்டது. அதேபோன்று கொழும்பு இந்தியா போன்ற இடங்களில் இருந்து சிங்களம் ஆங்கிலம் தமிழ் என பழமொழிகளில் பல நேர்காணல்கள் வெளியாகி இருந்தன. அவை யாவும் ஏற்கனவே வெளியாகிய நேர்காணல்கள். ஒரு போர் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று இலக்கிய பயணத்தில் ஈடுபடும் என்னுடைய அனுபவங்களை தான் எழுத்தால் நான் சுத்தம் செய்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறேன். மற்றவை என்னுடைய அரசியல் பத்தி கட்டுரைகள் அவையும் முக்கியமான இதழ்கள் பத்திரிகைகள் இணையதளங்களில் வெளியாகியதே. இவைகளில் தனிநாடு ஒன்றை நிறுவுகின்ற நோக்கிலோ வன்முறையை தூண்டும் நோக்கிலோ எந்த ஒரு எழுத்துக்களும் எழுதப்படவில்லை.
சுங்கத்தால் வைக்கப்பட்டுள்ள மொத்த அச்சிடப்பட்ட புத்தகங்கள் எத்தனை?
தற்போது என்னுடைய நூல்களில் எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் என்ற புத்தகத்தில் பிரதிகள் 150. இப்போதும் இங்கு இரண்டு தேசங்கள் என்ற புத்தகத்தின் பிரதிகள் எண்பதும் மொத்தமாக 230 புத்தகங்கள் சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு புத்தகங்களும் 2018, 2020 போன்ற உங்கள் பழைய புத்தகங்களின் கருப்பொருள்களிலிருந்து வேறுபட்டவையா?
இல்லை. என்னுடைய எழுத்துப் பயணத்தின் ஆரம்பத்திலிருந்து 2008 ஆம் ஆண்டிலிருந்து ஊடகங்களில் வெளியான நேர்காணல்கள் இவை. என்னுடைய படைப்புகள் சார்ந்தும் போர்ச்சூழலில் என்னுடைய தனிப்பட்ட வாழ்வுப் பயணம் சார்ந்தும் அனுபவங்கள் சார்ந்தும் இருக்கின்றன. இவை என்னுடைய படைப்புகளுக்கு மிக நெருக்கமானவை. எனது படைப்புகளைப் பற்றியவை என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளனின் அனுபவங்களையும் பயணங்களையும் பகிர்கின்ற நேர்காணல்களே.
உங்கள் பழைய புத்தகங்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகள் பற்றியவையா?
போருக்குள் பிறந்து அதன் வலிகளையும் அதன் பாதிப்புகளையும் உணர்ந்தவன் என்ற வகையில் எப்போதும் போருக்கு எதிரான ஒரு மனம் – ஒரு தவிப்பு என்னுடைய எழுத்துக்கள் முழுவதிலும் பரவி உள்ளன. வன்முறைகளை விரும்பாதவனாக அழிவுகளை விரும்பாதவனாக அமைதியையும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் விரும்புபவனாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி வருகிறேன்.
உங்கள் புத்தகங்கள் எதையாவது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளீர்களா?
என்னுடைய முதல் நாவலான நடுகல் சிங்களத்தில் ஜிஜி சரத் ஆனந்த் அவர்களினால் மொழி பெயர்க்கப்பட்டது. சிங்கள வாசகர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை அந்த நாவல் பெற்றது போரில் பாதிக்கப்பட்ட போரில் போராளியாக மகனை கொடுத்த தாயின் வலியை அவனின் நினைவுகளை தேடுகிற ஒரு தாயினதும் தம்பியினதும் குடும்பத்தினதும் கதை அது. அதேபோல அனுசா சிவலிங்கம் என்னுடைய முதலாவது கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூலும் பல பதிப்புகளை கண்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது என்னுடைய எழுத்துப்பயணம் எப்படியானது என்னுடைய எண்ணமும் என்னுடைய தவிப்பும் கனவு எப்படியானது என்பதற்கு என்னுடைய கவிதைகளே பதிலாக இருக்கின்றன.
இரண்டு புத்தகங்களையும் விடுவிக்க மாட்டோம் என சுங்கம் கூறுவதால், நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள்?
