பட மூலாதாரம், Getty Images
இந்திய வரலாற்றில், 1781ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்டோ நோவா போருக்கு (Battle of Porto Novo) ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்த போர்டோ நோவா என்ற கடற்கரையோரப் பகுதிதான், இப்போது கடலூர் மாவட்டத்தின் ‘பரங்கிப்பேட்டை’ என அழைக்கப்படுகிறது.
1767 முதல் 1799 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளுக்கும், மைசூரின் ஆட்சியாளர்களுக்கும் இடையே ‘ஆங்கிலேய- மைசூர் போர்கள்’ எனும் தொடர் போர்கள் நான்கு முறை நடைபெற்றன. அதில் ஒரு பகுதியே இந்த போர்டோ நோவா போர். ஹைதர் அலியின் வீழ்ச்சியையும், தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் எழுச்சியையும் போர்டோ நோவா போர் குறித்தது என்றே கூறலாம்.
“பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி இந்தியாவில் குழப்பமான காலமாக இருந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என மூன்று தரப்புகளின் மோதலை அது கண்டது. அந்த காலகட்டத்தில் முகலாய சக்தி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, மராட்டியர்களின் சக்தி உச்சத்தில் இருந்தது, ஐரோப்பியர்கள் அப்போதுதான் முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்தியாவில் தங்களுக்கான ராஜ்யங்களை உருவாக்க விரும்பியவர்களுக்கு இந்தக் காலகட்டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது.” என்று ‘பிரிட்டிஷ் ரிலேஷன்ஸ் வித் ஹைதர் அலி’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் மறைந்த வரலாற்றிசிரியரான ஷேக் அலி.
இத்தகைய காலகட்டத்தில்தான் ஹைதர் அலி, கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தவிர்க்க முடியாத ‘சுல்தானாக’ வளர்ந்து வந்தார்.
ஹைதர் அலியின் பின்னணி
பட மூலாதாரம், Getty Images
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அப்போதைய மைசூர் மாகாணத்தில் ஒரு சாதாரண ராணுவ அதிகாரியின் மகனாகப் பிறந்தவர் ஹைதர் அலி. அந்த காலகட்டத்தில் மைசூருக்கு ராஜா என்பவர் இருந்தாலும், அதிகாரம் முழுவதும் நஞ்ச ராஜ் என்ற அமைச்சரிடம் இருந்தது.
“நஞ்ச ராஜிடம் சேர்ந்து, அவரின் நம்பிக்கைக்குரிய நபராக மாறிய ஹைதர் அலி, 1759ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு எதிரான ஒரு மைசூர் படைக்கு தலைமை தாங்கும் அளவுக்கு வளர்ந்தார். ஒரு கட்டத்தில், மைசூர் மாகாணத்தின் அதிகாரத்துவத்தில் நஞ்ச ராஜூக்கு மாற்றாக செயல்படக்கூடியவராக மாறினார்.” என ஜான் ராபர்ட்சன் ஹென்டர்சன் எழுதிய ‘தி காய்ன்ஸ் ஆப் ஹைதர் அலி அண்ட் திப்பு சுல்தான்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதர் அலி, படைத் தலைவராகப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு (1761), மீண்டும் மராட்டியர்கள் மைசூர் மீது படையெடுத்தனர். அதை வெற்றிகரமாக முறியடித்தார் ஹைதர் அலி. அதேபோல, ஹைதராபாத் நிஜாமுடன் தற்காலிகமாக ஒரு சமாதானப் போக்கை கடைபிடித்தார். பின்னர், 1766ஆம் ஆண்டு மலபார் பகுதியைக் கைப்பற்றினார். கொச்சி மற்றும் பாலக்காடு மன்னர்கள் ஹைதர் அலியின் படையிடம் சரணடைந்தனர்.
இந்தக் காலகட்டத்தில், ஹைதரின் வளர்ச்சியை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததற்கு காரணம், மைசூரைச் சுற்றி இருந்த அதிகார மையங்களின் போட்டி.
