பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில், மொழிப் பிரச்னையைச் சுற்றி ஒரு அரசியல் மோதல் நடைபெற்று வருகிறது. இந்தி மொழி தான் இந்த சர்ச்சையின் மையம்.
மகாராஷ்டிfஅரசின் ஒரு முடிவால் தொடங்கிய இந்த சர்ச்சை, வெறும் வார்த்தைப் போராக மட்டும் இல்லாமல், அரசியல் கட்சிகள் தெருக்களில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு சென்றது.
கடந்த வாரத்தில் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொழி பிரச்னை தொடர்பான குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியினரும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கட்சியான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியினரும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்றும், அஹிம்சை பாதையை ஏற்றுக்கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த இரு கட்சிகளும் கூறுகின்றன.
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, எந்தவிதமான வன்முறையையும் பொறுத்துக்கொள்ளாது என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஆனால் இந்த சம்பவங்கள் மும்பையைச் சார்ந்த தொழிலதிபர்களை கவலையடையச் செய்துள்ளன.
மொழித் தகராறில் வன்முறை சம்பவங்கள்
மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கற்பிக்கும் முடிவுக்கு எதிரான போராட்டம் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தது.
மொழி பிரச்னை முன்பே சூடுபிடித்திருந்த மும்பையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
முதலாவதாக, மும்பையை ஒட்டியுள்ள மீரா பயந்தரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தாக்குதல் சம்பவம் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டது. இதில், எம்என்எஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் கடை உரிமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது,
ஜூன் 29 அன்று, இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. ‘ஜோத்பூர் ஸ்வீட்ஸ் அண்ட் நம்கீன்’ உரிமையாளர் பாபுலால் சவுத்ரி 7 பேரால் தாக்கப்பட்டார் என குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அவர் மராத்தி மொழியில் பேச மறுத்தபோது, இந்த தாக்குதல் நடந்தது எனக் கூறப்படுகின்றது.
இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது, ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு தொழிலதிபர்கள் கோபத்தில் உள்ளனர். சம்பவம் நடந்த இரண்டாவது நாளில், தொழிலதிபர்கள் மீரா பயந்தரில் ஒரு நாள் பந்த் அறிவித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுக்கு எதிராக பேரணி நடத்தினர்.
மும்பையை ஒட்டியுள்ள தானேவிலும் இதேபோன்ற ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தது.
தானே ரயில் நிலையத்திற்கு வெளியே, கிரண் ஜாதவ் என்ற உள்ளூர் நபரை 3 பேர் தாக்கினர். இந்த சண்டை மொபைல் சார்ஜிங் தொடர்பாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கிலும், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை தாக்கியவர்களை கைது செய்தனர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் விரைவில் அவர்களை விடுவித்தனர். சிவசேனா (UBT) கட்சியைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்து காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
மராத்தி மற்றும் இந்தி மொழிகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த விஷயம் பரபரப்பை கிளப்பியபோது, சிவசேனா (UBT) தலைவரும் எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரே, “இந்த தகராறு மொபைல் சார்ஜ் செய்வது தொடர்பானது, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மொழி சாயம் பூசக்கூடாது” என்றார்.
“மகாராஷ்டிராவில் மராத்தி மொழியைப் பற்றி பெருமைப்படுவதில் தவறில்லை. ஆனால் மொழி காரணமாக யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மொழியின் பெயரால் யாராவது சண்டையிட்டால், அதுவும் பொறுத்துக் கொள்ளப்படாது. காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மராத்தியைப் பற்றி நாங்களும் பெருமைப்படுகிறோம், ஆனால் நாட்டின் வேறு எந்த மொழிக்கும் அநீதி இழைக்க முடியாது, இதையும் மனதில் கொள்ள வேண்டும்” என்று ஜூலை 4 ஆம் தேதி, மகாராஷ்டிர முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியிருந்தார்.
சுஷில் கேடியா என்ற தொழிலதிபர் ‘எக்ஸ்’ தளத்தில் ராஜ் தாக்கரே பற்றி பதிவிட்டிருந்தார்.
“ராஜ் தாக்கரே… மும்பையில் 30 வருடங்களாக வாழ்ந்த பிறகும், என்னால் மராத்தி மொழியை சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களின் மோசமான நடத்தையின் காரணமாக, உங்களைப் போன்றவர்கள் மராத்தியை பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கும் வரை, நான் மராத்தியைக் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்துள்ளேன்” என்று சுஷில் கேடியா அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் எம்என்எஸ் தொண்டர்களிடமிருந்து எதிர்வினை எழுந்தது. ஜூலை 5 ஆம் தேதி, சுஷில் கேடியாவின் அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன, இதற்காக மும்பை காவல்துறை 5 எம்என்எஸ் தொண்டர்களை கைது செய்துள்ளது. இதன் பின்னர், சுஷில் கேடியா சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு தனது பதிவை வாபஸ் பெற்றார்.
‘வெளியில் இருந்து வந்தாலும் நாங்கள் மராத்தியை நேசிக்கிறோம்’
பட மூலாதாரம், FB/PRADNYA DAYA PAWAR
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஆனால் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளைப் பேசும் மக்களும் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.
வணிகம் அல்லது வேலைவாய்ப்புக்காக இங்கு குடியேறிய அத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை இப்போது இங்கு அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மும்பையின் குர்லாவில் வசிக்கும் ஹஸ்தி ஜெயின், ஒரு பட்டயக் கணக்காளர் மற்றும் தொழிலதிபர்.
“இங்கே உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மொழியை அடிப்படையாகக் கொண்டவை. இதுதான் வரலாறு. எல்லோரும் தங்கள் மாநிலத்தை நேசிக்கிறார்கள், மும்பையில் எல்லோரும் மராத்தியை விரும்புகிறார்கள். அதில் எந்த விவாதமும் இல்லை.
ஆனால் அனைவருக்கும் மராத்தி தெரியாது. பல வணிகக் குடும்பங்கள் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ளன, எனவே அவர்களால் மராத்தியைத் தெளிவாகப் பேச முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக முயற்சி செய்கிறார்கள். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் இந்தியர்கள். இதுபோன்ற விஷயங்கள், குறிப்பாக வணிக சமூகத்தில் மக்களிடையே பயத்தை உருவாக்குகின்றன” என்கிறார் ஹஸ்தி ஜெயின்.
லலித் ஜெயின் பல வருடங்களாக மும்பையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். தற்போது மொழி தொடர்பாக ஒரு சர்ச்சை இருந்தாலும், மும்பைக்கு இது ஒரு புதிய விஷயம் அல்ல என்று அவர் கருதுகிறார்.
“நான் இங்கே தான் பிறந்தேன். பிறந்ததிலிருந்தே மராத்தி நன்றாகப் பேசுவேன். குடும்பத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் மராத்தி தெரியும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் மராத்தி தெரியாதவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதுபோன்ற பதற்றமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மும்பையில் என்ன நடந்ததோ அந்தச் சூழல் ஒரு சில நாட்கள்தான் நீடிக்கும். இங்கு எல்லாம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்கிறார் லலித் ஜெயின்.
இந்த வன்முறைக்கு மும்பையின் வணிக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளன.
மும்பை சில்லறை வர்த்தகர்கள் நலச் சங்கத்தின் தலைவரான வீரேன் ஷா, “மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வணிகம் செய்ய மராத்தி தெரிந்திருப்பதும் பேசுவதும் அவசியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எந்தவொரு தொழிலதிபரையோ அல்லது கடைக்காரரையோ மிரட்ட யாருக்கும் உரிமை இல்லை. ஒரு கடைக்காரரை அவர் ஒரு மொழியில் பேசவில்லை என்பதற்காக அடிப்பது சட்டத்திற்கு எதிரானது. இதை நாங்கள் எதிர்க்கிறோம், மேலும் வீடியோவில் எல்லாம் தெளிவாகத் தெரிந்த பிறகும், அரசாங்கம் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது?” என்றார்.
மராத்தி இயக்கத்துடன் தொடர்புடைய எழுத்தாளர்களும் மராத்தி மற்றும் இந்தி தொடர்பாக எழும் சூழ்நிலை குறித்து கவலைப்படுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களால் ஒரு மொழியின் கல்வி தொடர்பான பிரச்னை, தேவையற்ற அரசியலாக மாறுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இத்தகைய வன்முறையால் மனவேதனை அடைந்துள்ள எழுத்தாளர் பிரக்யா தயா பவார், அதனை எதிர்க்கிறார். மொழி இயக்கம் தொடர்பான வன்முறையை அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கண்டித்துள்ளார்.
“மகாராஷ்டிராவில் வளர்ந்து வரும் மராத்தி மொழி இயக்கத்தில் மிக முக்கியமான விஷயம், முதல் வகுப்பிலிருந்தே ‘மூன்றாம் மொழி’ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது குறித்து நாம் அனைவரும் அறிவோம். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர், நாங்களும் அதை எதிர்க்கிறோம். ஆனால் இந்தி பேசுபவர்கள் மீதான வன்முறையால் இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் பாதிக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அது நடக்கக்கூடாது” என்று பிரக்யா தயா பவார் பிபிசியிடம் கூறினார்.
சமீபத்திய சர்ச்சைக்கான காரணம்
மாநில அரசின் கல்வித் துறை, பள்ளிகளில் முதலாம் வகுப்பில், இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க முடிவு செய்தபோது இந்தப் பிரச்னை தொடங்கியது.
இதுவரை, மாநிலத்தில் முதலாம் வகுப்பிலிருந்து மராத்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.
இந்த முடிவு வெளியானவுடன், மகாராஷ்டிராவில் அரசியல் களம் சூடுபிடித்தது. தென் மாநிலங்களைப் போலவே, இந்தி மொழி தொடர்பாக இங்கும் எப்போதும் எதிர்ப்பு அரசியல் இருந்தே வந்துள்ளது.
சிவசேனா அல்லது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் எப்போதும் இதை எதிர்த்து வருகின்றன. இந்தி என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எதிராக அரசியல் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சர்ச்சை தொடங்கியவுடன், மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையில் ‘மும்மொழிக் கொள்கை’ , அதாவது முதல் வகுப்பிலிருந்தே மூன்று மொழிகளைக் கற்பிப்பதற்கான ஏற்பாடு இருப்பதாக அரசாங்கம் முதலில் கூறியது.
பின்னர் மொழியியல் மற்றும் கல்வி வல்லுநர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல் வகுப்பு குழந்தைகளுக்கு இது எளிதானது அல்ல என்று கூறினர்.
சிவசேனா (UBT) அல்லது எம்என்எஸ் போன்ற கட்சிகள் இதை எதிர்த்தது மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓர் இயக்கத்தைத் தொடங்கின.
இதன் பின்னர், மாநில அரசு ஒரு படி பின்வாங்கி, கட்டாயமாக இந்தி கற்பிக்க வேண்டும் என்ற முடிவை ரத்து செய்து, சில மாணவர்கள் மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்யலாம் என்று கூறியது.
ஆனால் இதுவும் போராட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, அதனைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியது.
இந்த மொழிப் பிரச்னை மகாராஷ்டிர அரசியலில் ஒரு முக்கியமான சூழலை உருவாகியுள்ளது. 2009 முதல் ஒருவருக்கொருவர் எதிராக அரசியல் செய்து வரும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, மொழி இயக்கத்திற்காக ஒன்றிணைவதாக அறிவித்தனர். ஜூலை 5 ஆம் தேதி, அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு முன்னணியை அறிவித்தனர்.
தாக்கரே சகோதரர்களின் பேரணிக்கு முன்னதாக, ஜூன் 29 அன்று, போராட்ட சூழலைக் கருத்தில் கொண்டு, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல் வகுப்பிலிருந்து ‘மூன்றாம் மொழி’ கற்பிக்கும் மாநில அரசின் முடிவை வாபஸ் பெற்று, இதுகுறித்து ஆய்வு செய்ய நரேந்திர ஜாதவ் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
ஆனால் மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மொழி அரசியலின் தாக்கம் தெருக்களிலும் காணப்பட்டது, மராத்தி தவிர பிற மொழிகளைப் பேசும் மக்கள் தாக்கப்பட்டனர்.
ஜூலை 5 ஆம் தேதி, உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மாநில அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் இயக்கத்திற்காக மும்பையில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர்.
இதில், “இந்த சிறிய சர்ச்சைக்கு மராத்தி மற்றும் பிற மொழிகளின் சாயம் கொடுக்கப்பட்டது. இப்போது நாங்கள் வியாபாரிகளை அடித்தோம் என்று கூறப்படும். ஒரு பெரிய பிரச்னை உருவாக்கப்படும். ஆனால் யாரையும் அடிக்காதீர்கள். பிற மொழிகள் பேசும் மக்களுடனோ அல்லது குஜராத்தியர்களுடனோ எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை” என்று ராஜ் தாக்கரே கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு