மத்திய கிழக்கில் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் வாசகங்களை ஏற்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
மத்திய கிழக்கில் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் கிட்டத்தட்ட கையெழுத்தாகும் சூழல் உருவாகி ிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தர்கள் இரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஈரானும் “இறுதியான, ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை” எட்டியுள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். மத்தியஸ்த முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வாரத்தில் மூன்று நாட்களாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கை முழு அளவிலான போருக்குள் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தி இருந்தன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி எக்ஸ் தள பதிவில், ஒரு ஒப்பந்தம் “இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை” என்று குறிப்பிட்டார். சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாகப் பலமுறை கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அராக்ச்சியின் பதிவை தனது சொந்த சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போர் மத்திய கிழக்கை உலுக்கியதுடன், பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.