“மராட்டியர்கள் மைசூரைக் கைப்பற்றி, தங்கள் எல்லைகளுக்கு அருகில் வருவதை மெட்ராஸ் அரசாங்கம் (பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம்) விரும்பவில்லை. மறுபுறம், ஐரோப்பியர்கள் மைசூரைக் கடந்து ஆதிக்கம் செலுத்துவதை மராட்டியர்கள் விரும்பவில்லை. அதே சமயம், பிரிட்டிஷ் நிறுவனமோ அல்லது மராட்டியர்களோ மைசூரைக் கைப்பற்றிவிடக் கூடாது என ஹைதராபாத் நிஜாம் நினைத்தார்” என தனது நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றிசிரியர் ஷேக் அலி.
இப்படி பல்வேறு அதிகார மையங்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு வளர்ந்துவந்த ஹைதர் அலி, ஒருகட்டத்தில் (1766) மைசூரின் முழு ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
மைசூரின் ராஜாவாக இருந்த கிருஷ்ணராஜ உடையார் II, 1766ஆம் ஆண்டில் உயிரிழந்தார். கிருஷ்ண ராஜாவுக்குப் பிறகு அவரது மகன் ஆட்சிக்கு வந்தார், ஆனால் உண்மையில் மைசூர் மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் ஹைதர் அலியின் வசம் வந்தது.
மைசூர் குறிவைக்கப்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
“மைசூர் என்பது அப்போது தென்னிந்தியாவின் மிகவும் வளமான, அதிக வரி வசூலை அளிக்கக்கூடிய ஒரு ராஜ்யம். அதன் மீது பலருக்கும் கண் இருந்தது, முக்கியமாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதை அடைய நினைத்தது. அதற்கு ஒரு தடையாக ஹைதர் அலி மாறினார்.” என்கிறார் மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் தலைவர், இணைப் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
தொடர்ந்து பேசிய அவர், “மைசூருக்கும் பிரெஞ்சு அரசுக்கும் நல்ல உறவு இருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இருந்த உறவு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை மேலும் எரிச்சலூட்டியது.” என்கிறார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், முதலாம் ஆங்கிலேய- மைசூர் போருக்கு வித்திட்டது. 1767ஆம் ஆண்டு மராட்டியர்கள் மீண்டும் மைசூரை நோக்கி படையெடுத்தனர், அதே ஆண்டில் நிஜாமின் படைகளுடன் இணைந்து ஆங்கிலேயர்கள் களமிறங்கினர். இந்தப் போரின் நோக்கம், ஹைதர் அலியை சிறைபிடிக்க வேண்டும், மைசூரைக் கைப்பற்ற வேண்டும்.
ஆனால், ஹைதர் அலி, மராட்டியர்கள் மற்றும் நிஜாமுடன் பேச்சுவார்த்தை நடத்தி (ஈடாக பணம் மற்றும் நிலங்களை விட்டுக்கொடுத்து) அந்தப் படைகளை பின்வாங்கச் செய்தார். இதனால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தனித்து விடப்பட்டது. இருந்தும் இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் போர்கள் நடைபெற்றன.
1767–69 காலகட்டத்தில் நடைபெற்ற முதலாம் மைசூர் போரில் ஹைதர் அலி பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம், “முதலாம் மைசூர் போரில், ஹைதர் அலியின் சிறந்த ராணுவத் திறன் மட்டுமல்லாது, ராஜ்ய ரீதியிலான திறனும் வெளிப்பட்டது. இறுதியில், தனது பிரதான படையுடன் மெட்ராஸ் மாகாணத்திற்குள் நுழைந்த ஹைதர் அலியை எதிர்கொள்ள முடியாமல், கிழக்கிந்திய நிறுவனம் சமாதான ஒப்பந்தத்திற்கு முன்வந்தது.” என்று கூறுகிறார்.
முதல் மைசூர் போரின் இறுதியில் போடப்பட்ட ‘மெட்ராஸ் ஒப்பந்தத்தின்படி’, ஹைதர் இழந்த பகுதிகள் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். எதிரிகளால் (குறிப்பாக மராட்டியர்களால்) ஆபத்து எனும்போது, இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.