இது தொடர்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என என்னுடைய சட்டத்தரணிகள் உடன் ஆலோசித்து வருகிறேன். இங்கிருந்து இந்தியாவில் குறைந்த செலவில் புத்தகத்தை பதிப்பித்து அதை ஒரு தரமான பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒரு எழுத்தாளர் எடுக்கும் முயற்சி இது. இதனை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு எழுத்தாளன் கொடுக்கின்ற உழைப்பை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக உரிய தரப்புகளுடன் இந்த விடயத்தை தெளிவுபடுத்த நான் தயாராக இருக்கிறேன்.
உங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளீர்களா?
ஆம். அடுத்த கட்டமாக இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைக்கலாம் என எனது சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியை ஒரு ஆள் பாதிக்கப்பட்டவர்களின் வலியை மிகவும் உணர்ந்தவராக ஜனாதிபதி அனுரகுமார பேசிய பல பேச்சுக்களை நான் பார்த்திருக்கிறேன். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த விடயங்கள் பற்றி அவரும் அவரது கட்சியினரும் கடந்த காலத்தில் பேசியிருக்கிறார்கள் எனவே அவருக்கு நான் எழுதும் கடிதம் மிகவும் உரியும் வகையில் இருக்கும்.
அடிப்படையில் உங்கள் தொழில் என்ன? எழுத்தாளர் மட்டும்தானா?
நான் ஒரு எழுத்தாளனாக என்னுடைய பள்ளிப்படிப்பின் நிறைவில் இருந்து பயணித்து வருகிறேன் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் பயணித்து வருகிறேன் அத்துடன் நான் ஒரு பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன் எனக்கு கிடைக்கும் விடுமுறை காலங்கள் என்னுடைய பாடசாலைக்கு பணிக்கு அப்பால் கிடைக்கும் நேரங்களில் என் எழுத்து பணியை கவனித்து வருகிறேன் ஒரு ஆசிரியர் எழுத்தாளனாக இருப்பது கடினமான விடயம் அல்ல இரண்டும் நெருக்கமான பணிகள் ஆக்கத்திறன் மிக்க மாணவர்களை எழுத்தாளனாக இருக்கும் ஒரு ஆசிரியனால் உருவாக்க முடியும்.
இலங்கையில் உங்கள் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் பிறந்தது முதல் ஏதோ ஒரு வகையில் நெருக்கடியையும் துன்பத்தையும் அனுபவித்து வருகிறேன் என் என் குழந்தைப் பருவத்தில் துப்பாக்கி சத்தங்களுக்கு அஞ்சும் ஒரு குழந்தையாக உறக்கமின்றி இருந்திருக்கிறேன். பின்னர் விமானக் குண்டுகளுக்கு அஞ்சுகின்ற ஒரு சிறுவனாக பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்திருக்கிறேன். பின்னர் துப்பாக்கிகளுக்கு அஞ்சுகின்ற ஒரு பல்கலைக்கழக மாணவனாக நெருக்கடிகளை கண்டிருக்கிறேன். இப்போது என் பேனாக்களும் புத்தகங்களும் தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்ற உறக்கமற்ற அழுத்தம் நிறைந்த எழுத்தாளனாக என் நாட்களை கடந்து கொண்டிருக்கிறேன். நான் இதைச் சொல்வதில் மிகவும் வேதனை அடைகிறேன். இலங்கையில் அமைதியோடும் கௌரவத்தோடும் வாழ விரும்புகிற தமிழர்களின் நிலைமை என்றைக்கும் போராட்டமானதாக தான் இருக்கும்.
கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீறல் தீவிரமானது.. உலக பத்திரிகை சுதந்திர தினம் நெருங்கும் வேளையில் உங்கள் கருத்துகள் என்ன?
இலங்கையில் கடந்த காலத்தில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்காக குரல் கொடுத்த சிங்கள எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கூட நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. ஆனால் இன்றும் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் இதுதான் நிலைமை எனத் தொடர்கிறது. எதிர்க்கட்சிகளில் இருக்கும்போது பத்திரிகையாளர்களுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் போராடிவிட்டு ஆளும் கட்சியாக வருகின்ற பொழுது அதேபோல ஊடகங்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் அடக்குமுறைகளை பிரயோகிக்கிறார்கள். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத ஒரு நிலைமை ஊடக சுதந்திரத்தின் அனுபவமாக இருக்கிறது.
நன்றி – சிலேன் டுடே 26.04.2026