தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் சிறு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி தனித்துவம் பெற்று வருகிறது. இம்மாவட்ட கடற்கரை பகுதிகளை ஒட்டியே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழையகாயல் பகுதியில் சிர்கோனியம் தொழிற்சாலை, கல்லாமொழி பகுதியில் நிலக்கரி இறங்குதளம், அனல்மின் நிலையம், குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல்வேறு முக்கிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது புதிதாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் சிறு துறைமுகம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர், பனையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்ட ம் சிலம்பிமங்கலம், மயிலாடு துறை மாவட்டம் வானகிரி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, குமரி மாவட்டம் கன்னியாகுமரி ஆகிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிறு வர்த்தக துறைமுகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகங்களை முதலீட்டாளர்களுக்கு 30 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட கால குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மணப்பாட்டில் சிறு துறைமுகம் அமைக்க மீனவர்கள் மத்தியில் க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தென்னிந்தியாவின் கோவா என்றழைக்கப்படும் இந்த பகுதியில் சிறு துறைமுகம் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மணப்பாடு மீன் ஏலக்கூடத்தில் வைத்து ஊர்நலக்கமிட்டி தலைவர் கிளைட்டன் தலைமையில் மீனவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மீனவர்களிடம் எவ்வித கருத்துகளும் கேட்டகாமல் அரசு முடிவு எடுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. துறைமுகம் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது என்றும், இத்திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மணப்பாடு ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் கூறும்போது, ”ஏற்கெனவே மணப்பாட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலைய பணிக்கென கடலுக்குள் 8.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டு ள்ளதால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மணப்பாட்டில் துறைமுகம் அமைத்தால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க கூடிய சூழல் உருவாகும். எனவே துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்தி இந்த திட்டத்தை தடுப்போம்” என்றனர்.