ஆனால், அதன் பிறகு நடந்த மைசூர் மீதான மராட்டிய படையெடுப்புகளுக்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் உதவவில்லை என்ற ஹைதர் அலியின் குற்றச்சாட்டும், பிரெஞ்சு அரசுடன் அவருக்கு இருந்த நெருக்கமும் இரண்டாவது ஆங்கிலேய- மைசூர் போருக்கு வித்திட்டது.
இரண்டாவது ஆங்கிலேய- மைசூர் போர்
பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸ்- பிரிட்டன் இடையே, 1778இல் சர்வதேச அளவில் போர்கள் தொடங்கியது. இந்தப் போர்களின் முதன்மையான நோக்கம், ‘வட அமெரிக்காவில் யார் ஆதிக்கம் செலுத்துவது?’ என்பதுதான், ஆனால் அதன் எதிரொலி இந்தியாவிலும் காணப்பட்டது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், பாண்டிச்சேரியின் மீது தாக்குதல் நடத்தி, பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றியது. ஆனால், மலபாரில் (கேரளா) இருந்த மாஹே எனும் பிரெஞ்சு பகுதியை தாக்க நினைத்தபோது, ஹைதர் அலி பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். காரணம், மலபார் அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதி.
தனது கட்டுப்பாட்டில் உள்ள மலபாரின் எல்லைக்குட்பட்ட மாஹே மீது தாக்குதல் நடத்தினால், பிரிட்டிஷின் ஆதரவு பெற்ற ஆற்காடு பகுதி மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹைதர் அலி எச்சரித்தார். அதையும் மீறி பிரிட்டிஷ் படைகள் மாஹேவைத் தாக்கியபோது, தனது படைகளை பாதுகாப்புக்கு அனுப்பிவைத்தார்.
ஆனால், இறுதியில் மாஹே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் வசமானது (1779, மார்ச்). இதைத் தொடர்ந்து, 1780இல் இரண்டாவது மைசூர்- ஆங்கிலேயப் போர் தொடங்கியது.
இந்தப் போருக்கு ஆங்கிலேயப் படைகள் தயாராக இருக்கவில்லை, ஆனால் ஹைதர் அலியின் நோக்கம் தெளிவாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
ஹைதரின் போர் உத்தி
“ஹைதர் தனது திட்டங்களை எந்த ரகசியமும் இல்லாமல் வெளிப்படையாக செயல்படுத்தினார். அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களின் பிரார்த்தனைகளோடு, தென்னிந்தியா அதுவரை கண்டிராத மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்துடன் பெங்களூருவை விட்டு வெளியேறினார் ஹைதர் அலி (1780, ஜூன்)” என ஜே. டபிள்யூ. ஃபோர்டெஸ்க்யூ எழுதிய ‘ஏ ஹிஸ்டரி ஆப் தி பிரிட்டிஷ் ஆர்மி’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாணியில் முழுமையாகப் பயிற்சி பெற்ற அவரது பிரதான காலாட்படையில், பதினைந்தாயிரம் பேர் இருந்தனர்; பிற பிரிவுகளையும் சேர்த்து மொத்த காலாட்படை வீரர்கள் ஐம்பத்தைந்தாயிரம் பேர் மற்றும் குதிரைப்படையினர் இருபத்தெட்டாயிரம் பேர், இன்னும் சில பிரிவுகள் என ஏறக்குறைய தொண்ணூறு ஆயிரம் வீரர்களும், அது தவிர சுமார் நானூறு பிரெஞ்சு வீரர்களும் அந்தப் படையில் இருந்தன என்றும் ஃபோர்டெஸ்க்யூ தனது நூலில் எழுதியுள்ளார்.
இந்தப் படை மெட்ராஸ் மாகாணத்தை அடையும்போது மூன்றாகப் பிரிந்தது. ஒன்று ஹைதர் அலி தலைமையில், மற்றொன்று கரீம் சாகிப் என்பவர் தலைமையில், மூன்றாவது திப்பு சுல்தான் தலைமையில் என வெவ்வேறு இடங்களில் இருக்கும் பிரிட்டிஷ் படைகளைத் தாக்குவதே நோக்கம்.
“சுருக்கமாகச் சொன்னால், ஹைதரின் படைகள் ஒரு தறிகெட்ட கும்பல் அல்ல, அது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ராணுவம்.” என ஃபோர்டெஸ்க்யூ விவரிக்கிறார்.
“ஹைதர் அலியின் படையில் எத்தனைப் பேர் இருந்தனர் என தெளிவாக கூற முடியாது. ஆனால், நிச்சயமாக மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைகளுடன் ஒப்பிடும்போது அது மிகப்பெரிய படை தான்” என்கிறார் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
“முதலில் சில இடங்களில் ஹைதர் அலியின் படை வெற்றி பெறத் தொடங்கியது. அதற்கு காரணம் படைபலம் மற்றும் ஹைதரின் உத்தி. ஒரு கிராமத்தில் எதிரிப்படை இருப்பது தெரிந்தால், அந்தக் கிராமத்தை சுற்றிவளைத்து, எதிரிப்படைகளுக்கான உணவு, நீர் மற்றும் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பார். பின்னர் அவர்களை பலவீனமடையச் செய்து தாக்குவார்” என்கிறார் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
இந்த ஆரம்பகட்ட வெற்றிகளில், 1780 செப்டம்பரில், பொள்ளிலூரில் நடந்த போரில் திப்பு சுல்தான் தலைமையிலான படை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைகளை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்ட சர் ஏர் கூட்
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் படை சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, அதன் தலைமை மாற்றப்பட்டது. சர் ஏர் கூட் என்பவர் அவசரமாக மெட்ராஸ் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவர் 1780, நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
“லெப்டினன்ட் ஜெனரல் ஏர் கூட் மிகவும் திறமை வாய்ந்தவராக கருதப்பட்டார். 1760இல் பிரிட்டிஷ் படைகளுக்கும் பிரெஞ்சு படைகளுக்கும் இடையே நடைபெற்ற வந்தவாசி போரில், அவர் வகுத்த வியூகம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது. எதிரிகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இழுத்து, வியூகம் அமைத்து மூன்று திசைகளில் இருந்து தாக்குவது அவரது உத்தி. அதையே அவர் போர்டோ நோவா போரிலும் செய்தார்.” என்கிறார் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
ஆனால் ஏர் கூட்டிடம் 7000 முதல் 8000 வீரர்கள் கொண்ட சிறிய படை தான் இருந்தது. அது மெட்ராஸ் மாகாணத்திலிருந்து, பாண்டிச்சேரி நோக்கி நகர்ந்தது. தன் பின்னால் ஹைதரின் படையை பாண்டிச்சேரிக்கு வரவைப்பதே ஏர் கூட்டின் நோக்கமாக இருந்தது. காரணம், அங்கு கடல் வழியாக உதவி பெற்று, ஹைதர் அலியை வீழ்த்தலாம் என்பதால்.
முன்னதாக, ஹைதரின் படைகள் பல ஆங்கிலேயக் கோட்டைகளை முற்றுகையிட்டு இருந்தன. செல்லும் வழியில், அவற்றை மீட்டது ஏர் கூட்டின் படை.
ஏர் கூட்டின் திட்டப்படியே ஹைதர் அலி அவரை பின்தொடர்ந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்றார். ஆனால், இங்கு தான் ஹைதர் அலி தனது போர் உத்தியைப் பயன்படுத்தினார்.
ஏர் கூட் படையிடம் உணவு, நீர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் குறைந்துகொண்டே வந்தன. பாண்டிச்சேரி செல்லும் பாதையில், கடல் வழியாக பொருட்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதே ஏர் கூட்டின் திட்டமாக இருந்தது.
ஆனால், ஹைதர் அலிக்கு உதவியாக ஒரு பிரெஞ்சு கப்பற்படை கடல் வழியாக பொருட்கள் வருவதைத் தடுத்தது. மறுபுறம், ஹைதர் அலி, மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆங்கிலேயப் படைக்கு பொருட்கள் கிடைக்காதவாறு, காஞ்சிபுரம் வழியாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஆனால், இது தெரியாமல் பாண்டிச்சேரி சென்ற ஏர் கூட் படை ஏமாந்துபோனது. வெறும் 3 நாட்கள் உணவு மட்டுமே கையிருப்பில் இருக்க, வேறு வழியின்றி கடலூர் நோக்கி நகர்ந்தனர். ஆனால், அங்கும் எந்த உணவும் கிடைக்கவில்லை.
பிரெஞ்சு கப்பற்படை எடுத்த தவறான முடிவு
ஒருபுறம் பிரெஞ்சு கப்பற்படை பாண்டிச்சேரி கடல்பகுதியை ஆக்கிரமித்து நின்றது, மறுபுறம் ஹைதர் அலி பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். எனவே ஏர் கூட், தனது படையினருடன் ஐந்து நாட்கள் கடலூரில் பதுங்கியிருந்தார்.
ஐந்து நாட்கள் கழித்து, பிரெஞ்சு கப்பற்படை ஒரு தவறான முடிவை எடுத்து கிழக்கு நோக்கி நகர்ந்து சென்றது. அமைதியாக பதுங்கி இருந்த ஏர் கூட்டின் படை நிம்மதி பெருமூச்சு விட்டது.
இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, “அந்த ஒரு அதிர்ஷ்டகரமான சம்பவம், ஏர் கூட்டின் ராணுவத்தை மட்டுமல்ல, இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசையும் காப்பாற்றியது” என ‘ஏ ஹிஸ்டரி ஆப் தி பிரிட்டிஷ் ஆர்மி’ நூலில் விவரிக்கிறார் ஜே. டபிள்யூ. ஃபோர்டெஸ்க்யூ.
ஏர் கூட்டின் படைகள் கடலூரில் பெரும் சேதத்தை சந்தித்திருக்கும் என்ற நினைப்பில், ஹைதர் அலி ஏர் கூட்டின் படையைத் துரத்துவதை நிறுத்திவிட்டு, ஆங்கிலேயப் பகுதிகளை முற்றுகையிடுவதைத் தொடர்ந்தார். தனது பிரதான படையுடன் தஞ்சைப் பகுதிக்கு வரி வசூலிக்கவும் பொருட்களை சேகரிக்கவும் சென்றார்.
அதன் பிறகு, ஐந்து மாதங்கள் கடலூரில் நிலைகொண்டு, தனது பிரிட்டிஷ் படையைச் சரி செய்வதிலும், போர் உத்திகளை வகுப்பதிலும் செலவிட்டார் ஏர் கூட். கூடுதலாக பிரிட்டிஷ் படைகள் கடல் வழியாக வந்துசேர, 1781 ஜூன் 16ஆம் தேதி, அவர் பரங்கிப்பேட்டை நோக்கி நகர்ந்தார். காரணம், பரங்கிப்பேட்டைக்கு மிக அருகில், ஹைதரின் படைப்பிரிவு நகர்ந்து வந்துகொண்டிருப்பதை உளவாளிகள் மூலம் அறிந்துகொண்டார்
ஆனால், ஹைதர் அலி இதை அறியவில்லை. மணல் குன்றுகள் நிறைந்த பகுதியை போருக்கு தேர்ந்தெடுத்தார் ஏர் கூட். அரை வட்ட வடிவில் படைகளைப் பிரித்து நிறுத்தி, ஹைதர் அலியின் படையைத் தாக்க திட்டமிட்டார். பல மாதங்கள் பொறுமையாக இருந்து திட்டங்களை வகுத்தது கைகொடுத்தது.
பரங்கிப்பேட்டை போரில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஜூலை 1, 1781 இரு படைகளும் பரங்கிப்பேட்டையில் நேருக்கு நேர் சந்தித்தனர்.
ஹைதர் படைகள் எதிர் தாக்குதல் நடத்தும்போது தனது படைக்கு பெரிய சேதம் ஏற்படக்கூடாது, ஆனால் தங்களது சிறு தாக்குதல் கூட அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் வியூகம் அமைத்திருந்தார் ஏர் கூட், அதற்கு ஏற்றார் போல் படைகளை மணல் குன்றுகள் மீது நிறுத்தியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ஹைதரின் படை பெரும் சேதத்தைச் சந்தித்தது.
ஏழு மணிநேரம் தொடர்ந்த போரில், தன் படைகள் சரிவதைக் கண்டு ஒரு கட்டத்தில் கொதித்துப் போயிருந்தார் ஹைதர். உடனிருந்த தலைவர்கள் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். முதலில் அவர் அதைக் கேட்கவில்லை. பிறகு அவருக்கு விருப்பமான உதவியாளர் ஒருவர், காலணிகளை எடுத்துக் கொடுத்து, ‘நாளை இவர்களை பார்த்துக்கொள்ளலாம், நீங்கள் குதிரையில் ஏறி கிளம்புங்கள்’ எனக் கூற, ஹைதர் அலி புறப்பட்டார். தொடர்ந்து அவரது படைகளும் பின்வாங்கின. (‘ஏ ஹிஸ்டரி ஆப் தி பிரிட்டிஷ் ஆர்மி’, பக்கம் 461)
“அந்தப் போரில் ஹைதரின் படையுடன் ஒப்பிடும்போது, ஏர் கூட்டின் படை மிகச்சிறியதே. ஆனால், தெளிவாக திட்டமிடப்பட்ட தாக்குதலால் ஹைதரின் படைகள் பரங்கிப்பேட்டையில் தோற்றுப் பின்வாங்கின. போரில் சூழலுக்கு ஏற்ப உத்திகளை மேம்படுத்திக் கொண்டே இருந்தார் கூட். நவீன ஆயுதப் படையை வழிநடத்துவதற்கான அவரது திறன் ஹைதர் படையை கலங்கடித்தது.” என்கிறார் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
பட மூலாதாரம், Getty Images
இந்த பரங்கிப்பேட்டை போர், இரண்டாம் ஆங்கிலேய- மைசூர் போரை ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக மாற்றியது. அதன் பிறகு, பொள்ளிலூரில் நடந்த இரண்டாவது போரிலும் பிரிட்டிஷ் படைகள் வெற்றிபெற்றன.
அதன்பிறகு, சோளிங்கர், ஆரணி என தொடர்ந்து ஹைதர் படைகள் தோல்வியைச் சந்தித்தன. வந்தவாசி, வேலூர் ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளால் மீட்கப்பட்டன. 1782-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹைதர் அலி உயிரிழந்தார். அவரது முதுகில் ஒரு பெரிய கட்டி இருந்தது. அதை வைத்தியத்தால் குணப்படுத்த முடியவில்லை.
இதனை அடுத்து உடனடியாக அவரது மகன் திப்பு சுல்தான் மைசூரின் சுல்தானாக்கப்பட்டார். அவர் போரைத் தொடர்ந்தார். இறுதியாக, 1784, மார்ச்சில் ‘மங்களூர் ஒப்பந்தம்’ மூலம் போர் முடிவுக்கு வந்தது. அதன்படி, கைப்பற்றிய பிரதேசங்கள் மற்றும் சிறைபிடித்த கைதிகளை திரும்ப ஒப்படைப்பது என்று இருதரப்பிலும் முடிவானது.
“பரங்கிப்பேட்டை போரில் ஏர் கூட் படைக்கு கிடைத்த வெற்றி, தென்னிந்தியாவில் குறிப்பாக மெட்ராஸ் மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் ‘இரண்டாம் ஆங்கில- மைசூர்’ போர்களில் இருந்து திப்பு சுல்தானுக்கு கிடைத்த அனுபவங்களே, ராக்கெட்டுகளை பயன்படுத்தி போர் புரியும் அளவுக்கு அவரை ஒரு சிறந்த வீரனாக்கியது என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் பேராசிரியர் ஆர். வெங்கடராமனுஜம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு